பாகிஸ்தானின் தந்தை ஜின்னாவின் மகள் தீனா அன்புப் பஞ்சத்தை எதிர்கொண்டது ஏன்?

  • ஷீலா ரெட்டி
  • பிபிசிக்காக
தீனா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

வலதுபுறம் தீனா, ஜின்னா (நடுவில்) மற்றும் இடதுபுறம் ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா

முகமது அலி ஜின்னா மற்றும் ருட்டி பெடிட்டின் ஒரே மகள் தீனா வாடியா. பார்சி குடும்பத்தை சேர்ந்தவர் ருட்டி, ஜின்னா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். தீனா பிறந்தபோது, ஜின்னா தம்பதிகளின் மணவாழ்க்கை சுமூகமாக இல்லை.

தீனா பிறந்தபோதே பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. குழந்தையுடன் செலவிட தாயுக்கோ, தந்தைக்கோ நேரமில்லை. தந்தை அரசியலிலும், தாய் மனவேதனையிலும் தனித்தனி தீவாகிப் போனார்கள்.

சீர்திருத்தங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கருத்துகளை முன்வைப்பதற்காக லண்டன் சென்ற ஜின்னா, கூடவே தனது கர்ப்பிணி மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தார். அங்கு 1919 ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவில் தீனா பிறந்தார்.

ஜின்னா தம்பதிகளுக்கிடையே மன வேற்றுமை நிலவிய நேரம் அது. ஜின்னாவின் நெருங்கியத் தோழி சரோஜினி நாயுடு, லண்டனில் பிரசவித்த ருட்டியை பார்த்தபிறகு இவ்வாறு கூறினார், "பலவீனமான காற்றாடியைப் போல் ருட்டி இருக்கிறாள்… அவள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவில்லை...."

தீனா பிறந்து இரண்டு மாதங்கள் ஆனபிறகு, ஜின்னா குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்தார். மும்பையில் வசித்த அவர்களின் வீட்டில் இருந்த வேலைக்காரர்களின் மேற்பார்வையில் தீனா வளர்ந்தார். பெற்றோர் இருவரும் இருவேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கினார்கள்.

ஜின்னா அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். ருட்டியோ ஹைதராபாதில் இருந்த தோழியில் வீட்டிற்கு சென்றுவிட்டார். பெற்ற மகளை வேலைக்காரர்களிடம் விட்டுச் சென்ற ருட்டி, தன்னுடைய செல்லப்பிராணியான நாயை விட்டு பிரிய மனமில்லாமல் கூடவே அழைத்துச் சென்றார்!

ஜின்னாவுடன் மனமுறிவு ஏற்பட்டாலும், மணமுறிவு ஏற்படாததற்கு முன்பே தனது ஒரே குழந்தையை உதாசீனப்படுத்தினார் ருட்டி. பச்சிளம் குழந்தையை தனித்து விட்டு வந்த ருட்டியை பார்த்து அவரது நெருங்கிய தோழி ஆச்சரியமடைந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சரோஜினி நாயுடு

ஆறு ஆண்டுகள் பெயரிடப்படவில்லை

சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா, தனது சகோதரிக்கு எழுதியுள்ள கடித்ததில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார், "ருட்டியை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. மற்றவர்கள் சொல்வதுபோல் அவளை என்னால் குறைகூறமுடியவிலை. ஆனால், அந்த குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ருட்டி மீது வெறுப்பே மேலோங்குகிறது".

தங்கள் குழந்தையை வேலைக்காரர்களின் பராமரிப்பில் ஜின்னாவும் ருட்டியும் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டாலும், அவ்வப்போது சரோஜினி நாயுடு குழந்தையை சென்று பார்த்து வருவார்.

1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரோஜினி நாயுடு பத்மஜாவுக்கு எழுதியது இது, "இன்று மாலை ஜின்னாவின் மகளை பார்க்கச் சென்றிருந்தேன். வேலைக்காரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஜின்னாவும், ருட்டியும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்கள்".

"அந்த குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பாவமாக இருக்கிறது. ருட்டியை அடித்துவிடலாமா என்று கோபம் தோன்றுகிறது."

ஆறு வயதாகும் வரை தங்களது ஒரே மகளுக்கு பெயர் வைக்கக்கூட ஜின்னா தம்பதிகளுக்கு தோன்றவில்லையா அல்லது நேரம் இல்லையா என்று தெரியவில்லை.

சரோஜினி நாயுடுவின் மகள் லீலாமணி ஆக்ஸ்போர்டில் இருந்து வீட்டுக்கு வந்தபோது ஜின்னாவின் வீட்டிற்கு சென்றார். குழந்தைக்கு பெயரிடப்படவில்லை என்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை என்றும் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், PAKISTAN NATIONAL ARCHIVE

தாயின் மரணம் கொடுத்த புதிய வாழ்க்கை

சரோஜினி நாயுடுவின் மகள் லீலாமணி இவ்வாறு எழுதுகிறார், "ஒரு மணி நேரம் அந்த ஆறு வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். கிளம்பும்போது என்னை போகவிடாமல் அழுதபடியே காலைக் கட்டிக்கொண்டாள்."

சென்னையின் தியோஸோஃபிகல் சொசைட்டி ஸ்கூலில் தீனாவை சேர்க்கலாம் என்று சொன்னபோதுதான், ருட்டி தனது மகளை பற்றிய அக்கறையை முதன்முதலாக வெளியிட்டார்.

காணொளிக் குறிப்பு,

உணவின்றி பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

மகளை பள்ளியில் சேர்க்கும் ருட்டியின் திட்டத்தை ஜின்னா நிராகரித்தார். அந்த பள்ளியைப் பற்றி அவருக்கு பெரிய மதிப்பு எதுவும் இருக்கவில்லை.

ஜின்னா-ருட்டியின் திருமண பந்தம் முடிவுக்கு வந்த ஓராண்டில் அதாவது 1929ஆம் ஆண்டில் ருட்டி இறந்துபோனார். அதன்பிறகுதான் அன்பு என்ற அத்தியாயத்தையே தீனா பார்க்கமுடிந்தது.

அது ருட்டியின் தாயும், தீனாவின் தாய்வழி பாட்டியுமான லேடி பெடிட். அவர் தன் மகள் ருட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, பேத்தியின் துர்பாக்கியமான வாழ்க்கையையும் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும், எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தார். பேத்தியை பார்க்க பேராவல் கொண்டிருந்த பாட்டிக்கு, மகளின் மரணத்திற்கு பிறகே அந்த பாக்கியம் கிடைத்தது.

பட மூலாதாரம், KHWAJA RAZI HAIDER

படக்குறிப்பு,

க்வாஜா ரஜி அகமதின் புத்தகம்

பாட்டியின் பரிபூரண அன்பு

பேத்தியை ஏன் பாட்டியால் பார்க்கமுடியவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதே. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மகள் ருட்டி, தன்னைவிட 24 வயது மூத்தவரான ஜின்னாவுடன் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பிறந்த வீட்டினருடன் ருட்டியின் உறவு துண்டிக்கப்பட்டது.

தன் பேத்தி, அனாதை குழந்தையைவிட மோசமான நிலையில் இருப்பதாக, சரோஜினி நாயுவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது லேடி பெடிட் வருத்தப்படுவாராம்.

ருட்டி, ஜின்னாவிடம் இருந்து பிரிந்தபோது, பேத்தியின்மீது பாட்டியின் பரிதாபம் அதிகரித்தது. தீனாவை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என முடிவு செய்தார் லேடி பெடிட்.

காணொளிக் குறிப்பு,

அதிகரித்து வரும் யானை, மனித மோதல்கள்

தாய்வழி பாட்டியிடம் இருந்து கிடைத்த அன்பு, ஜின்னாவின் ஒரே மகளை தனது பெயருடன் தாய்வழி குடும்பத்தின் பெயரை இணைக்கும் முடிவை எடுக்கச்செய்தது.

தன்னை தீனா என்று அழைப்பதையே ஜின்னாவின் மகள் விரும்பினார். அதற்கு காரணம் லேடி பெடிட்டின் பெயரின் முதலில் வருவது தீனா என்பதே.

ருட்டியின் அகால மரணம் அவரது பெற்றோர்களை உடைந்து போகச்செய்தது. ஆனால், பேத்தியுடன் நெருங்கச் செய்தது.

அதன்பிறகுதான் அன்பென்ற வார்த்தைக்கு தீனா உண்மையான அர்த்தத்தை புரிந்துக்கொண்டார்.

பட மூலாதாரம், PAKISTAN NATIONAL ARCHIVE

ஜின்னாவின் முதல் தலையீடு

ஜின்னா எப்போதுமே மகளிடம் தூரத்து உறவினரைப்போலவே விலகியே இருந்தார். ஆனால், தன்னுடைய சகோதரி ஃபாத்திமாவின் எதிர்ப்பையும் ஆட்சேபணைகளையும் மீறி தீனாவின் செலவுகளுக்கு பணம் அனுப்பினார்.

ஆனால் மகளின் வாழ்க்கையில் எப்போதுமே தலையிடாவிட்டாலும், ஒரேயொரு முறை மட்டுமே தலையிடவிரும்பினார். அந்த சந்தர்பம் தீனாவின் திருமணமாக இருந்தது காலச்சக்கரத்தின் சுற்றோ என்று நினைக்கும்படி செய்தது.

ஜவுளி ஆலைகளின் முதலாளியான வாடியா, தீனாவுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், அவர் முஸ்லிம் இல்லை என்பதாலும், அரசியல்ரீதியாக தலைகுனிய வேண்டியிருக்கும் என்பதாலும் ஜின்னா மறுப்பு தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு,

வன்முறைக்கு நடுவே ஒரு வர்ணஜாலம்

இதே, ருட்டியை காதல் மணம் புரிந்தபோது, ஜின்னாவின் நண்பரும், ருட்டியின் தந்தையுமான தின்ஷா பெடிட் மறுப்பு தெரிவித்தார்.

ருட்டி மேஜராகும்வரை காத்திருந்து பிறகு திருமணம் செய்துக்கொண்டார் ஜின்னா. இப்போது மகளின் திருமணத்திற்கு தடை சொன்னார் ஜின்னா.

காரணம் இப்போது, இரு நாடுகள் என்ற சித்தாந்தத்தை முன்வைத்திருந்தார் முகமது அலி ஜின்னா.

தீனா, வாடியாவை திருமணம் செய்துக் கொண்டால் உறவுகளை துண்டித்துக் கொள்வதாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அப்பாவின் அச்சுறுத்தலை அச்சப்படாமல் எதிர்கொண்ட தீனா, பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டார். வாடியாவுடன் திருமணம் நடைபெறும் வரையில், பாட்டியின் வீட்டிலேயே தங்கியிருந்தார் தீனா.

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு,

தீனாவின் மகன் நுஸ்லீ வாடியா

தந்தையை சந்திக்க முயற்சி

திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள்வரை தந்தைக்கும் மகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லை. இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்ட பிறகோ, ஜின்னா முன்பிருந்ததைவிட மகளிடம் இருந்து அதிகம் விலகிவிட்டார்.

எப்போதாவது தீனாவுக்கு கடிதம் எழுதும் ஜின்னா, பெரும்பாலும் தீனாவை புறக்கணித்தார்.

பெற்றோர்களுடனான உறவு சுமூகமானதாக இல்லாவிட்டாலும், தந்தையை சந்திப்பதற்கு அதிக முயற்சிகளை மேற்கொண்டார் தீனா.

ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமாவின் எதிர்ப்பையும் மீறி, தந்தையை சந்திக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் என்பது தீனாவின் விடாமுயற்சியையும், தைரியத்தையும் சொல்ல போதுமானது.

ஜின்னா இறக்கும் தருவாயில் இருந்தபோது, தீனாவுக்கு விசா மறுக்கப்பட்டது. ஜின்னாவின் மறைவிற்கு பிறகு, அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தீனாவுக்கு விசா வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜின்னாவின் கல்லறை

2004 ஆம் ஆண்டு, மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தீனா பாகிஸ்தானுக்கு தனது இரண்டாவது பயணத்தை மேற்கொண்டார். இதுவே அவர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட இறுதிப் பயணமாகவும் அமைந்தது.

"எந்த உதவியும் இல்லாமல் எனது தந்தை உருவாக்கிய நாட்டில் இருப்பது 'சோகமான மற்றும் அற்புதமான தருணம்'" என்று ஜின்னாவின் கல்லறையில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் தீனா குறிப்பிட்டுள்ளார்,

தனது 'தந்தையின் பாகிஸ்தான்' இல் இருந்து மூன்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பினார் மகள் தீனா. அதில் ஒன்று சிறுமியாக இருந்தபோது, தந்தை மற்றும் அத்தையுடன் தீனா இருக்கும் புகைப்படம்.

அடுத்தது, அழகான தனது அம்மாவின் புகைப்படம், மூன்றாவது தட்டச்சுப்பொறியுடன் ஜின்னா இருக்கும் புகைப்படம்.

இந்த மூன்று படங்களும் அவர்களுடைய கடந்த காலத்தின் எச்சங்களாக எஞ்சியிருந்தவை.

('மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா- த மேரேஜ் ஷுக் இண்டியா' (Mr and Mrs Jinnah the Marriage that shook India) என்ற புத்தகத்தை எழுதியவர் ஷீலா ரெட்டி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :