"இன்னுமா சொல்லணும்... நான் வருவேனா மாட்டேனான்னு" : கமலஹாசன்

கமலஹாசன் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கமலஹாசன்

சென்னை கேளம்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தனது பிறந்தநாள் மற்றும் நற்பணி இயக்க விழாவில் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய கமலஹாசன், "இன்னுமா சொல்லணும்... நான் வருவேனா மாட்டேனான்னு. நாம முடிவு பண்ணிட்டோம்ல அவ்ளோதான்." என்று பேசினார்.

நிகழ்வில் ரசிகர்களிடம் விவாதித்த கமல், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லியதாக நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்மன்ற நிர்வாகி தரும சரவணன் பிபிசிதமிழிடம் கூறினார்.

தமிழகத்தில் நல்லவர்கள் எல்லாம் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். நாம் வழக்கமான அரசியல் செய்யக் கூடாது. முறையான அரசியல் பயிற்சி ரசிகர்களுக்கு அளிக்கப் போகிறேன், துறை வல்லுனர்கள் அதனை அளிப்பார்கள். மேலும், கட்சி தொடங்குவதற்கு பணம் தேவை என்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நற்பணி இயக்கத்தை என் ரசிகர்கள்தான் நடத்தி வருகிறார்கள் என்று கமல் நிகழ்வில் பேசியதாக தரும சரவணன் தெரிவித்தார்.

அவர்கள் இத்தனை ஆண்டுகளில் ஏறத்தாழ 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பார்கள். அவர்கள் உண்மையான வள்ளல்கள். அவர்கள் கட்சிக்கான தேவைகளை பார்த்துக் கொள்வார்கள் என்று கமல் நிகழ்வில் கூறியதாக தரும சரவணன் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption நிகழ்வில் பங்கேற்ற நீர் செயற்பாட்டாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன்

கமல் தமது கருத்துகளை தெரிவிப்பதற்காகவும், கட்சிகாக திரட்டும் பணத்தை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிப்பதற்காகவும் ஒரு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த செயலி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7- ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் நீர் செயற்பாட்டாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் பலருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்