தாயின் வறுமையை போக்க பேருந்தை திருடிய 13 வயது சிறுவன்

அவருடைய அம்மா உடல்நிலை சரியில்லாமல் படுத்தபடுக்கை ஆனபோது, வில்லியம் அவநம்பிக்கையில் இருந்தார். எப்படியாவது இந்த வறுமையை, இந்த துயரத்தை வென்றெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவருக்கு பேருந்து பிடிக்கும். பேருந்தை இயக்குவது அதைவிட பிடிக்கும். அதனால், பேருந்து ஓட்டுனராக முடிவு செய்தார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், செய்த விஷயங்கள் அனைத்தும் நம்மை நெகிழ வைக்கும் கனமான கதை.

வில்லியம்ஸ்

பட மூலாதாரம், RG Williams

படக்குறிப்பு,

வில்லியம்ஸ்

வில்லியம் அவரது பார்வையிலிருந்து தன் 13 வயதில் நிகழ்ந்த விஷயங்களை விளக்குகிறார்,

நான் என்னுடைய எட்டு வயதிலிருந்து பேருந்தில் பள்ளிக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எளிய மனிதர்கள். நாங்கள் எங்கள் பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருந்தோம். நான் சிறுவனாக இருந்த போது, என் தந்தை எங்களை விட்டு போனார். அப்போதிலிருந்து, நானும், எனது ஒன்பது சகோதர சகோதரிகளும் தாயின் அரவணைப்பில்தான் வாழ்ந்து வந்தோம். அவர் எங்களை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். சமையல் வேலைக்குச் சென்றார்,

துணி துவைக்கும் பணிக்குச் சென்றார். ஆனால், அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அதனால், அவர் துயரத்துக்கு உள்ளானார். அப்போதிலிருந்து எங்கள் சுமைகளை நாங்கள்தான் சுமந்து வருகிறோம். அதுமட்டுமல்ல, அப்போது நான், வறுமையில் உழலும் எங்கள் குடும்பத்தை மீட்க ஏதேனும் வழி உள்ளதா, என்னால் ஏதேனும் செய்ய முடியுமா என்று சிந்தித்தேன்.

லூஸியின் நட்பு:

பேருந்தில் பயணிக்கும்போது, நான் குடிகாரர்களை, போதை மருந்துக்கு அடிமையானவர்களை, வீடற்ற மக்களை, பேருந்தின் ஜன்னலின் வழியாக பார்ப்பேன். ஆனால், நான் எதற்காக காத்திருப்பேன், எதை விரும்பினே என்றால், நான் பயணிக்கும் பேருந்தின் ஓட்டுனருடன் உரையாடுவதைதான் . அந்த ஓட்டுனர் ஒரு பெண். அவர் பெயர் லூஸி கார்னெட். அவர் தாயுள்ளம் கொண்டவர். நாங்கள் இருவரும் லூயிஸ்வில்லை சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவருக்கு என் குடும்பத்தை நன்கு தெரியும்.

நான் தினமும் அவருக்கு அருகில் பேருந்தில் அமர்ந்து செல்வேன். அவருடன் உரையாடுவேன். அவர் வாஞ்சையாக என்னிடம், "நீ சாப்பிடாயா? நன்றாக படிக்கிறாயா? வீட்டு பாடங்களை முடித்துவிட்டாயா?" என்று கேட்பார்.

பட மூலாதாரம், Diana Deaton Street

படக்குறிப்பு,

பேருந்தில் பயணிக்கும் போது, நான் குடிகாரர்களை, போதை மருந்துக்கு அடிமையானவர்களை, வீடற்ற மக்களை, பேருந்தின் ஜன்னலின் வழியாக பார்ப்பேன்.

அந்தச் சமயத்தில் நான் தினமும் நூலகம் செல்ல தொடங்கினேன். மார்கஸ் கார்வி, மார்டின் லூதர் கிங் ஆகியோரை படித்தேன். பள்ளிக்கு செல்லும் என் 30 நிமிட பேருந்து பயணத்தில், இதுக் குறித்தெல்லாம் நான் லூஸியிடம் உரையாடினேன். அந்த 30 நிமிட பேருந்து பயணத்துக்காக நாள் முழுவதும் காத்திருப்பேன்..

நான் லூஸியை சந்திப்பதற்கு முன்பு, நான் தினமும் என் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பேன். என் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பேன். எங்கள் வசிப்பிடத்தில் சில போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்பு படை வீரர்களும் வசித்தார்கள். அவர்கள் யாரும் என்னைபோல இல்லை. என் நிறத்தில் இல்லை.

தனிப்பட்டமுறையில் நான் அவர்களை மிகவும் மதித்தேன். அவர்கள் செய்துக் கொண்டிருப்பது உன்னதமான பணி என்று நம்பினேன். ஆனால், எங்கள் சமூகத்தில் யாரும் அவர்களை மதிக்கவில்லை.

பேருந்தை திருட திட்டமிடுதல்:

நான் லூஸிவுடன் நெருக்கமாக இருந்ததுபோல, என்னால் எங்கள் பகுதியில் வசித்த போலீஸாருடனோ அல்லது என் ஆசிரியர்களுடனோ என்னால் நெருக்கமாக இருக்க முடியவில்லை. நான் எந்த பகுதியை சேர்ந்தவனோ, லூஸியும் அதே பகுதியை சேர்ந்தவர்.அவர் மரியாதைக்குரிய ஒரு பணியை செய்கிறார். நானும் அவர் செய்த அதே பணியை செய்ய முடிவு செய்தேன். அதாவது உடனடியாக ஓட்டுனராக முடிவு செய்தேன். அதற்குப் பேருந்து வேண்டுமே? என்ன செய்யலாம் என்று திட்டமிட்டேன்.

பட மூலாதாரம், RG Williams

படக்குறிப்பு,

பத்து வயது சிறுவனாக வில்லியம்ஸ்

அப்போது எனக்கு 11 வயதுதான் ஆனது. இரண்டு ஆண்டுகளாக லூஸியுடன் பழகிய பிறகு, அவர் எவ்வாறு வாகனம் ஓட்டுகிறார் என்று பார்த்த பிறகு, சில புத்தகங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டபிறகு, நான் இறுதியாக என்னால் வாகனத்தை இயக்க முடியும். பேருந்தை திருட முடியும் என்று நம்ப தொடங்கினேன். அப்போது வயது 13.

அனைத்து பேருந்து ஓட்டுனர்களும் நீல நிறத்தில் அழகாக உடை அணிந்திருப்பார்கள். என்னுடைய சிறு வயதில் என் அம்மாவும், பாட்டியும் எனக்கு தைக்க கற்பித்து இருந்தார்கள். அந்த அறிவை பயன்படுத்தி நான் ஓட்டுனர்கள் உடை தைக்க முடிவு செய்தேன். தேவாலயத்திலிருந்து சில நீல நிற துணிகளை சேகரித்து, ஓட்டுனர்கள் அணிந்திருப்பதுபோல உடை தைத்தேன்.

ஓட்டுனராக வெளியே தெரிய இதுமட்டும் போதாது என்பது எனக்கு தெரியும். அதனால், என் அப்பா விட்டுச் சென்ற ஒரு தொப்பியை எடுத்துக் கொண்டேன். அதுபோல, எங்கள் வீட்டின் சமையலறையில் இருந்த சில தகடுகளையும், அட்டைகளையும் பயன்படுத்தி, ஓட்டுனர்கள் அணிந்திருப்பதுபோல பேட்ஜை செய்தேன்.

பேருந்து பணிமனையில் நடந்தவை:

நான் பேருந்து ஏறி, பிராட்வேயில் இருந்த பேருந்து பணிமனை நிறுத்தத்தில் இறங்கினேன். பேருந்து பணிமனைக்குள் நடந்து சென்றேன். பேருந்து பணிமனைக்குள் நுழையும் போது, அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரியை நோக்கி என் கரங்களை அசைத்தேன். என்னை ஓட்டுனர் என்று நினைத்து, அவரும் என்னை நோக்கி கரங்களை அசைத்தார்.

நான் இந்த நாளுக்காக இரண்டு ஆண்டுகளாக பயிற்சி செய்திருக்கிறேன். நான் நம்பிக்கையாக உணர்ந்தாலும், எனக்குள் பயம் படர்ந்தது. அமைதியற்றவனாக உணர்ந்தேன்.

நான் ஒரு பேருந்தை தேர்ந்தெடுத்து, அதன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, பேருந்தின் எஞ்சினை இயக்கினேன். அப்போது என் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. நான் பேருந்தின் அளவைக் கண்டு பிரமித்தேன். இங்கிருந்து விரைந்தோடிவிடலாமா என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.

ஆனால், அந்த எண்ணத்தை தள்ளிவைத்துவிட்டு, நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், "நீ இந்த காரியத்தை உன் குடும்பத்திற்காக செய்ய வேண்டும்" என்று சொல்லிக் கொண்டேன்.

நான் பேருந்தை எடுக்க முயற்சித்தபோது, பின்னால் நின்ற ட்ரக்கில் எனது பேருந்து மோதியது. இதில் அந்த ட்ரக்கின் கண்ணாடி உடைந்தது.

இதை அந்த பேருந்து பணிமனையின் பாதுகாப்பு அதிகாரி பார்த்துவிட்டார், அவர் என்னை நோக்கி வந்தார். அவர் என்னை இன்னும் உண்மையான ஓட்டுனர் என்று நம்புகிறார். அவர் ட்ரக்கின் கண்ணாடி உடைந்ததை கூறவே என்னை நோக்கி வருகிறார் என்று நினைத்தேன். ஆனாலும், எனக்கு அச்சமாக இருந்தது.

அவர்கள் பேருந்துக்குள் இருந்த தொலைபேசிக்கு அழைத்தார்கள். நான் அந்த அழைப்பை ஏற்றவுடன், நான் உண்மையான ஓட்டுனர் இல்லை என்பதை அவர்கள் கண்டுப்பிடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பிற பேருந்துகளின் ஓட்டுனர்களையும் அழைத்து, நான் யார் என்று பார்க்க சொன்னார்கள்.

நான் பேருந்தை இயக்கினேன். என்னை கடந்துச் சென்ற பேருந்துகளின் ஓட்டுனர்கள், நான் ஓட்டுனர் இல்லை. சிறுவன் என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.

நான் பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓடிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், நான் எனக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டேன், இதை நான் முடித்து வைக்க வேண்டும் என்று. நான் எனக்கு தெரிந்த சாலையில் வாகனத்தை செலுத்தினேன். அதாவது சாலை எண் 19-ல் பயணித்தேன். அது என் வீட்டிற்கு செல்லும் சாலையிலிருந்து, எதிர்திசையில் செல்லும் சாலை. ஆனால், அங்கு என்னுடைய பயணம் முடிவுக்கு வந்தது.

இரண்டு பேருந்துகள் இடைமறித்து, நான் ஓட்டிய பேருந்தை நிறுத்தியது. ஒரு போலீஸ் அதிகாரி என்னை நோக்கி வந்து 9மி.மீ துப்பாக்கியை என முகத்தில் வைத்து, என்னை பேருந்திலிருந்து இறங்க சொன்னார்.

பட மூலாதாரம், Jacob Rayan

படக்குறிப்பு,

குடும்பத்திற்கு உதவுவதற்காக பேருந்தை திருடிய 13 வயது சிறுவன்!

அவர்கள் என்னை இளைஞர் மையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். என் அம்மாவை அழைத்தார்கள். என் முகத்தில் துப்பாக்கி வைத்தபோது எவ்வளவு அவமானகரமானதாக உணர்ந்தேனோ, அதைவிட இப்போது மோசமானதாக உணர்ந்தேன். என் தந்தையும் வந்திருந்தார். என்னை அவர் அடிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர், நான் என் குடும்பத்திற்கு அவமானத்தை நான் தேடிக் கொடுத்ததாக சொன்னார். இந்த வார்த்தைகள் என்னை உலுக்கியது.

நீதிமன்றத்தில் நடந்தவை:

நான் நீதிபதி முன்னால் நிறுத்தப்பட்டேன். நீதிபதி என்னை நோக்கி ஏன் நீ இதை போல் செய்தாய் என்று கேட்டபோது, நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.

எங்கள் குடும்பச் சூழ்நிலையை, எங்கள் அம்மாவின் உடல்நிலையை, அப்பா எங்களை விட்டுச் சென்றதை, நாங்கள் வறுமையில், பசியில் உழன்றதை, ஆடைகள் இல்லாமல் சகோதரர்கள்குள் ஆடையை பகிர்ந்துக்கொண்டதை... அனைத்தையும் அவரிடம் சொன்னேன். நான் என் குடும்பத்துக்கு உதவிசெய்ய நினைத்தேன் அதனால் இந்தச் செயலில் ஈடுப்பட்டேன் என்று விளக்கினேன்.

பேருந்துகளை இயக்கும் நிறுவனமான 'ட்ரான்ஸிட் அத்தாரிட்டி ஆஃப் ரிவர் சிட்டி'-ன் பிரதிநிதி நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவர் என் நிலையை புரிந்துக் கொண்டார். அவரின் வழக்குரைஞருடன் பேசிவிட்டு, அவர் சொன்னார், "நீ எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல், நல்ல பெயருடன் இருந்தால், உன்னுடைய 25 வயதில் நாங்களே உன்னை பணிக்கு எடுத்துக் கொள்கிறோம்" என்றார். நான் உற்சாகமடைந்தேன்.

இந்த அவநம்பிக்கையான சூழலில் இருந்து வெளியேற ஒரு வழி கிடைத்திருப்பதாக துள்ளி குதித்தேன். நான் பராக் ஒபாமா அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டபோது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேனோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தேன்.

காணொளிக் குறிப்பு,

அகதிகளின் உயிரைக் காப்பாற்றிய ஒலிம்பிக் வீராங்கனை

"என் மீது இனி நீங்கள் எந்த குற்றக்கறையையும் காண முடியாது. நான் நன்கு படிப்பேன். அனைத்து நாட்களும் பள்ளிக்குச் செல்வேன். நீங்கள் என்ன செய்ய சொல்கிறீர்களோ, அது அனைத்தையும் செய்வேன். எனக்கு வேலை வேண்டும். என் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க வேண்டும். அது மட்டும்தான் என் நோக்கம்." என்றேன்.

நீதிபதி அனைத்தையும் புரிந்துக்கொண்டார். எனக்கு சாதகமாக இருந்தார். "கழுத்துக்கு மேலே இந்த பையனுக்கு நல்ல மூளை உள்ள தலை இருக்கிறது. அவனுக்கு 13 வயதுதான் ஆகிறது. அவனுடைய நோக்கம் அவன் அம்மாவிற்கு உதவுவது. அதனால் தவறான வழிக்குச் சென்றிருக்கிறான்." என்றார், குற்றத்திற்கான நன்னடத்தைச் சோதனைக்கு நான் உட்பட வேண்டி இருந்தது. ஆனால், இதையெல்லாம் கடந்து நான் பேருந்து ஓட்டுனர் ஆகப்போகிறேன் என்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

பேருந்து ஓட்டுனராக:

பட மூலாதாரம், RG Williams

படக்குறிப்பு,

வில்லியம்ஸ்

நான் ஓட்டுனர் கனவுடனே வளர்ந்தேன். நான் பள்ளியில் படிப்பிலும் முன்னிலை வகித்தேன். பல்கலைக்கழகத்தின் முழு உதவிதொகையுடன் படித்து, பட்டம் பெற்றேன். ஆனால், பட்டம் பெற்றவுடன் கடற்படையில் சேர்ந்தேன். அங்கே கிரிப்டாலஜி பயிற்சி பெற்றேன். எனக்கு 25 வயது ஆனவுடன், அங்கிருந்து விலகினேன். ஏனெனில், 25 வயதில் அந்த பேருந்து நிறுவனம் வரச்சொல்லி இருந்தது. பணி தருகிறேன் என்று சொல்லி இருந்தது.

நான் அந்த பேருந்து நிறுவனத்தை அணுகி, வேலைக்கான என் விண்ணப்பத்தை அளித்தேன். ஆனால்,எனக்கு அனுபவம் இல்லை என்று காரணம் சொல்லி, என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

நான் அவர்களிடம் கூறினேன், "எனக்கு 25 வயது ஆகிறது. 8 வருடங்கள் கப்பற்படையில் பணிப்புரிந்து இருக்கிறேன். நீங்கள் முறையாக கணக்கிடுவீர்களாயின், அதாவது அந்த 8 ஆண்டுகளை கழிப்பீர்களாயின், எனக்கு இப்போது 17 வயது. ஒரு 17 வயது பையனிடம் எவ்வளவு அனுபவத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

அதுமட்டுமல்ல, கடந்த எட்டு ஆண்டுகளாக, நான் ஒரு கப்பற்படை வீரனாக என் நாட்டிற்காக போராடி வருகிறேன். அதையெல்லாம் கணக்கிடமாட்டீர்களா?" என்றேன்.

மனிதவளத்துறை அதிகாரி என் நிலையை புரிந்துக் கொண்டார். மீண்டும் உள்ளே வரச் சொன்னார். நான் உள்ளே சென்று என் கதையை சொல்லத் தொடங்கினேன். 1990-ம் ஆண்டு முதலே அவர் அங்குதான் பணிப் புரிகிறார். நான் என் கதையை சொன்னவுடன், அவருக்கு அந்த பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அவர் என்னை வேலைக்கு எடுத்துக் கொண்டார். என் வாழ்வில் மிக மிக மகிழ்ச்சிகரமான தருணம் அது.

நெகிழ்வான தருணம்:

நான் என் பயிற்சியை முடிக்க வேண்டி இருந்தது. பயிற்சி முடிந்தவுடன் லூஸியை சந்தித்தேன். அவரை இறுக அணைத்து, அனைத்துக்கும் நன்றி கூறினேன். ஏனெனில், அவர் எனக்கு உதவுகிறோம் என்று தெரியாமலே என் சிறு வயதில் அவர் எனக்கு உதவி செய்துக் கொண்டு இருந்தார். அவருடைய சிறகுகளின் கீழ் என்னை வைத்து பாதுகாத்தார். அவர் என்னிடம் உருக்கமாக, "நான் உன்னை நினைத்து பெருமைபடுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். நீ பல பெரிய காரியங்களை செய்திருக்கிறாய்" என்றார்.

பட மூலாதாரம், RG Williams

படக்குறிப்பு,

பேருந்து ஓட்டுனர் உடையில் வில்லியம்ஸ்

நான் அந்தச் சமயத்தில் என் அம்மாவை இழந்திருந்தேன். நான் அப்போது உடைந்து அழுதேன். எனக்கு லூஸி இரண்டாவது அம்மா போன்றவர்.

லூஸி இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின், ஓய்வுபெற்றார். நானும், லூஸியும் இப்போதுவரை நல்ல தொடர்பில் இருக்கிறோம்.

நான் மேற்பார்வையாளராக அந்த பேருந்து நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணி புரிகிறேன். பத்து ஆண்டுகளாக பேருந்து ஓட்டுகிறேன். நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேனோ, அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதை மிகவும் விரும்புகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :