உறவு முறிய காரணமான ஆண் மலட்டுத்தன்மை

மாட் தம்பதி

மாட் லீரி சொல்கிறார் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கண்டறிந்தபின் எனக்கு போதுமான உதவிகள் கிடைக்கவில்லை. இதுதான் என்னுடைய நீண்டகால உறவு முறிய காரணமாக அமைந்தது.

கருவுறுதிறனில் சிக்கல் உடைய ஆண்களுக்கு அதிக ஆதரவும் உதவியும் தேவை என்று மாட் இப்போது நினைக்கிறார்.

"எனக்குதான் வேண்டியபோது எந்த உதவியும் கிடைக்கவில்லை." என்று அவர் கூறுகிறார்.

இருபத்தி ஆறு வயதாகும் மாட் சொல்கிறார், "நான் என்னுடைய முன்னாள் மனைவி பெத்தனியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருந்தேன். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அப்போதுதான், நான் மலட்டுத்தன்மை உடையவன் என்று எனக்கு சொல்லப்பட்டது."

"தம்பதி குழந்தை பெற்று கொள்ள இயலாதபோது, ஆணின் தேவைகள் ஊதாசீனப்படுத்தப்படுகின்றன" என்று லண்டனில் உள்ள ஃபெர்டிலிடி நெட்வொர்க் தொண்டு நிறுவனம் கூறுகிறது.

யார்க் பகுதியைச் சேர்ந்த மாட் மூன்று ஆண்டுகளாக பெத்தனி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்திருக்கிறார். கரு உருவாகாத காரணத்தினால் அவர்கள் மருத்துவர்கள் உதவியை நாடி இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு யாரிடமிருந்தும் எந்த முறையான உதவியும் கிடைக்கவில்லை.

"என்னிடம் எந்த குறையும் இல்லை என்று முதலில் சொல்லப்பட்டது" என்கிறார் மாட்.

"பின் செயற்கை கருத்தரித்தல் குறித்து ஆலோசனை பெறுவதற்காக நாங்கள் பணம் செலுத்தினோம். அங்கு எங்களிடம் குறை இருப்பதாக கூறப்பட்டது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது."

தன்னுடைய விந்தணுவின் அமைப்பிலும் அதன் இயக்கத்திலும் குறை இருக்கிறது என்கிறார் மாட்.

ஏற்கெனவே 1000 பவுண்டுகள் செயற்கை கருத்தரித்தல் குறித்து ஆலோசனைக்கு செலவிடப்பட்டதால், இந்த தம்பதி தங்களது கருவுறுதல் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்க தேசிய சுகாதார சேவை நிறுவனத்திடம் பண உதவிக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

ஆனால் , பெத்தனிக்கு 23 வயதே ஆவதால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மாட் கூறுகிறார்.

மாட் சொல்கிறார், "நான் இதனை சமாளிக்க எவ்வளவோ போராடினேன்."

"நான் என்னுடைய இணைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதனை என்னால் வழங்க முடியவில்லை. இதனால், நான் எனக்குள் மகிழ்வற்று தவித்தேன்."

மாட் மேலும் சொல்கிறார், எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நான் கைவிடபட்டதாக உணர்ந்தேன். எனக்கு என்ன செய்ய வேண்டுமென்றும் தெரிந்திருக்கவில்லை.

இது எனக்கு மன அழுத்தத்தை தந்தது. நான் எங்கு சென்று எவரிடம் உதவியை நாடினாலும், யாரும் எனக்கு உதவ தயாராக இல்லை.

பெத்தனி இவ்வாறாக என்னிடம் கூறினார், நமக்கு தேசிய சுகாதார சேவை நிறுவனம் உதவி செய்யுமென்ற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் அனைவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.

செயற்கையாக கருவுறுவதற்கு பிறருடைய விந்தணுவை பயன்படுத்த மாட் விரும்பவில்லை.

இந்த சூழ்நிலையின் காரணமாக எங்களது உறவு ஒரு முடிவுக்கு வந்தது என்று அவர்கள் இருவரும் கூறுகிறார்கள். அவர்கள் இருவரும் பிரிந்து, அவரவர் வழியில் அவர்கள் சென்றுவிட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images

செயற்கை கருத்தறித்தல் சிகிச்சையின் போதும், சிகிச்சைக்கு பின்பும் முறையான ஆலோசனை வழங்கப்பட வேண்டுமென்று தேசிய சுகாதார சேவை நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பரிந்துரைக்கின்றன.

ஆனால் மாட், "தேசிய சுகாதார மையம் அதிகளவில் ஆலோசனையும், அதுபோல நிதி உதவியும் கருவுறுதலில் பிரச்சனை உள்ள தம்பதிகள் செயற்கை கருவுறுதல் சிகிச்சை பெற வழங்க வேண்டும்" என்கிறார்.

நான் எப்போதும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம் உடையவனாக இருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஒருநாள் அது நிகழும் என்கிறார் நம்பிக்கையாக.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :