பாரடைஸ் பேப்பர்ஸ்: பெரும் செல்வந்தர்கள் வரிச்சலுகையை பயன்படுத்தும் ரகசியம் வெளியீடு

பட மூலாதாரம், EPA
வரிச்சலுகையை பயன்படுத்தி பிரிட்டிஷ் அரசியின் தனியார் எஸ்டேட் உள்ளிட்ட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரும் செல்வந்தர்கள் எவ்வாறு வெளிநாடுகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த விவரங்கள் பெருமளவில் கசிந்துள்ள புதிய நிதி ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட ஒரு ரஷ்ய நிறுவனத்தில் டிரம்பின் வர்த்தக செயலாளருக்கு பங்குகள் உள்ளதும் இதில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பாரடைஸ் பேப்பர்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த நிதி ஆவண கசிவு 13.4 மில்லியன் ஆவணங்களை கொண்டது, பெரும்பாலும் இவை வெளிநாடுகளில் உள்ள ஒரு முன்னணி நிதி நிறுவனத்தை சேர்ந்தவை ஆகும்.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்து வரும் கிட்டத்தட்ட 100 ஊடக குழுக்களில் பிபிசி பனோரமாவும் ஒரு பகுதியாக உள்ளது.
கடந்த ஆண்டில் பனாமா ஆவணங்கள் கசிவு வெளியான நிலையில், அந்த ஆவணங்களை ஜெர்மன் செய்தித்தாளான சூட்டைச்சே சைடூங் பெற்றுள்ளது. இந்த ஆவண விசாரணையை புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ஐசிஐஜே) மேற்பார்வை செய்ய அழைப்பு விடுத்தது. இந்த ஆவணங்கள் தொடர்பாக ஆய்வு விசாரணை செய்யும் நிறுவனங்களில் கார்டியனும் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்கள் வாரம் முழுவதும் வெளியாகவுள்ள வெளியீடுகளின் ஒரு சிறிய பகுதிதான். இந்த வெளியீடு தரவுகளில் குறிப்பிட்டுள்ள சில நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் நிறுவனங்களின் , வரி மற்றும் நிதி விவகாரங்களை அம்பலப்படுத்த உள்ளது. இதில் சிலருக்கு பலமான பிரிட்டன் தொடர்புள்ளது.
இது தொடர்பான பல கட்டுரைகள் எவ்வாறு அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் அதிக அளவில் பண நிகர் மதிப்பு கொண்ட தனிநபர்கள் ஆகியோர் அறக்கட்டளைகள், அடித்தள அமைப்புகள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் சிக்கலான அமைப்பை பயன்படுத்தி அவர்களின் பணத்தை மறைக்கின்றனர் அல்லது ரகசிய முகத்திரை ஒன்றின் பின்னர் தங்களின் வாணிப கையாளுதல் அம்சங்களை மறைக்கின்றனர் என்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த பரிவர்த்தனைகளில் மிகப் பெரும்பாலானவை எந்தவித சட்ட ரீதியான தவறுகளையும் உள்ளடக்கவில்லை.
பட மூலாதாரம், EPA
கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆஷ்கிராஃப்ட்
ஞாயிற்றுக்கிழமை வெளியான மற்ற முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-
- கனடா பிரதமரின் ஒரு முக்கிய உதவியாளருக்கு பல வெளிநாட்டு திட்டங்களுடன் தொடர்புள்ளது. இதனால் வரியாக கிடைக்க வேண்டிய பல மில்லியன் டாலர்களை அந்நாடு இழந்திருக்கக்கூடும். இது வரிச் சலுகைகளை நிறுத்திவிட பிரசாரம் செய்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில் அச்சுறுத்துகிறது.
- கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், முக்கிய நன்கொடையாளருமான லார்ட் ஆஷ்கிராஃப்ட் தனது வெளிநாட்டு முதலீடுகளை நிர்வகிப்பதில் விதிகளை புறக்கணித்திருக்கலாம்.
- எவர்ட்டன் எஃப்சி கால்பந்து கிளப்புக்கு நிதி வழங்கிடும் ஒரு பெரும் பங்குதாரர் குறித்து எவ்வாறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
தங்கள் பிராந்தியங்களை பாதிக்கும் மற்ற கதைகளை மற்ற ஊடக பங்குதாரர்கள் வெளியிடலாம்.
இதில் பிரிட்டன்அரசி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்?
கிட்டத்தட்ட 10 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் (13 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பிரிட்டன் அரசியின் சொந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதை பாரடைஸ் பேப்பர்ஸ் ஆய்வு காட்டுகிறது.
டச்சி ஆப் லங்காஸ்டர் நிறுவனம் மூலம் இந்தப் பணம் கேமேன் தீவுகள் மற்றும் பெர்முடாவில் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசிக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும், இந்த வருமானம் 500 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள அரசியின் சொந்த எஸ்டேட்டுக்கு தேவையான முதலீடுகளை பார்த்துக் கொள்கிறது.
இந்த முதலீடுகளில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை. வரிகள் கட்டுவதை அரசி தவிர்க்கிறார் என்று கூற எந்தப் பரிந்துரையும் இதில் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் அரச குடும்பத்தினர் முதலீடு செய்யலாமா என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படலாம்.
பட மூலாதாரம், Alamy
அரசியின் தனியார் எஸ்டேட், பிரைட்ஹவுஸ் ரியால்டர் நிறுவனத்தில் மிகச்சிறு அளவில் முதலீடு செய்தது.
இடங்களை வாடகைக்கு விடுவது மற்றும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் சில்லறை விற்பனையாளரான பிரைட்ஹவுஸில் சிறிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏழை மக்களை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துவதாக இந்நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நிதி முதலீடுகள் தொடர்பான முடிவுகளில் தாங்கள் கலந்துகொள்ளவில்லையென டச்சி ஆப் லங்காஸ்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தனது சார்பாக குறிப்பிட்ட முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள் எதுவும் அரசிக்கு தெரியும் என்று எந்த பரிந்துரையும் இல்லை.
அரசியின் புகழை மோசமாக பாதிக்கக்கூடிய செயல்கள் அல்லது தவிர்ப்புகள் ஏதாவது உள்ளதா என்பதை தொடர்ச்சியாக கருத்தில் கொள்வதாக கடந்த காலங்களில் டச்சி ஆப் லங்காஸ்டர் தெரிவித்துள்ளது. தனது தனியார் எஸ்டேட்டில் அரசி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
தர்மசங்கடத்தில் ராஸ் மற்றும் டிரம்ப்?
1990களில் டொனால்ட் டிரம்பின் நிதிநிலைமை திவாலாகிவிடாமல் தவிர்ப்பதற்கு வில்பர் ராஸ் உதவினார். பின்னர், டிரம்ப் நிர்வாகத்தில் இவர் வர்த்தக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரு கப்பல் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக ராஸ் ஆர்வம் காட்டினார் என்று இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், AFP
ராஸ் மற்றும் டிரம்ப்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மருமகன் மற்றும் அமெரிக்கா விதித்த தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நபர்கள் ஆகிய பங்குதாரர்களை உள்ளடக்கிய இந்த கப்பல் நிறுவனம், ஒரு ரஷ்ய எரிசக்தி நிறுவனத்துக்கு எண்ணெய் மற்றும் எரிபொருள் கொண்டு செல்வதன் மூலம் பல மில்லியன் டாலர்கள் பணம் ஈட்டுகிறது.
டொனால்ட் டிரம்பின் நிர்வாக குழுவினருக்கு உள்ள ரஷ்ய தொடர்புகள் குறித்து இது மீண்டும் கேள்விகள் எழுப்பும். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை மாற்றுவதற்கு ரஷ்யர்கள் முயற்சி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அதிபர் டிரம்ப் , ''பொய்யான செய்தி'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்தல் கேள்வி எழுப்பியுள்ளார். கப்பல் நிறுவனத்தில் தனக்கு பங்குகள் இல்லை என்ற எண்ணத்தை கா்கிரஸிடம் ராஸ் தெரிவித்ததாக என்பிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் ரிச்சர்ட் ப்ளூமென்தல் தெரிவித்தார்.
` எங்கள் குழுவுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களை மறைத்ததால், அமெரிக்க மக்கள் திசைதிருப்பப்பட்டிருக்கிறார்கள்' என்றார்.
நிதி ஆவண கசிவு தகவல்கள் எங்கிருந்து வந்தது?
பட மூலாதாரம், The Asahi Shimbun
பெர்முடாவில் ஆப்பிள்பி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது
இந்த நிதி ஆவண கசிவில் உள்ள பெரும்பாலான தரவு தகவல்கள், பெர்முடாவை சேர்ந்த ஆப்பிள்பி என்ற சட்ட சேவை வழங்கும் நிறுவனத்தில் இருந்து கிடைத்துள்ளது. வெளிநாட்டு சட்ட வரம்புக்குள் குறைந்த அல்லது எவ்வித வட்டி விகிதமும் இன்றி நிதி முதலீடு செய்வதற்கு தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் உதவுகிறது.
அதன் ஆவணங்கள் மற்றும் கரிபீயன் அதிகார வரம்பில் உள்ள நிறுவன பதிவுகளில் பெறப்பட்ட மற்ற ஆவணங்களை சூட்டைச்சே சைடூங் செய்தித்தாள் பெற்றுள்ளது. தனது தகவல் ஆதாரத்தை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
இந்த விசாரணை ஆய்வு பொது நலனை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக ஊடக பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், வெளிநாடுகளில் நடக்கும் முதலீடுகள் தொடர்பாக கசிந்துள்ள தரவுகள் பலமுறை நடந்த தவறுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்த கசிவுகள் வெளியானது தொடர்பாக பதிலளித்துள்ள ஆப்பிள்பி கூறுகையில், ''எங்களின் சார்பாகவோ அல்லது எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களின் சார்பாகவோ எந்த தவறும் நடந்ததாக ஆதாரங்கள் இல்லையென்பதில் திருப்தி'' என்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி ஆதாரம் என்றால் என்ன?
உங்களது சொந்த நாட்டின் ஒழுங்குமுறைகளுக்கு அப்பாற்பட்ட வெளிநாடுகள்தான் இந்த இடம். கடல் கடந்த நாடுகளில் இருக்கும் குறைந்த வரி திட்டத்தை சாதகமாக பயன்படுத்தி நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை, சொத்துக்களை அல்லது லாபத்தை மாற்று வழியில் திசை திருப்புகிறார்கள்.
சாமானிய மனிதர்களுக்கு புரிய வேண்டுமென்றால் இந்த இடங்கள் வரிச் சலுகைகளுக்காக அறியப்படுகின்றன. இந்த முதலீடு செய்யப்படும் நிதி ஸ்திரத்தன்மையுடனும், ரகசியமாகவும் மற்றும் நம்பகத்தன்மையுடனும் இருக்கும். பெரும்பாலும் அவை சிறிய தீவுகளாக இருந்தாலும் இதற்கான பிரத்யேக இடங்கள் என்று சொல்ல முடியாது.
தவறுகளை கண்டுபிடிக்க நடத்தப்படும் கடுமையாக சோதனைகளை கொண்டு இடங்களும் மாறுபடலாம்.
இங்கு பிரிட்டன்தான் மிகப்பெரிய பங்களிப்பாளர். வெளிநாட்டு தொழில்நிறுவனங்களில் பணிசெய்யும் பல வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் லண்டனில் வசித்து வருகிறார்கள்.
கேபிட்டல் வித்தவுட் பார்டர்ஸ்: வெல்த் மேனேஜர்ஸ் அண்ட் தி ஒன் பெர்சன்ட் புத்தகத்தின் ஆசிரியர் ப்ரூக் ஹாரிங்டன், வெளிநாட்டு நிதி 1 சதவீதத்திற்காக அல்ல ஆனால் சுமார் 500,000 டாலர் மதிப்புள்ள சொத்துக்களின் .001 சதவீத சொத்து மதிப்பிற்காகத்தான். அதன் திட்டங்களுக்கு தேவையான வெளிநாட்டு கட்டணங்களுக்கு ஈடுகொடுப்பதில்லை என்கிறார் அவர்.
இதன் தாக்கம் என்ன? இது குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ளவேண்டும்?
ஏனென்றால் , இதில் ஏரளாமான பணம் சம்பந்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் முதலீடாக 10 டிரில்லியன் டாலர்கள் பணம் உள்ளதாக பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புக்கு இது சமமானதாகும். இது ஒரு குறைந்த அளவிலான மதிப்பாகவும் இருக்கலாம்.
வெளிநாட்டு நிதி முதலீடு தொடர்பான விமர்சகர்கள் பெரும்பாலும் தவறுகள் நடப்பதற்கு காரணமாக இதன் ரகசிய பராமரிப்புதான் காரணமாக அமைவதாக கூறுகின்றனர்.
இது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் அரசுகள் மெதுவாகவும், செயலற்று இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பணக்காரர்கள் வரிகளை தவிர்த்து வந்தால், வரிச் சுமையை ஏழைகள் ஏற்க வேண்டியுள்ளதாக ப்ரூக் ஹாரிங்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், பொது கணக்குகள் கமிட்டியின் தலைவருமான மெக் ஹில்லியர் பனோரமாவிடம் கூறுகையில், ''வெளிநாடுகளில் நடக்கும் முதலீடுகளில் என்ன நடக்கிறது எனபதை நாம் பார்ப்பது தேவை. வெளிநாடுகளில் செய்யப்படும் நிதி முதலீடுகளில் ரகசியம் காக்கப்படவில்லையெனில் இது போன்றவை நடக்க வாய்ப்பில்லை'' என்று கூறினார்.
''இந்த முதலீடுகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவையாகும். இந்த அம்சங்கள் மீது வெளிச்சம் போட்டுக்காட்டுவது தேவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிதி முதலீடுகளுக்கு என்ன பாதுகாப்பு?
தாங்கள் இல்லையென்றால் அரசு விதிக்கும் வரிகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது என்று வெளிநாட்டு நிதி முதலீட்டு மையங்கள் கூறுகின்றன.
பணக்குவியல் மீது தாங்கள் அமர்ந்திருக்கவில்லை என்றும், உலகம் எங்கும் பணத்தை சுழற்சி செய்யும் முகவர்களாக தாங்கள் செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
பனோரமா நேர்காணல் நடத்தியபோது, அப்போது பெர்முடாவின் நிதி அமைச்சராக இருந்த பாபி ரிச்சர்ட்ஸ் பனோரமா நேர்காணல் செய்தபோது, மற்ற நாடுகளின் வரிகளை சேகரிப்பது தனது பணி அல்ல என்றும் அந்த பிரச்சனையை அவர்கள் தாங்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பாபி ரிச்சர்ட்ஸ் மற்றும் பனோரமா நேர்காணல் செய்த ஜல் ஆஃப் மேன் தீவின் முதலமைச்சரான ஹோவர்ட் கோயேல் ஆகியோர் தங்கள் சட்ட அதிகார வரம்புகள் வரிச்சலுகை அளிக்கும் பகுதிகளாக கருதப்படுவதை மறுத்துள்ளனர்.
தங்களின் அதிகார வரம்புகளில் முறையான வரிக்கோட்பாடுகள் செயல்படுத்தப்படுவதாகவும், அவை சர்வதேச நிதி நெறிமுறை விதிகளுக்கு முழுவதுமாக இணக்கமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் ஆப்பிள்பி நிறுவனமே ஓஎஃப்சிக்கள் ''நேர்மையற்ற அரசுகளிடம் இருந்து பாதுகாத்து குற்றம், ஊழல் அல்லது துன்புறுத்தலால் பாதிக்கப்படும் மக்களை காப்பற்றுகின்றன'' என்று தெரிவித்திருந்தது.
கசிந்த இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை கடல் கடந்த சட்ட நிறுவனம் ஆப்பிள்பி மூலம் கிடைக்கப் பெற்றவை. . மேலும், 19 வரி அதிகார வரம்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பெருநிறுவனங்களும் இதில் அடங்கும். இந்த ஆவணங்கள் அரசியல்வாதிகள், பிரபலங்கள், மிகப் பெருநிறுவனங்கள் மற்றும் வணிகர்களின் நிதிப் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகின்றன.
ஜெர்மன் செய்தித்தாளான சூட்டைச்சே சைடூங் 13.4 மில்லியன் ஆவணங்களைப் பெற்றுள்ளதுடன், அதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புடன் (ஐ.சி.ஐ.ஜே.) பகிர்ந்து கொண்டது. கார்டியன் உள்பட 67 நாடுகளில் இருந்து சுமார் 100 ஊடகங்கள் இதில் அடங்கும். பனோரமா குழு இந்த சர்வதேச விசாரணையில் பிபிசி சார்பாக தலைமையேற்றுள்ளது. இந்த ஆவணங்கள் தொடர்பான ஆதார மூலத்தைப் பற்றி பிபிசிக்கு தெரியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்