எல்லை தாண்ட முயன்ற வடகொரிய வீரர் மீது சக நாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு

  • 13 நவம்பர் 2017
ராணுவவிலக்கல் மண்டலம் படத்தின் காப்புரிமை ED JONES/AFP/Getty Images

வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், ராணுவ நடமாட்டம் இல்லாத மண்டலம் வழியாக தென்கொரியாவிற்கு தப்பிவர முயன்றதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பேம்முன்ஜம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில், இணை பாதுகாப்பு பகுதியில், தென்கொரியாவின் பக்கத்தை அவர் கடந்தபோது, வடகொரிய ராணுவத்தாலேயே சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.

சுடப்பட்ட ராணுவ வீரர், தென்கொரியாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வடக்கில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்றாலும், ராணுவ நடமாட்டமற்ற மண்டலம் வழியாக கடப்பவர்கள் மிக மிகக் குறைவே.

கடந்த மூன்று ஆண்டுகளில், ராணுவ விலக்கல் மண்டலம் வழியாக, வடகொரிய ராணுவ வீரர் ஒருவர், தென் கொரியாவிற்கு தப்ப முயன்றது இது நான்காவது முறையாகும்.

ராணுவ விலக்கல் மண்டலம் என்பது, வடக்கு மற்றும் தென்கொரியாவின் இடையில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும்.

1953ஆம் ஆண்டு, வடக்கு மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான போர், சமாதானத்துடன் முடிந்ததே தவிர, சமாதான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதனால், கிட்டத்தட்ட இந்த இருநாடுகளும் இன்னும் போரில் தான் உள்ளன என்றும் கூறலாம்.

தென்கொரியாவின் கூட்டுத்தளபதிகளுக்கான இணை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இருதரப்பு ராணுவ வீரர்களும், நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் பகுதியான இணை பாதுகாப்பு பகுதியை அந்த வீரர் கடந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

`வட கொரியாவின் பாதுகாப்பு மையத்தை தாண்டி, அவர் எங்களின் விடுதலை இல்லம்( தென் கொரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கட்டடம்) நோக்கி வந்தார்` என்று அதில் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் கையிலும், தோள்பட்டையிலும் சுடப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு, வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில், 780 வடகொரியர்கள், தென் கொரியாவிற்கு தப்பி வந்துள்ளனர் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசின் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதும், வடகொரியா மற்றும் சீனாவின் வலுப்படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்புமே, இந்த எண்ணிக்கை குறைவதற்கான காரணமாக நம்பப்படுகிறது.

பெரும்பாலான மக்கள், சீனா வழியாகவே தப்பிச்செல்கின்றனர். சீனா மற்றும் வடகொரியாவிற்கு இடையே, நீண்ட எல்லைப்பகுதி உள்ளது. மேலும், ராணுவ நடமாட்டமற்ற மண்டல பாதையைவிட, இது கடப்பதற்கு சுலபமானது.

1953ஆம் ஆண்டு, போர் முடிந்தது முதல், இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வடகொரியாவிலிருந்து தப்பி வந்துள்ளதாக, தென்கொரியா தெரிவிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்