டிரம்ப் வாகனத்தை நோக்கி 'நடு' விரலை உயர்த்திய பெண்ணின் வேலை பறிப்பு

ஜூலியின் புகைப்படம்

பட மூலாதாரம், AFP/GETTY

படக்குறிப்பு,

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த புகைப்படம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது, அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் 28ஆம் தேதி, டிரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தில் உள்ள சைக்கிள் ஓட்டும் பெண் என்று கண்டறியப்பட்டுள்ள ஜூலி பிரிஸ்க்மேன், இந்த புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்த பிறகு, அவர் பணிபுரியும் நிறுவனமான அகிமா எல்.எல்.சியால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிபிசி அந்நிறுவனத்திடம் கருத்து கேட்க அணுகிய போது, அவர்கள் பதிலளிக்கவில்லை.

தனது அலுவலகத்தின் மனிதவள அதிகாரியிடம், இணையத்தில் பரவிவரும் புகைப்படத்தில் உள்ள பெண் நானே என்று ஜூலி தெரிவித்த பிறகு, அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்களிடம் ஜுலி தெரிவித்துள்ளார்.

ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளத்திடம் பேசிய ஜூலி, நிறுவனத்தின் அதிகாரிகள், அந்த புகைப்படத்தை ஆபாசம் அல்லது கீழ்த்தரமானது என்று தரம் பிரித்துள்ளதாகவும், இந்த புகைப்படத்தை ஜூலி தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டதன் மூலம், அலுவலகத்தின் சமூக வலைதள கொள்கையை மீறி விட்டதாகவும் தெரிவித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இருந்தபோது, அந்த புகைப்படம் எடுக்கப்படும்போது தான் அலுவலக வேலைநேரத்தில் இல்லை என்றும், பதிவுகளில் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேறு ஒரு சம்பவத்தின் போது, தாக்குதல் என பார்க்கப்பட்ட ஒரு பதிவை, தனது சக ஆண் ஊழியர் நீக்கிய பிறகு, அவர் வேலையில் தொடர இந்த நிறுவனம் அனுமதித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தான் மட்டும் உடனடியாக, தனது பதவியில் இருந்து ஏன் விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

50 வயதாகும் அந்த பெண்மணி, ஆறு மாத அரசு ஒப்பந்தபணியாக இந்த நிறுவனத்தில் தகவல்தொடர்பு பிரிவில் பணியாற்றியதாக தெரிகிறது.

பட மூலாதாரம், AFP/GETTY

படக்குறிப்பு,

அதே நாள், மைக் எடுத்த இன்னொரு புகைப்படம்

வேலை பறிபோனபோதும், அவர், தனது செயலுக்கு வருந்தவில்லை என்றார்.

`ஒரு வகையில், நான் முன்பைவிட நன்றாகவே உள்ளேன்` என்று ஹஃபிங்டன் போஸ்டிடம் தெரிவித்துள்ளார்.

`நம்நாடு, தற்போது எங்கு உள்ளது என்பதில் நான் வருத்தமாக உள்ளேன். நான் அதிர்ச்சி அடைந்திருத்தேன். என்னுடை கருத்துக்களை கூறுவதற்கு அது ஒரு வாய்ப்பு` என்றார்.

ஊடக புகைப்படக்காரரான மைக் ஸ்மையலௌஸ்கி, அதிபர் சாலையில் செல்லும் போது, சாதாரண மக்கள் இதுபோன்று போராட்டங்கள் செய்வதையும், ஆபாச சைகை செய்வதையும் மிகவும் சாதாரணமாக பார்க்க முடியும் என்று ஏ.எஃப்.பி இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த சைகையை பலமுறை செய்ததோடு, அதிபரின் வாகனத்திற்கு இணையாக சைக்கிளை ஓட்ட முயன்ற அந்த பெண்ணின் பிடிவாதம் தன்னை ஆச்சிரியப்பட வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :