ஜிம்பாப்வே அதிபருக்கு எதிராக ட்வீட்: அமெரிக்க பெண் கைது

முகாபே

பட மூலாதாரம், Reuters

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை அவமதிக்கும் வகையிலான ட்விட்டர் பதிவிட்ட அமெரிக்க பெண் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மார்த்தா ஓ`டோனோவன் என்ற 25 வயதாகும் அந்த பெண், அதிபரை, `சுயநலமானவர் மற்றும் நோயாளி` என குறிப்பிட்டதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளதை மறுக்கிறார்.

அவர் மீது, அதிபரை அவமதித்தது மற்றும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான திட்டமிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில், கடந்த மாதம், சைபர் குற்றங்கள் தொடர்பான புதிய அமைச்சகம் அமைக்கப்பட்டது முதல், இது போன்ற வழக்கு பதிவு செய்யப்படுவது, இதுவே முதல்முறை.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான திட்டமிடுதல் என்ற குற்றச்சாட்டிற்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

மகம்பா டி.வி என்ற இணைதள ஒளிபரப்பு சேவையை நடத்தி வரும், மார்த்தா, `ஹராரேவில் உள்ள அவரின் இல்லத்தில் அதிகாலையில் நடந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டார்` என ஜிம்பாப்வே மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணிற்காக வாதாடும் வழக்கறிஞரான ஒபே ஷவா, அப்பெண் தனது ட்விட்டர் பதிவில், `நாங்கள் சுயநலம் கொண்ட, நோயாளியால் முன்னெடுத்து செல்லப்படுகிறோம்` என பதிவிட்டதாக, காவல்துறை குற்றம் சாட்டுகிறது என கூறியுள்ளார்.

அக்டோபர் 11ஆம் தேதி போடப்பட்டுள்ள அந்த பதிவோடு ஒரு சித்திரமும் உள்ளது. அதில், ஒருவர் வடிகுழாயை பயன்படுத்துவது போலவும், அதனோடு அதிபரின் புகைப்படம் உள்ளது போலவும், அப் புகைப்படத்தில் மத்தியில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது போலவும் உள்ளது.

ஜிம்பாப்வேவில் உள்ள அமெரிக்க தூதரகம், உடனடியாக இது குறித்த கருத்து தெரிவிக்கவில்லை.

மார்த்தா காவல்துறையிடம் அளித்துள்ள அறிக்கையில், `தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்க்க் கூடியவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை` என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையை ராய்ட்டஸ் மற்றும் ஏ.பி செய்தி நிறுவனங்கள் பார்த்துள்ளன.

ஜிம்பாப்வே அரசால், சைபர் பாதுகாப்பு, அச்சுறுத்தலை கண்டறிதல் மற்றும் மட்டுப்படுத்துதல் உள்ளிட்டவறிற்காக கடந்த மாதம் அமைச்சகம் உருவாக்கப்பட்ட பிறகு, நடந்துள்ள `முதல் ட்விட்டர் தொடர்பான கைது` என ஜிம்பாப்வேவின் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக வலைதள பயன்பாட்டாளர்களை நசுக்கும், அரசின் நடவடிக்கையாகவே இந்த புதிய அமைச்சகம் கொண்டுவரப்பட்டுள்ளது என்கின்றனர் விமர்சகர்கள்.

`இந்த கைது, பேச்சுரிமையை நசுக்கும், ஜிம்பாப்வே அரசின் தரம் தாழ்ந்த புதிய அத்தியாயத்தின் துவக்கம், அதன் புதிய போர்க்களம் சமூக வலதளங்கள்` என்கிறார் அம்னெஸ்டி இண்டர்நேஷனலின், பிராந்திய இணை இயக்குநர், மியூலாயா.

93 வயதாகும் முகாபே, கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.

கடந்த மாதம், ஜிம்பாப்வேவில் மனித உரிமை மீறல்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்ததால், உலக சுகாதார அமைப்பால், முகாபேவிற்கு அளிக்கப்பட்டிருந்த, நல்லெண்ண தூதுவர் பதவியை, அந்த அமைப்பு திரும்ப பெற்றுக்கொண்டது.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :