டிரம்ப் `வெற்றுத்தனமானவர்` -முன்னாள் அதிபர் புஷ் கோபம்

ஜார்ஜ் புஷ்

பட மூலாதாரம், Getty Images

குடியரசு கட்சியை சேர்ந்த, அமெரிக்காவில் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் சீனியர், அதிபர் டிரம்ப்பை, `வெற்றுத்தனமானவர்` என்று பொருள்படும், `பிளோஹார்ட்` என்று குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்ததையும் உறுதி செய்துள்ளார்.

`டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், நானே குடியரசு கட்சியை சேர்ந்த கடைசி அதிபராக இருப்பேனோ` என்று வருத்தம் கொள்வதாக, அவரின் மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.

`அதிபராக இருப்பது என்றால் என்னவென்று அவருக்கு தெரியவில்லை` என்றார் அவர்.

`தி லாஸ்ட் ரிப்ப்பிளிக்கன்ஸ்` என்ற புத்தகத்தில் இவர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் அமெரிக்க ஊடக நிறுவனங்களால், வெளியிடப்பட்டுள்ளன.

`பிளோஹார்ட்` என்பது பொதுவாக ஒருவரை அவமானப்படுத்தும் வார்த்தையாகவே பொருள்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது.

1989 முதல் 1993 வரை அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் சீனியர், `எனக்கு அவரை பிடிக்கவில்லை. அவரைப்பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், அவர் ஒரு வெற்றுத்தனமானவர் என்பது எனக்கு தெரியும். அவர் தலைவராக உள்ளதில் எனக்கு எந்த உற்சாகமும் இல்லை` என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த புத்தகத்தின் ஆசிரியரிடம் அவர் கூறுகையில், தான் என்ற ஒருவகையான அகங்காரம் கொண்டிருந்ததால் தான், அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டார் என்று தான் உணர்வதாக கூறியுள்ளார் என்று, அமெரிக்க ஊடகங்களான, சி.என்.என் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகியவை குறிப்பிட்டுள்ளன.

ஜார்ஜ் டபிள்யூ புஷ் அவரின் செயல்பாடு பற்றி குறிப்பாக தெரிவிக்கையில், `அதிபராக இருப்பதென்றால் என்னவென்று தெரியவில்லை`. மேலும், `நீங்கள் உங்களின் கோபங்களை சுயநலமாக பயன்படுத்திகொள்ளலாம், தூண்டிவிடலாம் அல்லது அவற்றை சமாளிக்க யோசனைகளுடன் வரலாம்` என்றார்.

அவரின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், புதிய அதிபரை குறித்து விமர்சிக்கும் வகையில் பேசியதாக, கடந்த அக்டோபர் மாதம், ஜார்ஜ் டபிள்யூ புஷ் பேசிய உரை பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

2016ஆம் ஆண்டு தேர்தலில் இந்த இரு முன்னாள் அதிபர்களுமே, டிரம்ப்பை ஆதரிக்கவில்லை.

ஜார்ஜ் புஷ் சீனியர், ஹிலாரிக்கு வாக்களித்ததாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஜார்ஜ் டபிள்யூ புஷ், தனது வாக்கெடுப்பு பெட்டியில் எதையும் நிரப்பாமல் விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்திற்கான தலைப்பு, அதிபர் தேர்தலின் போது, ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆற்றிய உரையிலிருந்து கிடைத்தது என்றார் மார்க்.

ஒபாமாவிற்கு முன்பு அதிபராக இருந்ததால், ` நானே குடியரசு கட்சியின் கடைசி அதிபராகி விடுவேனோ என்று பயப்படுகிறேன்` என அவர் தெரிவித்ததாக புத்தக ஆசிரியர் மார்க் தெரிவிக்கிறார்.

`குடியரசு கட்சி மிக கடினமான சூழலை சந்தித்து வந்துகொண்டு இருந்த போது, ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஆகிறார் என்பதல்ல விஷயம். இரண்டு புஷ்களும் வெறுத்த அனைத்தையும் கொண்ட டிரம்ப் அந்த பதவிக்காக உள்ளார்` என்பது தான் என்று மார்க் சி.என்.என் தொலைக்காட்சியிட்ம தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஊடக செயலாளரான சாரா சாண்டர்ஸ், முன்னாள் அதிபர்களின் கருத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

`வாழ்நாள் முழுவதும், சிறப்பான விருப்பங்களை கொண்ட ஒரு அரசியல்வாதியை தேர்வு செய்வதை விடுத்து, அமெரிக்க மக்கள், நேர்மறையான, நிஜமான, மாற்றங்களை கொண்டுவரக்கூடிய ஒரு வெளியாளை தேர்வு செய்துள்ளனர் ` என்று கூறியுள்ளார்.

`தொடர்ந்து தசாப்தங்களாக நடைபெறும் விலை உயர்ந்த தவறுகளை கவனத்தில் கொண்டு இருந்தால், மக்களை விட அரசியலை முதல் விஷயமாக பார்க்கும் ஓர் அரசியல்வாதியை மக்கள் தேர்வு செய்து இருப்பார்கள்` என்றார் அவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :