100 பெண்கள்: அறிவியல் உலகின் தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்கள்

தலைசிறந்த ஏழு பெண் கண்டுபிடிப்பாளர்கள் படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டனில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பிரபலமான பெண் விஞ்ஞானிகள் பற்றி தெரியாது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. பிபிசி 100 பெண்கள் தொடர், பெண் விஞ்ஞானிகள் பற்றி மக்களுக்கு தெரிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு யூகோவ் (YouGov) என்ற ஆய்வில் சுமார் 3,000 பேர் கலந்து கொண்டார்கள். பிரிட்டனை சேர்ந்த ‘சையின்ஸ்கிர்ல்‘ ('ScienceGrrl') என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது.

வெறும் 47% மக்கள் மட்டுமே (அதிலும் ஒரேயொரு) பெண் விஞ்ஞானியின் பெயரை தெரிந்து வைத்திருந்ததாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

அதிலும் பெரும்பான்மையினருக்கு மேரி கியூரியை மட்டுமே தெரிந்திருந்தது. அனைவரும் ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களை தெரிந்து வைத்திருந்தனர்.

நவம்பர் ஏழாம் தேதி மேரி கியூரியின் 150வது பிறந்தநாள். அப்படியென்றால், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக விஞ்ஞானத்தில் மிகவும் பிரபலமான பெண் என்ற பெருமைக்கு மேரி கியூரி மட்டும்தான் உரியவரா என்ன?

அறிவியல் துறையில் பெண்களின் பங்கு அதிகம் இல்லையா? இந்த கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் நிதர்சனம் அப்படியல்ல.

பல பெண் விஞ்ஞானிகள் அறிவியல் துறைக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உலகில் பல அதிசயங்கள் இருந்தாலும், ஏழு அதிசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது போன்று முக்கியமான ஏழு பெண் விஞ்ஞானிகளை பற்றித் தெரிந்துக்கொள்வோம்.

மேரி கியூரி: நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியல் மங்கை

கதிரியக்கம் தொடர்பான மேரி கியூரியின் கண்டுபிடிப்புகள் அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்காக நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி.

1898 ஜூலை மாதத்தில் மேரியும் அவரது கணவர் பியரி கியூரியும் புதிய தனிமம் ஒன்றை கண்டுபிடித்தார்கள். தாய்நாடு போலந்தை பெருமைப்படுத்தும் விதமாக அந்த தனிமத்திற்கு 'பொலோனியம்' என்று பெயரிட்டார் மேரி. அதே ஆண்டில் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்த கியூரி தம்பதிகள் அதற்கு ரேடியம் என பெயரிட்டனர்.

1903ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்றி பெக்குரேல் என மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. எட்டாண்டுகளுக்கு பிறகு மேரி கியூரிக்கு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரோநிஸ்லாவா - வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி தம்பதிகளின் கடைசி மகளாக 1867ஆம் ஆண்டு மேரி பிறந்தார். போலந்தில் பிரபலமான ஆசிரியர்களாக திகழ்ந்த பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் கடைக்குட்டியான மேரி, முறையான கல்வி கற்பதற்காக சிறு வயதிலேயே பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டவர்!

இயற்பியலிலும், கணிதத்திலும் முதுநிலை பட்டங்களை பெற்றவர் மேரி. 1906ஆம் ஆண்டு மேரியின் கணவர் பியரி கியூரி ஒரு விபத்தில் இறந்தார்.

சோர்போன் பல்கலைகழகத்தில் பேராசியராக பணிபுரிந்த கணவரின் வேலையை மேரி கியூரி தொடர்ந்தார். அந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார் அவர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக கதிரியக்க ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த மேரி கியூரி, கதிரியக்க வெளிப்பாடுகளின் பாதிப்புகளுக்கு உள்ளானார். அதனால் லுகோமியாவால் (இரத்தப் புற்றுநோய்) பாதிக்கப்பட்ட மேரி கியூரி 1934 ஜூலை நான்காம் தேதியன்று காலமானார்.

படத்தின் காப்புரிமை Image copyrightNASA
Image caption பெக்கி விட்சன்: சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் அறிவியல் அதிகாரி

பெக்கி விட்சன்: சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் அதிகாரி

பெக்கி விட்சன் உயர்நிலைப் பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, நாசா அதன் முதல் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. நிலவில் தரையிறங்கும் அவருடைய கனவு நனவானது. பெக்கி விட்சனும் ஒரு விண்வெளி வீராங்கனை!

லோவாவில் ஒரு கிராமப்புற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெக்கிக்கு விண்வெளி வீராங்கனையாக என்ன செய்யவேண்டும் என்ற விவரம்கூட தெரியாது. ஆனால், உயிரியல் மற்றும் வேதியியல் துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் பி.எச்.டி படித்தார்.

விஞ்ஞானிகளில் சிலர் மட்டுமே விண்வெளி வீரர்களாக ஆகமுடிகிறது. அதிலும் பலர் ராணுவப் பின்னணியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த சூழ்நிலையில் 1996 ஆம் ஆண்டில் பெக்கி விண்வெளி வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேற்கொண்ட பெக்கிதான் ISS இன் (சர்வதேச விண்வெளி நிலையம்) முதல் அறிவியல் அதிகாரி என்று அறியப்படுகிறார். ஸ்டார் ட்ரெக்கின், ஸ்போக்குடன் இந்த பெருமையை பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறார் பெக்கி.

ஒரு விஞ்ஞானியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு தனிப்பட்ட சிறந்த ஆராய்ச்சி சூழல் கிடைப்பதாக கூறுகிறார் பெக்கி.

விண்வெளி நிலையத்தில் பயிர்களை வளர்க்கும் பரிசோதனை முயற்சிகளிலும், திரவ இயக்கவியல் மூலம் புற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சைகள் பற்றிய ஆய்வுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

"விண்வெளியில் நாங்கள் மேற்கொள்ளும் பன்முகத்தன்மை கொண்ட ஆராய்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்தமானது. தொலைதூர இடங்களுக்கு செல்லும் நமது முயற்சியில், எதிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்"

"நமது சூரிய மண்டலத்திலும், அதற்கும் அப்பாலும்..." என்று 100 பெண்கள் தொடருக்காக பிபிசியிடம் பேசிய பெக்கி விட்சன் கூறுகிறார்.

மேரி தர்ப்: கடல் தளத்திற்கு வரைபடம் உருவாக்கியவர்

1953 இல் அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றவர் மேரி தர்ப்.

புவியியலாளரும், கடலியல் வரைபடக் கலைஞருமான மேரி தர்ப், கண்டத்தட்டு இயக்கவியலில் (plate tectonics) சர்ச்சைக்குரிய கோட்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்தார். தொடக்கத்தில், அவரது கண்டுபிடிப்பை ஒரு "பெண்ணின் பேச்சு" என்று நிராகரித்தார் அவருடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட புரூஸ் ஹீஸென்.

ஆராய்ச்சிக் கப்பல்களில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால் வேறுவழியில்லாமல், தனது இணை ஆராய்ச்சியாளர் ஹீஸென் அளித்த தரவுகளின் அடிப்படையில்தான் தனது முதல் வரைபடத்தை உருவாக்கினார் தர்ப்.

இந்தத் துறையில் அற்புதமான, முன்மாதிரியான பங்களிப்பை தர்ப் வழங்கியிருந்தாலும், அவரது பெயர் பிரபலமடையவில்லை. தர்ப்புக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், மேரியுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த ஹீஸெனுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.

இதுபோன்ற பாகுபாடான சூழ்நிலையில்தான் மேரி தர்ப் பணியாற்றினாலும், அதற்காக வருத்தமோ சீற்றமோ கொள்ளவில்லை அவர். அதற்கு காரணம் தனது பணியின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்த்திருந்தார்.

"எதையும் ஒருமுறை மட்டுமே செய்ய முடியும். அதைத்தவிர வேறு எதையுமே நீங்கள் கண்டுபிடித்துவிட முடியாது, குறைந்தபட்சம் இந்த கிரகத்தில் மட்டுமாவது."

வாண்டா டயஸ்-மெர்சிட்: வானியலை அணுகக்கூடியதாக்கியவர்

பியூரெடோ ரிகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவியாக இருந்த வானவியல் ஆராய்ச்சியாளர் வாண்டா டயஸ்-மெர்சிட்டின் கண்களில் புள்ளிகள் தோன்றத் தொடங்கியது.

நீரிழிவு ரெட்டினோபதி நோயினால், தான் பார்வையை விரைவிலேயே இழக்க நேரிடும் என்று தெரிந்துகொண்ட வாண்டா, தான் தேர்ந்தெடுத்த பணியை, விட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்தார்.

தரவு புலனுணர்வு (Data sonification) பற்றிய நாசாவின் ஒரு பயிற்சியில் கலந்துக் கொண்ட வாண்டாவுக்கு அதுவொரு அரிய வாய்ப்பாக இருந்தது. இந்த தரவு புலனுணர்வு, நட்சத்திரங்களில் இருந்து வரும் செயற்கைக்கோள் தகவலை மொழிபெயர்த்தது.

இது, காட்சியை வரைபடங்களுக்கு பதிலாக, ஒலி அலைகளாகப் உருவாக்கும். இது வானியலாளர்களால் பெரிதும் நம்பப்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மென்பொருளை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளில் வாண்டா டயஸ்-மெர்சிட் ஈடுபட்டார். இதனால் வானியல் அறிஞர்களுக்கு மிகவும் துல்லியமான தரவுகள் கிடைத்தன. இதனால் முன்னர் வரம்புக்கு உட்பட்டிருந்த இந்த துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு பல ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகம் கிடைத்தது.

தற்போது, தென்னாப்பிரிக்க வானவியல் அபிவிருத்தி அலுவலகத்தில் (South African Office of Astronomy for Development) பணிபுரியும் வாண்டே, பார்வையற்ற மாணவர்களுக்கு, வானியல் உலகத்திற்கான புதிய பாதையை காட்டுகிறார்.

"நான் மிகவும் விரும்பும் வானியல் துறையில் எந்தவொரு பாகுபாடும் இருக்க்க்கூடாது என்று விரும்புகிறேன்" என்று சொல்கிறார் வாண்டா டயஸ்-மெர்சிட்டின்.

பிபிசியின் 100 பெண்கள் தொடருக்காக பேசிய அவர், "தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மக்களுக்கு சம வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று சொல்கிறார்.

குவாரிஷா அப்துல் கரீம்: எச்.ஐ.வி / எயிட்ஸ் தடுப்பில் திருப்புமுனை ஏற்படுத்தியவர்

தென்னாப்ரிகாவில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் எப்படி பரவுகிறது மற்றும் பெண்கள் மீது அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்று 25 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் தொற்றுநோய் மற்றும் நோய் தடுப்பு நிபுணரான குவாரிஷா அப்துல் கரீம்.

2013ஆம் ஆண்டில், குவாரிஷாவின் மகத்தான பங்களிப்புக்காக நாட்டின் உயரிய விருதான 'Order of Mapungubwe' விருது வழங்கி சிறப்பித்தது தென்னாப்ரிக்க அரசு.

எச்.ஐ.வி தடுப்பு சோதனைகளில், தென்னாப்ரிகாவின் அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களுடன் இணைந்து மிகவும் கடுமையான பங்கு பணியாற்றியிருக்கிறார் குவாரிஷா.

தற்போது தென்னாப்ரிக்க எய்ட்ஸ் ஆராய்ச்சி திட்டத்தின் மையமான கேப்ரிசாவில் (CAPRISA, Centre for the Aids Programme of Research in South Africa)வில் அறிவியல் துறையில் இணை இயக்குனராக பணிபுரியும் குவாரிஷா அப்துல் கரீம், ஐ.நா. முகமைகளுக்கு எச்.ஐ.வி. ஆலோசகராகவும் பங்களித்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சோயோன் யீ: தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

சோயோன் யீ: தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

சோயோன் யீ, 2008ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இதற்கான கடுமையான போட்டியில் சோயோன் யீ 36,000 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட துறையில் முதல் பெண் என்ற இடத்தை பெறுவது கடினமானதே" என்கிறார் யீ. தனது வெற்றி, மேலும் பல பெண்கள் அறிவியல் துறையில் நுழைவதற்கான ஊக்கத்தையும், உத்வேகத்தையும் தரும் என்று அவர் நம்புகிறார்.

விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்த யீ, வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும், நமது கிரகத்தின் "அற்புதமான பரிசையும்" நினைத்து பரவசப்பட்டார்.

ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லி: ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பில் முக்கியபங்களித்தவர்

மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதில் விருப்பம் கொண்ட ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லி, மேரி கியூரின் சாதனைகளால் கவரப்பட்டு அணு இயற்பியலை ஆர்வத்துடன் பயின்றார்.

விஞ்ஞானத்தை தனது வாழ்க்கையில் முதன்மையானதாக மாற்ற அவர் பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது.

"பிரான்சிற்கு, கிரேனொபில்லுக்கு சென்று பட்டப்படிப்பு பயில்வதற்கு, என் தந்தையிடம் அனுமதி பெறுவது முதல் சவாலாக இருந்தது" என்று ரஜா கூறுகிறார்.

"அந்த காலகட்டத்தில், மொராக்கோ சமுதாயம் பழமைவாதத்தில் ஊறிப்போயிருந்தது, பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்வரை வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை."

ஹிக்ஸ் போஸன் (Higgs Boson) என்பது நிறையுடைய ஓர் அணுத் துகள் ஆகும். இதை கடவுளின் துகள் (God Particle) என்றும் குறிப்பிடுகின்றனர். அணுவின் கட்டமைப்புக்கு அடிநிலைத் தோற்றுப்பொருளாக ஹிக்ஸ் போஸன் இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் ஆழமான நம்பிக்கை.

இந்த கண்டுப்பிடிப்பில் பங்களித்ததற்காக ரஜாவுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

மொராக்கோவில் மருத்துவ இயற்பியலில் முதுகலை பட்டப் படிப்பை உருவாக்கியதில் ரஜா செர்காவ் எல் மோர்ஸ்லியின் பங்கு மகத்தானது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :