ரஷ்யப் புரட்சி 100: '99 சதத்தின் வெற்றியும் ஒரு சதத்தின் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது'

  • சு.பொ. அகத்தியலிங்கம்
  • பி.பி.சி தமிழுக்காக

(ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி, இந்தக் கட்டுரை வெளியாகிறது)

படக்குறிப்பு,

லெனின்

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூர்வதென்பது சடங்கல்ல; மாறாக சரித்திரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவும் நாளை புதிய சரித்திரம் படைக்கவுமான நிகழ்வின் தொடக்கமாகவே பார்க்க வேண்டும்.

நான்கு வகையில் இதனை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒன்று, நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு. இரண்டு, ரஷ்யப் புரட்சிக்கும் அதாவது சோவியத் புரட்சிக்கும் முந்தைய புரட்சிகளுக்குமான தொடர்பும் வேறுபாடுகளும் , மூன்று, ரஷ்யப் புரட்சியின் வீச்சும் வீழச்சியும் , நான்கு , மீண்டும் எழுமோ யுகப்புரட்சிகள் .

இச்சிறு கட்டுரையில் இவை குறித்து ஒரு பருந்துப் பார்வையையில் சொல்ல முயல்கிறேன்.

முதலாவதாக புரட்சியின் சம்பங்களை வர்ணிக்க நமக்கு நேரடிச் சாட்சியாய் பல நூல்கள் உள்ளன. சோவியத் புரட்சியை உலகிலுள்ள பலர் எழுதினர். ஐந்து அமெரிக்க பத்திரிகையாளர்கள் நேரில் கண்டு செய்தி தந்தனர்.

ஆ ரைமஸ் எழுதிய நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி ; ஜான் ரீடு எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என இவ்விரண்டு நூல்களும் முக்கியமானவை. இரத்தப் புரட்சி என எதிரிகள் வகைப்படுத்தினாலும் உண்மையில் உலகில் மதத்தின் பெயரால் நடந்த வன்முறைகளை எல்லாம் ஒப்பிடும் போது எவ்வளவு ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் எழுச்சியாய் ரஷ்யப் புரட்சி நடந்தது என்பதற்கு இந்நூல்கள் சாட்சியாகும்.

ரஷ்யப் புரட்சியை லெனின் தொடங்கவில்லை . கொடுங்கோலன் சார் நிக்கோலஸ் ஆட்சியில் ரஷ்யா எப்படி இருந்தது ? மார்க்கிஸ் அஸ்டால்ப் எனும் சரித்திர ஆசிரியர் சொல்கிறார் , " கொழுந்து விட்டெரியும் தீயில் இறுக மூடப்பட்ட கொதிகலனுள் கொதித்துக் கொண்டிருந்தது ரஷ்யா." மக்கள் அடக்குமுறை தாங்காமல் கலகங்களில் ஈடுபடலாயினர் . எண்ணற்ற முயற்சிகள் நடந்த வண்ணம் இருந்தன . ஒவ்வொரு கலக முயற்சியும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டாலும்; மீண்டும் மீண்டும் புரட்சிக்கான முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன . லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர் உல்யானவும் இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் தூக்குத்தண்டனை பெற்றார் .

லெனின் செய்ததெல்லாம் மக்களிடம் தகித்துக் கொண்டிருந்த புரட்சிகர உணர்வை சரியாகக் கணித்து, பக்குவப்படுத்தி, முறைப்படுத்தி, ஸ்தாபனப்படுத்தி , தொழிலாளி வர்க்கப் புரட்சியாய், மார்க்சிய வழியில் முன்னெடுத்ததுதான்.

புரட்சி முடியும்வரை கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயர்கூட இல்லை. ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சிதான் . அதிலும் பிளவுண்டாகி போல்ஸ்விக் எனப்படும் பெரும்பான்மை கட்சிக்கு தலைமை தாங்கியே லெனின் இயங்கினார். இதற்காக அவர் நடத்திய தத்துவப் போரட்டம் மிகப் பெரிது .

லெனின் பலரின் தவறான அணுகுமுறையை எதிர்த்து தத்துவரீதியில் போர் புரிந்தபோதிலும் தனக்கு முன்னேயும் தன்னோடும் பங்களித்த யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரவருக்கு உரிய பங்களிப்பைப் போற்றினார் .

இரண்டாவதாக , ரஷ்யப் புரட்சியை தனித்த புரட்சியாய் காணும்போதே அது எப்படி உலகளாவிய அளவில் நடந்த புரட்சியின் தொடர்ச்சியாகவும் இருந்தது என்பதையும் காணவேண்டும். 18ஆம் நூற்றாண்டில் நடந்த தொழிற்புரட்சியின் விளைவுதான் இது என்றால் அது மிகையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியும் அமெரிக்க விடுதலைப் போரும் நம்பிக்கை ஊட்டின. தொழிற்புரட்சிதான் முதலாளி ,தொழிலாளி என இரு கறாரான நவீன வர்க்கத்தை அரங்கிற்கு கொண்டுவந்தது. அதன் தொடர் விளைவாகவே தொழிலாளி வர்க்க சித்தாந்தமான மார்க்சியம் பிறப்பெடுத்தது.

ஜெர்மன் தத்துவம் , பிரெஞ்சு சோஷலிசம் ,பிரிட்டிஷ் பொருளாதாரம் என்ற மூன்று தோற்றுவாய்களும் உள்ளடக்கக் கூறுகளும் கொண்ட மார்க்சியம் சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வை ஊட்டியது . 1848ல் மார்க்ஸ் - எங்கெல்ஸ் எழுதி வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கை புத்தொளி ஊட்டியது .

இவை எல்லாம் உருவாக்கிய ஒரு களத்தில்தான் ரஷ்யப் புரட்சி நடந்தது.

மன்த்லி ரெவ்யூ ஏட்டில் கணிதவியலாளர் டிர்க் . ஜே. ஸ்டுருய்க் எழுதிய ஒரு குறிப்பை இங்கு நினைவுகூர்வது பொருந்தும் . அவர் சொல்கிறார் , "19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர் விடுதலைக்கான போராட்டம் தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்தது.

எனினும் மேலும் மேலும் வலுவடைந்தது. 1848 புரட்சி தோல்வியடைந்தாலும் 1864ல் முதல் அகிலத்தைத் தோற்றுவிக்கும் அளவு தொழிலாளர் இயக்கம் வலுவடைந்தது. 1871ல் பாரீஸ் கம்யூன் பிறந்தது. கடும் அடக்குமுறையால் அழிக்கப்பட்டது.

ஆனால் , எட்டாண்டுகளில் முதல் அகிலத்தை விட பலமடங்கு வலுவாக ,உலகின் பெரும்பகுதியில் கிளைகளோடு இரண்டாம் அகிலம் பிரஸ்ஸல்சில் தோற்றுவிக்கப்பட்டது. 1914ல் போரைத் தவிர்க்கும் என நாம் நம்பிக்கை வைத்திருந்த இரண்டாம் அகிலம் வீழந்தது . 1917 ல் ரஷ்யப் புரட்சி வந்தது .

தொடர்ந்து பல நாடுகளில் புரட்சி. உலகம் முழுவதையும் சோஷலிச பாணியில் அமைப்பதற்கான முயற்சி நடந்தது . இது கிட்டத்தட்ட வெற்றி பெற்றது ."

இந்த சோவியத் சிசுவை கருவிலேயே கொல்ல பல முயற்சிகள் நட்ந்தன. லெனினின் நுட்பமான தலைமையும் சோவியத் மக்களின் அர்ப்பணிப்பு மிக்க ஈடுபாடும் சதிகளை முறியடித்து வெற்றி நடை போடவைத்தது .

அதிகாரத்துக்கு வந்தார் ஸ்டாலின்

"நிலம், ரொட்டி, சமாதானம்" என புரட்சியின் போது லெனின் கொடுத்த முழக்கம் வெறும் வாய்ப் பந்தல் அல்ல என்பதை நடைமுறை மூலம் சோவியத் நிரூபித்தது . அனைவருக்கும் வாக்குரிமை, பெண்களுக்கு வாக்குரிமை, தொழிலாளர் நலச் சட்டங்கள், குழந்தை உரிமை உள்ளிட்ட உலகு அனுபவிக்கும் பலவற்றை கொடையாகத் தந்தது சோவியத் புரட்சி. சாதனை நாயகனை உலகம் வியப்போடு பார்த்தது. லெனின் மறைந்தார் . ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்தார் .

முதலாம் உலகப் போரின் தொடர்ச்சியாய் சந்தையை மறுபங்கீடு செய்ய இரண்டாம் உலகப்போர் மூண்டது.

படக்குறிப்பு,

ஸ்டாலின்

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உலகம் முழுவதும் வீசியடித்த புரட்சிகர எழுச்சிகள் என்பது உலகப்போரில் ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் ஓங்கி நின்றஎழுச்சியின் உயிரார்ந்த தொடர்ச்சியே என்பார் சுகுமார் சென். கிழக்கு ஜெர்மனி, போலந்து. செக்கோஸ்லோ வாக்கியா. யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, அல்பேனியா என கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாய் அதற்குரிய வரலாற்றோடு சோசலிச முகாமுக்குள் இணைந்தன.

இரண்டாம் உலகப் போரில் ரஷ்யப் பங்களிப்பு

அப்போது ஐரோப்பாவின் மக்கள் தொகை சற்றேறக்குறைய அறுபது கோடி; அதில் சரிபாதி முப்பது கோடி இப்படி சிவப்பானது. இது இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்புமிக்க பங்கேற்பின் விளைச்சல் எனலாம்.

எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா போன்றவை சோவியத் யூனியனில் தங்களை இணைத்துக்கொண்டன. பிரான்ஸிலும் இத்தாலியிலும் கூட்டணி ஆட்சிகள் மலர்ந்தன. கம்யூனிஸ்டுகள் பலமும் முன்பைவிட அதிகரித்தது. ஸ்காண்டிநேவிய, ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் இடதுசாரிக் குரல் வலுத்தது. ஸ்பெயினிலும், போர்ச்சுக்கல்லிலும்தான் பாசிச அரசுகள் தப்பிப் பிழைத்துத் தொடர்ந்தன.

வீறுபெற்ற விடுதலைப் போர்கள்

மேற்கு ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் புரட்சி எரிமலை வெடித்துவிடாதபடி நேசநாடுகளின் படைகள் அமர்ந்து கொண்டன. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, பர்மா, மலேயா, கொரிய நாடுகளின் விடுதலைப் போர்கள் வீறுபெற்றன; காலகதியில் விடுதலை பெற்றன .

சீனம் ,வியட்நாம்,கியூபா ,வடகொரியா , என ஓவ்வொரு நாடும் அதனதன் வரலாற்று பின்புலத்தோடு புரட்சியில் வென்று சோஷலிச முகாமில் கம்பீரமாக இணைந்தன .

வறுமையிலும் அறியாமையிலும் பல நூறு ஆண்டுகள் வதைபட்ட ரஷ்ய மக்கள் நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்றனர். இல்லந்தோறும் புன்சிரிப்பு காட்டியது

வீழ்ந்த ஏகாதிபத்தியம் தன் சூழ்ச்சி வலையை பின்னத் துவங்கியது . அமெரிக்கா தன்னைத்தானே உலகப் போலீஸ்காரனாக வரிந்துகொண்டு உலகெங்கும் ஆட்சி கவிழ்ப்பிலும் சிறுசிறு யுத்தங்களிலும் ஈடுபடலானது. எங்கும் எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தது. கம்யூனிஸ எதிர்ப்புப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது.

துவங்கியது பனிப்போர்

ரஷ்யாவில் ஸ்டாலின் உட்கட்சி ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதில் செய்த தவறுகள், டிராட்ஸ்கி போன்றோரின் எதிர்ப்புக் குரல் எல்லாம் மிகச் சாதுரியமாக கம்யூனிச எதிர்ப்புக்கு பயன்படுத்தப்பட்டன. இதே காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பியாவில் ஸ்டாலினிச பாணி செயல்பாடுகளும் துவங்கிவிட்டன.

ஒரு புறம் அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய முகாம்; இன்னொரு புறம் ரஷ்யாவின் தலைமையில் சோஷலிச முகாம் என உலகச் சூழல் மாறியது. யுத்தச் செலவுகள் இரு பக்கமும் பன்மடங்கு அதிகரித்தன. பனிப்போர் காலகட்டம் துவங்கியது.

உள் நெருக்கடியாலும் ஏகாதிபத்திய சதியாலும் 1991 டிசம்பர் 8 ஆம் நாள் சோவியத் யூனியன் தகர்ந்தது. உலக மக்கள் அதிர்ந்தனர். கண்ணீர் விட்டனர். முதலாளித்துவம் மகிழ்ந்து கொண்டாடியது . இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் பலவும் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன .

இருபதாம் நூற்றாண்டு மாபெரும் சாதனைகளையும் மாபெரும் சோகத்தையும் ஒருங்கே கண்டது. சோவியத்தின் வீழ்ச்சியும் அதன் கிழக்கு ஐரோப்பியக் கூட்டாளிகளின் வீழ்ச்சியும் சோஷலிசத்தின் தோல்வி அல்ல; சோஷலிச அமலாக்கத்தில் ஏற்பட்ட பலவீனத்தின் விளைவே.

சோவியத் தகர்வை - லெனின் சிலை வீழ்த்தப்பட்டதை பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதை ஏகாதிபத்திய ஊடகங்கள் திருவிழாக் கொண்டாட்டமாய் திரும்பத்திரும்பக் காட்டிக் கூத்தாடின. கம்யூனிசம் புதைக்கப்பட்டுவிட்டதாய் முதலாளித்துவம் சாகாவரம் பெற்றுவிட்டதாய் தத்துவ பூசாரிகள் உடுக்கை அடித்தனர். ஆனால் மீள முடியாத பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் உண்மையான குரூர முகத்தைக் காட்டிவிட்டது.

2011-ல் தொடங்கியது போராட்ட அலை. உலகின் பல நாடுகளில் பலவடிவம் எடுத்தது. இதன் ஒரு வெடிப்பாய் வால்ஸ்ட்ரீட் எனப்படும் அமெரிக்க பங்குச் சந்தை கொள்ளையர் தெருவைக் கைப்பற்றும் போராட்டம் புதுவீச்சானது.

"நீங்கள் ஒரு சதம்; நாங்கள் 99சதம்" என்கிற முழக்கம் பொருள்செறிவுடன் ஓங்கி ஒலித்தது. ஒரு சதம் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்காக 99 சதம் மக்கள் தண்டிக்கப்பட வேண்டுமா எனும் கேள்வி உலகெங்கும் விவாதத்துக்குள்ளாயின.

ரஷ்யப் புரட்சி தோற்றுவிட்டதாக அல்லது தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சொல்லலாம். ஆனால் சோஷலிசத்துக்கு மாற்று முதலாளித்துவம் அல்ல . சோஷலிசம் அல்லது பேரழிவு என்பதை நடைமுறையில் அன்றாடம் உலக நிகழ்ச்சிப் போக்குகள் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன .

முதலாளித்துவத்தின் நோய் முற்றிக்கொண்டே இருக்கிறது. அது தன் லாபவெறியில் இயற்கையை,மானுடத்தை கண்மூடித்தனமாகச் சூறையாட பைத்தியம் பிடித்த நிலையில் அலைகிறது. இதிலிருந்து தப்பிக்கும் மருந்து மார்க்ஸ் என்கிற சமூக விஞ்ஞான மருத்துவனிடமே இருக்கிறது. ஆகவேதான் மீண்டும் மீண்டும் உலகம் அவனைக் கல்லறையிலிருந்து எழுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது.

99 சதத்தின் வெற்றியும் 1 சதத்தின் வீழ்ச்சியும் வரலாற்றில் தவிர்க்க முடியாதது. தாமதமாகலாம். ஆனால் தடுக்கவே இயலாது.

"நீங்கள் பூக்களை வெட்டி எறிந்து விடலாம் ஆனால் வசந்தத்தை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :