பாரடைஸ் பேப்பர்ஸ்: காலநிலை கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயன்ற இளவரசர் சார்லஸ்

  • பாரடைஸ் பேப்பர்ஸ் செய்தியாளர் குழு
  • பிபிசி பனோரமா
Prince of Wales in 2007

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரின்ஸ் சார்லஸ்

இளவரசர் சார்லஸால் ஊக்குவிக்கப்பட்டு வரும் அவரது தனியார் எஸ்டேட்டுக்கு கடல் கடந்த நிதி முதலீடு மூலம் வரும் வட்டி குறித்த தகவல்களை வெளிப்படுத்தாமல் அவர் காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் மாற்றம் செய்வதற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் என்று பிபிசி பனோரமா கண்டறிந்துள்ளது.

விதிகள் மாற்றத்தால் பலனடையும் ஒரு பெர்முடா நிறுவனத்தில் இருந்து 2007இல் 113,500 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்குகளை ரகசியமாக டச்சி ஆஃப் கார்ன்வால் வாங்கியதாக பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

சஸ்டைனபில் ஃபாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருக்கு இளவரசர் நண்பர் ஆவார்.

அதன் முதலீடுகளில் அவருக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்று டச்சி ஆஃப் கார்ன்வால் தெரிவித்துள்ளது.

இளவரசர் சார்லஸின் அதிகாரபூர்வ இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸின் செய்தித் தொடர்பாளர், "டச்சி ஆர் கார்ன்வால் முதலீடு செய்திருக்கலாம் என்ற காரணத்தால் குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதை வேல்ஸ் இளவரசர் நிச்சயமாக தேர்ந்தெடுக்கவில்லை" என்று கூறினார்.

"காலநிலை மாற்றம் தொடர்பான அம்சத்தில் அவருடைய கருத்துக்கள் நன்கு அறியப்பட்டிருக்கின்றன, உண்மையில் அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நமது சூழலுக்கு புவி வெப்பமடைதல் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்'' என்று அவர் மேலும் கூறினார்.

''கடந்த 1990களில் இருந்து கார்பன் சந்தைகளை ஆதரித்து இளவரசர் பிரசாரம் செய்து வருகிறார். இது ஓர் உதாரணம்தான். இன்றும் அவர் தொடர்ந்து அதை ஊக்குவிக்கிறார்."

தீவிர முரண்பாடு

பட மூலாதாரம், European Parliament

அவர் மேலும் கூறுகையில், இளவரசர் சார்லஸ் "பரந்த அளவிலான தலைப்புகளில் தனது எண்ணங்களையும் ஆலோசனையையும் வழங்குவதற்கு சுதந்திரம் உண்டு" காலநிலை மாற்றத்தின் சிக்கலைப் பற்றி அவர் "தீவிரமாக அக்கறை காட்டுவதற்கும்" உரிமை உண்டு. அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா என்பது மற்றவர்களைப் பொருத்தது"

பொது வாழ்வில் தரநிலைகள் பற்றிய குழுவின் முன்னாள் தலைவரான சர் அலிஸ்டர் கிரஹாம், இளவரசர் சார்லஸின் நடவடிக்கைகள் ஒரு தீவிர முரண்பாடு என்ற தோற்றத்தில் உள்ளதாக கூறினார்.

''டச்சி ஆஃப் கார்ன்வால் நிறுவனம் இளவரசரின் சொந்த முதலீடுகள் மேற்கொள்வதற்கும் பொது வாழ்வில் அவர் வெளிப்படையாக அடைய நினைப்பதற்கும் முரண்பாடு உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

"அவர் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற ஒருவர், செல்வாக்கு மிக்கவர் இத்தகைய தீவிர முரண்பாட்டில் சம்பந்தப்பட்டிருப்பதை துரதிருஷ்டவசமாக நினைக்கிறேன்'' என்று மேலும் கூறினார்.

சட்ட நிறுவனமான ஆப்பிள்பி வைத்திருந்த ஆவணங்கள் கசிவு கடந்த 2007-இல் கேமேன் தீவுகளில் நான்கு நிதியங்களில் மொத்தம் 3.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டச்சி ஆஃப் கார்ன்வாலும் வெளிநாட்டு நிதி முதலீடு செய்துள்ளதை காண்பித்துள்ளது.

இது சட்டபூர்வமானது. வரி செலுத்துதலை தவிர்த்ததாக எந்த பரிந்துரையும் இதில் இல்லை.

தனது எஸ்டேட் மூலம் கிடைக்கும் எந்த வருமானம் தொடர்பாகவும் இளவரசர் சார்லஸ் தானாகவே வருமான வரி செலுத்துவதாக டச்சி ஆஃப் கார்ன்வாலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட இடத்தினாலோ அல்லது வேறு கட்டமைப்புகளினாலோ எதுவாக இருந்தாலும், எஸ்டேட்டின் முதலீடு எந்த சலுகையையும் பெறவில்லை. எச்எம்ஆர்சிக்கு எந்த வருவாய் இழப்பும் இல்லை " என்றார்.

ரகசியம் காக்கப்பட்டது

நிலையான வன மேலாண்மை அமைப்பு (எஸ்எஃப்எம்) அவரது அலுவலகத்துக்கு சலுகை பெறுவதற்கான பிரசாரம் மேற்கொள்ளத் தேவையான ஆவணங்களை அனுப்பியதற்கு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு முக்கிய சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வர இளவரசர் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

இளவரசர் சார்லஸின் எஸ்டேட்டின் பங்கு மதிப்பு அதிகரிப்புக்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியாத நிலையிலும், ஓர் ஆண்டில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

896 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தனியார் எஸ்டேட்டான டச்சி ஆஃப் கார்ன்வால் இளவரசர் சார்லஸுக்கு ஒரு வருமானத்தை வழங்கி வருகிறது. இதில் சார்லஸ் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 2007இல் பங்குகள் வாங்கப்பட்டுள்ளது. அப்போது, 113,500 டாலரின் மதிப்பு சுமார் 58,000 பவுண்டுகள்.

எஸ்எஃப்எம்மின் இயக்குநர்களில் ஒருவரும் மில்லியனர் வங்கியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான காலஞ்சென்ற ஹூக் வான் கட்செம் இளவரசரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.

டச்சியின் பங்கு மூலதனத்துக்குகு ஒப்புதல் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தின் விவரங்கள் கூறுகிறது: ''தன்னை டச்சி ஆஃப் கார்ன்வாலிடம் அறிமுகப்படுத்தியதற்கு வான் கட்சமுக்கு குழு தலைவர் நன்றி தெரிவித்தார். மேலும் டச்சி ஆஃப் கார்ன்வாலின் சந்தாவை சட்டத்தின்படி வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டால் தவிர ரகசியமாக வைத்திருப்பதாக ஒருமனதாக குழு ஒப்புக்கொண்டது.

மூல ஆவணம்

படக்குறிப்பு,

ஆதாரம்: பாரடைஸ் பேப்பர்ஸ்

கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றம்

உலக வெப்பமயமாதலை சமாளிக்க சர்வதேச ஒப்பந்தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சந்தைதான் கார்பன் கிரெடிட்ஸ். அதில், எஸ் எஃப் எம் எனப்படும் சஸ்டெயினபிள் ஃபாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட் லிமிடட் என்ற நிறுவனம் வர்த்தகம் செய்தது.

வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல் காடுகள் மூலம் கார்பன் கடன் வர்த்தகம் செய்ய அந் நிறுவனம் விரும்பியது. ஆனால், பருவ நிலை மாற்றத்தின் இரு முக்கிய ஒப்பந்தங்களால் இத்திட்டம் தடுக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மாசுக்கான விற்பனைத் திட்டம் (இயு இடிஎஸ்) மற்றும் க்யோட்டோ உடன்படிக்கையின்படி, மழைக்காடுகளின் மூலம் கார்பன் கிரடிட் பெறும் முறை பெருமளவில் விலக்கப்பட்டிருந்தது.

கார்பன் கிரெடிட்ஸின் பங்குகளை டச்சி வாங்கியபோது, கார்பன் கிரெடிட்ஸ் கொள்கைகளில் மாற்றம் ஒன்றை செய்ய எஸ் எஃப் எம் செல்வாக்கு செலுத்தி வந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.

கியோட்டோ ஒப்பந்தத்தில் மூத்த மத்தியஸ்தராக பணிசெய்த அமெரிக்காவின் ஸ்டுவர்ட் எயின்ஸ்டாட், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்ட மற்றும் விதிமுறைகளில் காடுகளின் கார்பன் கிரெடிட்களை சேர்க்கும் பணிக்காக அந்த நிறுவனத்தால் அவர் பணியமர்த்தப்பட்டார்.

இதுதொடர்பாக பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டங்களின் மினிட் ஆவணங்களில், எஸ் எஃப் எம் நிறுவனம் காடுகளின் கார்பன் கிரெடிட்களுக்கு ஆதராக நடைபெற்ற நிகழ்வுகளில் செல்வாக்கை செலுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தததை காட்டுகின்றன. அந்த ஆண்டின் இறுதியில் கியோட்டோ ஒப்பந்தம் தொடர்பான கூட்டங்கள் ஆரம்பிக்க இருந்தது.

2007 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி, டச்சி நிறுவனம் பங்குகளை வாங்கி நான்கு மாதங்கள் கழித்து, வேன் கட்சென் எஸ் எஃப் எம்மின் தலைவரிடம், செல்வாக்கு செலுத்துவதற்கான ஆவணங்களை இளவரசரின் அலுவலகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

பொது கொள்கை மற்றும் சட்ட ஆலோசனை என்ற தலைப்பின் கீழ், பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தின் விவர ஆவணத்தில், ''நிறுவனத்தின் பல்வேறு கொள்கை வகுப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஏராளமான கோப்புகளை தலைவர் பரிந்துரைத்தார்... வேல்ஸ் இளவரசரின் அலுவலகத்திற்கும் ஆவணங்களின் தொகுப்பு ஒன்றை தயாரிக்க வான் கட்சென் கேட்டு கொண்டுள்ளார். அதனால், தலைவர் அவ்வாறு செய்ய முடிவெடுத்தார்.'' என்று இடம்பெற்றுள்ளது.

மழைக்காடுகள் திட்டம்

நான்கு வாரங்களுக்குப் பின், ஜூலை 2-ம் தேதியன்று, மழைக்காடுகளை மூலமாகக் கொண்ட கார்பன் வர்த்தக கணக்கை தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஆணையத்தின் மாசு வர்த்தக அமைப்பையும், கியோட்டோ உடன்படிக்கையையும் விமர்சித்த இளவரசர் சார்லஸ், மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார்.

சமூக விருதுகள் விழாவின் இரவு விருந்தில் தொழில் குறித்து பேசிய இளவரசர் கூறுகையில், ''கியோட்டோ நெறிமுறை தற்போது குறிக்கும் வெப்பமண்டல மழைக்காடு நாடுகள், மரங்களை வெட்டிவிட்டு புதிய மரங்களை நடலாமே தவிர, தற்போதுள்ள வனங்கள் மூலம் கார்பன் கிரடிட்டை ஈட்ட முடியாது" என்றார்.

''ஐரோப்பிய கார்பன் வர்த்தக திட்டமானது, காடுகளில் கார்பன் எண்ணிக்கையை பின்பற்றுவதில் இருந்து வளர்ந்து வரும் நாடுகளை தவிர்த்துள்ளது. இது தவறானது. இந்த தவறினை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்தை நாம் வலியுறுத்த வேண்டும்''

காலநிலை மாற்றத்திற்கான வெப்பமண்டல காடழிப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனும், பிரின்ஸ் மழைக்காடு திட்டம் என்ற திட்டத்தை அக்டோபர் மாதம் 2007-ம் ஆண்டு தொடங்கினார்.

மழைக்காடுகளை பாதுகாக்க ஒரு கியோட்டோ உடன்படிக்கையில் எந்த வழிமுறையும் இல்லை என இத்திட்டத்தின் தொடக்கத்தின் போது அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2007இல் காலநிலை மாற்றம் தொடர்பான போராட்டம்

''காடு வளர்ப்பு மற்றும் மீளுருவாக்கம் திட்டங்கள் குறித்த மதிப்புகள் உள்ளன. ஆனால், ஒரு பழைய வளர்ந்த காட்டை பராமரிப்பதற்கு இல்லை. ஐரோப்பிய வர்த்தகத் திட்டம் வளரும் நாடுகளில் காடுகளுக்கு கார்பன் வரவுகளை முற்றிலும் ஒதுக்கி விடுகிறது. காலநிலை மாற்றத்திற்கான அழுத்தமான அவசரநிலைக்கு பதில் தேவை.. முக்கிய வெப்பமண்டல காடுகளை தவிர்த்து விட்டு இதை செய்ய முடியுமா?'' என்று வினவினார்.

கியோட்டோ உடன்படிக்கை பற்றியும், ஐரேப்பிய ஆணையத்தின் மாசு வர்த்தக அமைப்பை பற்றியும் 2008க்கு முன்பு இளவரசர் பேசியதற்கான எந்த ஆதாரத்தையும் பனாரமாவால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுபோன்ற எதாவது பேச்சு உள்ளதா என இளவரசர் அலுவலகத்தில் கேட்கப்பட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.

'உதவிக்கரம்'

அடுத்த ஆறு மாதங்களில், வருங்கால மன்னரான இவர், மழைக்காடுகள் குறித்து பல இடங்களிலும், வீடியோக்களிலும் பேசினார்.

''உடனடி முன்னுரிமையாக, மழைக்காடுகள் உலகின் பிற பாகங்களுக்கு சுற்றுச்சூழல் சேவை மூலமாக, கார்பனுக்கு உண்மையான மதிப்பீட்டைக் கொடுப்பதன் அடிப்படையில், புதிய கடன் சந்தையை உருவாக்க வேண்டும்" என்று 2008 ஜனவரியில் வெளியான ஒரு வீடியோவில் இளவரசர் பேசியுள்ளார்.

பிப்ரவரி மாதம் 2008-ம் அண்டு அப்போதைய பிரதமர் கார்டன் பிரவுனுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்பில், மழைக்காடுகள் குறித்து இளவரசர் விவாதித்ததாக செய்திகள் கூறுகின்றன.

சில நாட்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோவையும், ஆணையத்தின் சுற்றுச்சூழல், ஆற்றல், வணிகம் மற்றும் விவசாயத்தின் ஆணையர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

150 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே (எம்இபிக்கள்) அவர் உரையாடுகையில், ''ஐரோப்பிய காரன் வெளியேற்ற வர்த்தக திட்டத்தின் அடுத்த பதிப்பு தனது உதவிக்கரத்தை மேலும் நீட்டும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். மழைக்காடுகளை அப்படியே வைத்திருக்க தேவையான சந்தை அணுகுமுறையை காக்க ஆதரவுக்கரம் நீட்டும்....பல பில்லியன் மக்களின் வாழ்க்கை உங்களின் பதிலை சார்ந்துள்ளது. நாம் தவறு செய்துவிட்டாலோ அல்லது தோல்வியடைந்தாலோ நமது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் நம் யாரையும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று கூறினார்.

2008 ஜூன் 18இல் உலக நிதியச் சரிவு தொடங்கியபோது, எஸ்எஃஎப்எம்மில் உள்ள அதன் பங்குகளை டச்சி விற்றது.

50 பங்குகளுக்கு 325,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தப்பட்டதாக ஆவணங்கள் காண்பிக்கின்றன.

எஸ்எஃஎப்எம் தற்போது செயல்பாட்டில் இல்லை.

1337ல் டச்சி நிறுவனம் நிறுவப்பட்டது. வேல்ஸ் இளவரசர் மற்றும் அவரது குழந்தைகளின் பொது, தனியார் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட அதன் வருவாய் பயன்படுத்தப்படுகிறது. அதன் கணக்குகள் சுயாதீனமாக தணிக்கை செய்யப்பட்டு நாடாளுமன்றம் முன்பு சமர்பிக்கப்படுகிறது.

டச்சி ஆஃப் கார்ன்வாலின் பேச்சாளர் ஒருவர், ''நிறுவனம் முதலீடு செய்யலாம் என நினைக்கும் துறைகளை பொறுப்பு முதலீட்டு கொள்கைகளுடன் பின்பற்றியதாக'' தெரிவித்துள்ளார்.

அரசியாரின் சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் சொந்த பணம் 2004-2005 ஆண்டுகளில் பெர்முடா மற்றும் கேமன் தீவுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தது என்று பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்கள் காட்டுகின்றன.

கசிந்த இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை கடல் கடந்த சட்ட நிறுவனம் ஆப்பிள்பி மூலம் கிடைக்கப் பெற்றவை. . மேலும், 19 வரி அதிகார வரம்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பெருநிறுவனங்களும் இதில் அடங்கும். இந்த ஆவணங்கள் அரசியல்வாதிகள், பிரபலங்கள், மிகப் பெருநிறுவனங்கள் மற்றும் வணிகர்களின் நிதிப் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகின்றன.

ஜெர்மன் செய்தித்தாளான சூட்டைச்சே சைடூங் 13.4 மில்லியன் ஆவணங்களைப் பெற்றுள்ளதுடன், அதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புடன் (ஐ.சி.ஐ.ஜே.) பகிர்ந்து கொண்டது. கார்டியன் உள்பட 67 நாடுகளில் இருந்து சுமார் 100 ஊடகங்கள் இதில் அடங்கும். பனோரமா குழு இந்த சர்வதேச விசாரணையில் பிபிசி சார்பாக தலைமையேற்றுள்ளது. இந்த ஆவணங்கள் தொடர்பான ஆதார மூலத்தைப் பற்றி பிபிசிக்கு தெரியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :