வட கொரியா பிரச்சனையை ஆசிய பயணத்தின் போது தீர்ப்பாரா டிரம்ப்?

அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், AFP

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளில், மிகவும் நீண்ட ஆசிய பயணம் மேற்கொள்ள உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவார்.

அணு ஆயுத திட்டம் மற்றும் ஏவுகணைகள் சோதனை குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே சொற்போர் நடக்கும் இந்த நிலையில், இப்பயணம் நடைபெறுகிறது.

வடகொரியா குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கும்படி, சீனாவை கேட்டுவரும் நிலையில், இந்த முறை, இது குறித்து தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் டிரம்ப் கரம் கோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் ஹவாய்க்கு சென்ற அதிபர், அங்கு அமெரிக்க பசிபிக் கமாண்ட்டின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இரண்டாம் உலக போரிற்கு அமெரிக்காவை இழுத்த, பேர்ல் துறைமுக தாக்குதலின் நினைவு இடமான யு.எஸ்.எஸ் அரிசோனாவின் நினைவு இடத்தையும் அவர் பார்க்கவுள்ளார்.

ஹவாயில் இருந்து, அவரும், அவரின் மனைவியும் ஜப்பான் பின்பு, தென் கொரியாவிற்கு செல்வார்கள்.

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் சோதனை குறித்து இருநாடுகளுக்கு இடையே கடுமையான சொற்போர் உள்ளது. வடக்கு மற்றும் தென் கொரியாவின் எல்லையில் உள்ள இராணுவமயமாக்கப்பட்ட இடத்திற்கு, அதிபர் டிரம்ப் செல்ல மாட்டார் என இந்த வார துவக்கத்தில் கூறப்பட்டது.

இருந்தபோதும், தெற்கு சியோலின், ஹம்ப்ரேஸைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வளாகத்திற்கு அவர் செல்லவுள்ளார்.

வியட்நாமில், டான்நாங்கில் நடைபெறவுள்ள ஆசிய- பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்பதோடு, ஹானோய்க்கும் செல்லவுள்ளார்.

கடைசியாக, பிலிபெயின்ஸின் மணிலாவில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கிறார்.

கடைசியாக, ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் 1991ஆம் ஆண்டின் இறுதியில் இத்தகைய ஆசிய பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் ஜப்பானில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் மயங்கி விழுந்தார்.

டிரம்பின் பயண அட்டவணை

நவம்பர் 5, ஞாயிறு - ஜப்பானிற்கு செல்கிறார். பிரதமர் அபே மற்றும் கோல்ஃப் வீரர் ஹிடேகி மாட்சோயாமாயுடன் கசுமிகாசக்கி அரங்கில், கோல்ஃப் விளையாடுகிறார். பிரதமர் அபேவுடன் இருதரப்பு சந்திப்பும் உள்ளது.

நவம்பர் 7, செவ்வாய் - தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் பேச்சுவார்த்தை. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

நவம்பர் 8, புதன் - அதிபர் ஜின்பிங்குடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சீனா செல்கிறார்.

நவம்பர் 11, சனி - வியட்நாம் அதிபர் சுன் டைய் குவாங் மற்றும் பிற தலைவர்களுடனான சந்திப்பிற்காக, ஹனோய் செல்கிறார்.

நவம்பர் 12,ஞாயிறு - தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின், 50ஆவது ஆண்டு விழாவின் இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க, பிலிப்பைன்ஸின் மனிலாவிற்கு செல்கிறார்.

நவம்பர் 13, திங்கள் - மணிலாவில் நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதோடு, அந்நாட்டு அதிபர் ரோட்ரீகோ டுடர்ட்டேவையும் சந்தித்து பேசுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :