பணமதிப்பிழப்பு: 'மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'

படத்தின் காப்புரிமை Getty Images

(இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, நவம்பர் 8-ம் தேதியுடன் ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் நான்காம் பகுதி இது. இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

நவம்பர் எட்டாம் தேதியை கறுப்பு தினமாக இந்தியா முழுவதும் அனுசரிக்க பா.ஜ.கவைத் தவிர்த்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரு மனதாக ஒப்புக்கொண்டிருக்கின்றன. பா.ஜ.க. மட்டும் இதனை கறுப்புப் பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க முடிவுசெய்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகளை வைத்துப்பார்த்தால், இந்த இரண்டு நிலைப்பாடுகளில் எந்த நிலைப்பாடு சரியானது என்று சொல்ல முடியுமா?

2016 நவம்பர் 16ஆம் தேதி, அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு முந்தைய தினம்தான் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த ஒட்டுமொத்தத் திட்டத்தின் கருத்துருவாக்கம், செயலாக்கம் ஆகியவற்றில் கடைபிடிக்கப்பட்ட ரகசியத்திற்காக பல சிக்கல்களையும் அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் குறிப்பிட்டேன்.

இந்த அபாயம் இருவிதமாக இருந்தது - ஒன்று, நினைத்த இலக்கை அடையாமல் போவது (கறுப்புப் பணத்தை மீட்பது போன்றவை), இரண்டாவது எதிர்பாராத பின்விளைவுகளைச் சந்திப்பது (பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவை).

ஓர் ஆண்டு கழிந்த நிலையில் என் அச்சம் அர்த்தமுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது. முக்கியமான பொருளாதார அறிஞரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங், கொள்கை விவகாரங்களில் நிபுணரான பிரவீண் சக்ரவர்த்தி, ஜேம்ஸ் வில்ஸன் போன்ற சமூகவலை தள நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் இந்த மோசமான நடவடிக்கையின் முழுமையான விளைவைப் பற்றி விரிவாகக் கூறியிருக்கின்றனர்.

தனிமனிதர்கள் எதிர்கொண்ட துயரங்களின் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கியிருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் இலக்கு என்ன என்பதை மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

ஆனால், தேசிய உள்நாட்டு உற்பத்தி மற்றும் புழக்கத்தில் உள்ள பணம் குறித்த அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் இது மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருக்கின்றன.

இந்தக் கட்டுரையில் நவம்பர் 8ஆம் தேதியை ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான ஒரு கறுப்பு தினமாக இந்தியா ஏன் பார்க்க வேண்டும் என்பதை வேறொரு பார்வையில் விளக்க விரும்புகிறேன்.

பண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு' படத்தின் காப்புரிமை Getty Images

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்பாக, நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடந்ததாக ஊடகங்களில் பதிப்பிக்கப்பட்ட நிகழ்வுகள், மத்திய அரசில் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பது குறித்து தீவிரமான கவலைகளை எழுப்புகின்றன.

உதாரணமாக, மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் பிரதமரின் இந்த நடவடிக்கை குறித்து மிகச் சிலருக்கே தெரியும் என்றும் ஆகவே அவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்தினர் என்றும் சொல்லப்படுகிறது.

நவம்பர் 8ஆம் தேதி மாலையில் நடந்ததாக ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்தால், ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் காட்சிகளைப் போல இல்லாமல், ஏதோ 'காட் ஃபாதர்' படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்பதைப் போலவே இருந்தது.

இந்தத் திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு சொல்லப்பட்டதிலிருந்து பிரதமர் நரேந்திர மோதி இந்தத் திட்டத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும்வரை அவர்களது மொபைல் போன்கள் அணைக்கப்பட்ட விவகாரத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

1971ல் மிசா சட்டம் கொண்டுவரப்பட்ட விவகாரத்தைத் தவிர்த்து, இந்தியாவில் வேறு எந்த ஒரு கொள்கை முடிவும் பெரும்பாலான கேபினட் அமைச்சர்களுக்குத் தெரியாமல், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது. இப்படியாக அதிகாரம் ஓரிடத்தில் குவிவது அரசியல் சாஸனத்திற்கும் சரி, ஜனநாயகத்திற்கும் சரி நல்லதல்ல.

ஜனநாயகம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு சுதந்திரமான, வலிமையான பொது அமைப்புகள் மிக முக்கியமானவை என்பதை வலது மற்றும் இடதுசாரி கொள்கை வகுப்பாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்வார்கள்.

நவம்பர் 8: இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம் படத்தின் காப்புரிமை Getty Images

ஆக்ஸ்ஃபோர்ட் ஜீஸஸ் கல்லூரியில் பணியாற்றும் நீல் ஃபெர்குஸான் உள்ளிட்ட அறிஞர்கள் இம்மாதிரியான பொது நிறுவனங்களின் செயல்பாடுகளே, வளர்ச்சியையும் வளத்தையும் அளிக்கும் வகையில் ஒரு ஜனநாயக நாடு செயல்படுகிறதா என்பதை சுட்டிக்காட்டும் என்று கூறியிருக்கின்றனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கிதான் இந்தியாவிலேயே மிகவும் மதிக்கப்பட்ட ஒரு சுயேச்சையான பொது அமைப்பு.

ரிசர்வ் வங்கிக்குள் இருந்த அதிகாரிகளின் பல பத்தாண்டு கால உழைப்பாலும் அதன் செயல்பாட்டிற்குள் தலையிடாமல் இருந்த பல தலைமுறையைச் சேர்ந்த அரசியல்வாதிகளாலும் அதனுடைய இன்றைய உயர்ந்த நிலை எட்டப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் மரியாதை சுத்தமாக அழிக்கப்பட்டது. 'செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு எத்தனை காலமாகும்?' என்பது போன்ற நகைச்சுவைத் துணுக்குகளின் மையமானது ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் வீழ்ச்சி என்பது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்கமாக அமைந்த நிழலான நடவடிக்கைகளிலிருந்து ஆரம்பித்தது.

பண மதிப்பிழப்பு செய்வது என்ற முடிவு எப்படி, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து பல கருத்துகள் சொல்லப்பட்டுவிட்டாலும் இதுவரை காரணங்கள் தெளிவாகவில்லை.

புதைக்கப்பட்டதுரிசர்வ் வங்கியின் சுதந்திரம்

இந்திய ரிசர்வ் வங்கியின் சுயேச்சையான வாரிய உறுப்பினர்களில் எவ்வளவு பேர் இந்த நடவடிக்கை குறித்து அறிந்து, அதற்கு ஒப்புதல் அளித்தார்கள் என்பதும் தெளிவாக இல்லை. இந்த நடவடிக்கை தொடர்பான ஆவணங்களைப் பொதுவெளியில் வைப்பதன் மூலமாக இந்த சந்தேகங்களை இந்திய ரிசர்வ் வங்கி எளிதில் தீர்த்துவிட முடியும்.

ஆனால், இதனை ரிசர்வ் வங்கி தானாகவும் முன்வைக்கவில்லை; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோதும் ஏதோ சாக்குப்போக்குகளைச் சொல்லி மறுத்துவிட்டது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்கம் குறித்து வெளிப்படைத் தன்மை இல்லாததால் ரிசர்வ் வங்கியின் மரியாதை குறைந்தது என்றால், இந்த அறிவிப்பைத் தொடர்ந்த 50 நாட்களில் நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் தனித் தனி அமைப்புகள் என்ற கருத்தும் உடைக்கப்பட்டது, இந்த காலகட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் ரிசர்வ் வங்கி ஆளுநர் மௌனம் காத்தது, மிக மோசமானதாக இருந்தது.

கொள்கை முடிவுகள் எடுப்பது என்ற தனது பொறுப்பை அந்த அமைப்பு கைவிட்டதை இது சுட்டிக்காட்டுவதாக இருந்தது. மற்றொரு பக்கம், இந்த நடவடிக்கையில் அவ்வப்போது செய்யப்படும் கொள்கை மாற்றங்களை வருவாய்த் துறை செயலர் போன்ற மூத்த அதிகாரிகள் அறிவித்துவந்தனர்.

சட்டப்படியும் முன்னுதாரணங்களின்படியும் பார்த்தால், இந்த அறிவிப்புகளை ரிசரவ் வங்கிதான் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்து ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் செத்து, புதைக்கப்பட்டதையே காட்டின.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதிலிருந்து மாற்றப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை வெளியிட்டுவந்த ரிசர்வ் வங்கி, திடீரென அதனை நிறுத்தியது. ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையிலும்கூட ரிசர்வ் வங்கி இன்னமும் முழுமையான மதிப்பீட்டை வெளியிடவில்லை.

ஆனால், யாரும் பெரிதாக கவனிக்காத வகையில் ஆகஸ்ட் மாத இறுதியில் தனது வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக 15.8 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் இது 99 சதவீதம்.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் மாற்றப்பட்ட நோட்டுகள் இதில் சேர்க்கப்படவில்லையென்றும் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மாறலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

2017 மார்ச் 31ஆம் தேதிவரை செல்லாமலாக்கப்பட்ட நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என மீண்டும் மீண்டும் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாத துவக்கத்தில் நோட்டுக்களைத் திரும்பப் பெறப்படுவது நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. ரிசர்வ் வங்கி மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் இதனால் தொலைந்தது.

புராணங்களில் வரும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல, ரிசர்வ் வங்கியின் மரியாதை சற்று மீளலாம். ஆனால், முன்பிருந்த பெருமையும் மரியாதையும் அவ்வளவு சீக்கிரம் திரும்பக் கிடைக்குமென தோன்றவில்லை.

ரிசர்வ் வங்கி என்ற 80 ஆண்டுகாலமாக இயங்கிவந்த ஓர் அமைப்பை, அதன் மீதிருந்த மரியாதையை ஒரு வருடத்திற்குள் நாசமாக்கிவிடுவதென்பது மாபெரும் துயரம்தான். இந்திய ஜனநாயகத்திற்கு இது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
demonetization

ஜனநாயகத்தின் மற்ற தூண்கள் எப்படியிருக்கின்றன என்று பார்ப்போம். எந்த ஒரு ஜனநாயகத்திலும் நீதித் துறை என்பது, மக்களை பொறுப்பேற்க வைக்கும் இறுதிப் புகலிடமாக இருந்துவருகிறது. ஜனநாயகம் வீழ்ந்துவிடாதிருக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகவும் செயல்பட்டுவருகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பொறுத்தவரை, பல அடிப்படையான சட்ட ரீதியான கேள்விகளும் அரசியல்சாஸன அடிப்படையிலான கேள்விகளும் இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன.

உதாரணமாக, எந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தனிநபர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையைத்தான் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன?

அதேபோல, எந்தச் சட்டத்தின் அடிப்படையில் சில ரூபாய் நோட்டுகள் சில இடங்களில் (பெட்ரோல் பங்க் போன்றவை) செல்லும் என்றும் சில இடங்களில் (மளிகைக்கடை போன்ற இடங்களில்) செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது?இந்தக் கேள்விகளுக்கும் சரி, மேலும் சில கேள்விகளுக்கும் சரி இப்போதுவரை பதிலில்லை.

பழனிவேல் தியாகராஜன்
Image caption பழனிவேல் தியாகராஜன்

எந்த ஒரு இடைக்கால நிவாரணத்தையும் வழங்க மறுத்த நீதிமன்றங்கள், இந்த நடவடிக்கை எந்தத் தடையுமின்றி தொடர அனுமதித்தன. சில பரிசீலனைகளுக்குப் பிறகு, பணமதிப்பிழப்பு தொடர்பான சில நடவடிக்கைகளை அரசியல் சாஸனத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளாக நீதிமன்றம் சொல்லலாம்.

அப்படி நடந்தால், "தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி" என்பதற்கு மிகப் பெரிய உதாரணமாக அது அமையும். இதற்கிடையில், இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலரது சொத்துகள் நாசமாகியிருக்கின்றன.

ஊடகங்களின் நிலை

அடுத்ததாக ஊடகங்களின் நிலை. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் செயல்களுக்கு பதில்சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தனித்துவமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. வெகு சில குறிப்பிடத்தக்க இணைய ஊடகங்களைத் தவிர, உள்ளூர் ஊடகங்களில் இந்த நடவடிக்கை தொடர்பாக யாரையும் எதற்கும் பொறுப்பாக்கவில்லை என்று ஒருவர் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

தற்போதைய ஜனநாயகத்தில் எவ்விதத்திலும் யாரும் பொறுப்பேற்காத ஒரு மிகப்பெரிய நடவடிக்கைக்கு உதாரணமாக இந்த நடவடிக்கையைச் சொல்ல முடியும். செல்லாமலாக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கான காலத்தை குறைத்தது தொடர்பான அறிவிப்பு ஒருபுறமிருக்க, அரசு, அதிகாரவர்க்கம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் இருந்த பலரும் இந்தத் திட்டம் தொடர்பாக மாற்றி மாற்றி கருத்துகளைச் சொல்லியவண்ணம் இருந்தனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த நடந்த இந்த முயற்சிகளை அம்பலப்படுத்துவதில் பாரம்பரிய ஊடக நிறுவனங்களைவிட, பொதுமக்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், பண மதிப்பிழப்பும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் பாரம்பரிய ஊடகங்கள் உட்பட ஜனநாயகத்தின் ஒவ்வொரு தூணின் மரியாதையையும் பாரம்பரியத்தையும் சீர்குலைத்துள்ளன.

இந்தியாவின் பொதுத்துறை அமைப்புகளிலேயே மிகவும் மதிக்கத்தக்க அமைப்பாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஜனநாயகத்தின் கறுப்பு நாட்களில் ஒன்றாக நவம்பர் 8ஐ குறிப்பிடவில்லையென்றால் வேறு எந்த நாளைத்தான் அப்படிச் சொல்ல முடியும்?

(கட்டுரையாளர் மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.கவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு செயலர்.)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :