நிலநடுக்கத்தை நீண்ட காலம் முன்பே கணிப்பது சாத்தியமா?

முறைப்படியான கல்வி இல்லாத சிலர் செய்த நில நடுக்க முன்கணிப்புகளால் இத்தாலி, ஆசிய கண்டம் மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் மக்கள் பதற்றமும் பரபரப்பும் அடைய நேர்ந்தது. உண்மையில் எப்போது நிலநடுக்கம் வரும் என்பதை சரியாகக் கணிக்க முடியுமா?

படத்தின் காப்புரிமை EPA

நிலவு, சூரியன், கோள்கள் ஆகியவற்றின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து ராஃபேல் பெண்டாண்டி என்பவர் செய்த கணிப்பு இத்தாலியின் ரோம் நகரில் 2011ம் ஆண்டு பதற்றத்தை ஏற்படுத்தியது.

முறைசாரா விஞ்ஞானியான பெண்டாண்டி 1979-ம் ஆண்டே இறந்துவிட்டார். அவரது கணிப்பில் இடமோ, நாளோ மாதமோ குறிப்பிடப்படவில்லை. ஆனபோதும், 2011ம் ஆண்டு மே 11ம் தேதி ரோம் நகரில் இருந்து வெளியேற மக்கள் திட்டமிட்டனர். காரணம் பெண்டாண்டி செய்த நிலநடுக்க கணிப்புதான்.

படத்தின் காப்புரிமை Reuters

நியூசிலாந்தில் மீன்பிடிப்பதற்காக காலநிலைக் கணிப்புகள் செய்துவந்த முன்னாள் மேஜிக் கலைஞர் கென் ரிங் நிலநடுக்கம் குறித்து செய்த கணிப்பும் அந்நாட்டில் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பிப்ரவரியில் கிறிஸ்ட்சர்ச் நகரில் ஏற்பட்ட 6.3 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பூமியின் மையத்துக்கு நேராக நிலா செல்வதால் மீண்டும் மார்ச் 20ம் தேதி அப்படி ஒரு நிகழ்வு ஏற்படும் என்று கென் ரிங் கூறினார். பீதியடைந்த மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தைக் கணிப்பது என்பது மிகுந்த சர்ச்சைக்குரியது என்கிறார் பிரிட்டிஷ் மண்ணியல் ஆய்வு நிறுவனத்தின் நிலநடுக்கவியல் துறைத் தலைவர் பிரியன் பாப்டி.

"நிலநடுக்கத்தைப் புரிந்துகொள்வதில் பெரிய முன்னேற்றம் உள்ளபோதும், பெருத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்றபோதும், நிலநடுக்கம், எப்போது, எங்கே, எவ்வளவு பெரிதாக நிகழும் என்பதை முன்கூட்டியே சரியாகக் கணித்த முன்னுதாரணங்கள் ஏதுமில்லை," என்கிறார் அவர்.

"நிலநடுக்கத்தைக் கணிப்பதற்கு, முன்னர் பயன்படுத்திய முறைகள் மதிப்பிழந்துவிட்டன. ரோம் நகரில் செய்யப்பட்டதைப் போன்ற முன்கணிப்புகள் அடிப்படை ஏதுமின்றி செய்யப்பட்டவை, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவை," என்கிறார் இவர்.

புவி மேல் அடுக்குகளில் உள்ள பிளவுகளை ஒட்டி பாறைகளின் பெயர்ச்சியை, அதனால் ஏற்படும் அழுத்தத்தை நிலநடுக்கவியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். இதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முந்திய நிமிடத்தில் அவர்களால் எச்சரிக்கை அளிக்கவியலும் என்கிறார் பிபிசியின் அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ்.

"ஜப்பானிலும், கலிஃபோர்னியாவிலும் நிலநடுக்கத்தை முன்னறிவிக்கும் கூறுகள் ஏதாவது கிடைக்குமா என்று சில விஞ்ஞானிகள் பாறைகளை ஆராய்ந்து வருகின்றனர். நிலநடுக்கம் நடப்பதற்கு 30 நொடிகள் முன்பு ஒரு எச்சரிக்கையை அளிக்க முடியும். தீயணைப்பு நிலயத்தின் கதவுகளைத் திறந்துவைக்க இந்த நேரம் போதுமானது. கட்டடம் நொறுங்குவதற்குள் தீயணைப்பு வாகனம் வெளியே வந்துவிடமுடியும்," என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Thinkstock

ஆனால், நீண்ட காலம் முன்பே நிலநடுக்கத்தைக் கணிப்பது கடினம். "மணலைக் குவித்துவிட்டு, அதன் எந்தப் பக்கமுள்ள எந்த மணல் துகளால் அந்தக் குவியல் சரியும் என்று கணிக்க முயல்வதைப் போன்றது அது. இது பல காரணிகளால் தீர்மானிக்கப்படும் அமைப்பு. இதற்கு ஒரு வடிவம் கொடுக்க பல நூற்றாண்டுகளாக மக்கள் முயன்று வருகின்றனர்," என்கிறார் அமோஸ்.

ஜப்பானில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் தீவுகளைச் சுற்றிலும் உள்ள புவியடுக்குப் பிளவுகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றன. சுனாமி அலைகளைத் தடுக்கும் கட்டுமானம் முடியும் வரை, ஹமோகா அணு சக்தி நிலையத்தை மூடிவைக்கவேண்டும் என்று ஜப்பானின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பான்ரி கையேடா வலியுறுத்தினார். அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று நிலநடுக்கவியலாளர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர். நிலநடுக்கம் வரும் என்று கணிக்கப்படும் பகுதிகளில் அது நிகழ்வதற்கு பல பத்தாண்டுகளும் ஆகலாம்.

இதனால், கட்டுமானங்களுக்கான தர நிர்ணயம், அவசரகாலத் தேவைகளுக்காக பொருள்களை ஒதுக்கிவைப்பது போன்ற சில நடவடிக்கைகளைத் தவிர இந்த "ஏற்படப்போகும்" நிலநடுக்கங்களுக்காகத் தயாரிப்புகளோடு இருப்பது கடினமானது.

புவியின் காற்றுமண்டல விளிம்பில் ஏற்படும் மின்சுமைத் தடுமாற்றங்களுக்கும் புவியின் ஆழத்தில் ஏற்படும் அதிர்வுகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிரூபிக்கப்படாத கோட்பாட்டை ஆராய்வதற்கு இந்த ஆண்டு ஒரு செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது.

தேரை எச்சரிக்கை

நிலநடுக்கத்தை விலங்குகள் முன்கூட்டியே உணரவல்லவை என்ற ஒரு கருதுகோளும் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption விலங்குகளால் நிலநடுக்கத்தை முன்கணிக்க இயலுமா...?

2009ம் ஆண்டு இத்தாலியின் லகுவிலா-வில் 6.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு மூன்று நாள் முன்னதாகவே அங்கு, தாம் இனப்பெருக்கம் செய்யும் பகுதியை விட்டு தேரைகள் கூட்டம் ஒன்று வெளியேறியதாகக் கூறும் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது ஒரு விலங்கியல் சஞ்சிகை.

எனினும் நிலநடுக்கத்துக்கு விலங்குகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை புறவயமாகவும், அளவிடத்தக்க முறையிலும் ஆராய்வது கடினம். ஏனெனில், நிலநடுக்கங்கள் அரிதானவை, எச்சரிக்கை ஏதுமின்றி தோன்றுகிறவை.

தற்போதைக்கு, உலகின் எந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் தோன்றுகின்றன, எவ்வளவு அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறித்தப் புள்ளிவிவரங்கள் உள்ளன. நிலநடுக்கவியல் வல்லுநர்கள் இந்தப் புள்ளிவிவரங்களைக் கொண்டு புவி அசைவுகளை ஆராயவும், அதன் பயனாக நிலநடுக்கத்தின் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சாத்தியமாகிறது என்கிறார் பாப்டி.

"அப்போது இயற்கைப் பேரிடர்களை முன் கணிப்பதாகக் கூறிக்கொள்ளும் 'தீர்க்கதரிசி'களைப் பற்றி....?" என்று கேட்கப்பட்டது.

"இந்தோனீசியா, ஜப்பான் போன்ற பல பகுதிகளில் பெரிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. எனவே இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட இடம், நேரம் சொல்லாமல் மேம்போக்காக நிலநடுக்கங்களைக் கணிக்க பெரிய திறமையெல்லாம் தேவையில்லை," என்கிறார் பாப்டி.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இராக்-இரான் நிலநடுக்கத்தின் பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்