அழகிப் போட்டியில் அரசியல் பேசினால் என்ன ஆகும்?

  • 19 நவம்பர் 2017

அழகிப்போட்டி ஒன்றின் நிகழ்வுகளை கற்பனை செய்து பார்க்கச் சொன்னால், கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டே உலக அமைதிக்காக பரிந்து பேசும் ஒரு போட்டியாளரோ, தலையணையை வைத்து பூனைச் சண்டையில் ஈடுபடும் பெண்களோ உங்கள் மனக்கண்ணில் தோன்றலாம்.

படத்தின் காப்புரிமை Instagram
Image caption வாலண்டினா ஷ்னிட்ஸர்

அணிகலன்கள், நீச்சலுடை போன்றவற்றை மீறி, அழகிப்போட்டியில் பங்கெடுப்பவர்கள் தற்போது அரசியல் பேசவும் தொடங்கி விட்டார்கள்.

சிலி, துருக்கி, லெபனான், மியான்மர், பெரு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த அழகிப்போட்டியில் வெற்றிபெற்ற பெண்கள் அரசியல் குறித்தும் பேசத் தொடங்கிவிட்டனர்.

பசிஃபிக் பெருங்கடலில் யாருக்கு உரிமை?

சிலி மற்றும் நிலத்தால் சூழப்பட்ட, கடல் எல்லை இல்லாத அதன் அண்டை நாடான பொலியாவுக்கும் இடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அருகிலுள்ள பசிஃபிக் பெருங்கடல் பரப்பின் உரிமை குறித்து பிரச்சனை நிலவுகிறது. அந்த வழக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 'ரீனா ஹிஸ்பேனோஅமெரிக்கானா 2017' எனும் தென் அமெரிக்க அழகிப் போட்டியில், சிலியைச் சேர்ந்த வாலண்டினா ஷ்னிட்ஸர், அந்தக் கடல் பரப்பு பொலியாவுக்கே சொந்தமானது என்று கூறியதுடன் சிலி மக்களும் அவ்வாறே நினைக்கிறார்கள் என்று கூறினார்.

பொலிவிய அதிபர் எவோ மொரேல்ஸ் அவருக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். ஆனால், சிலி மக்கள் அவரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்தனர்.

எதிரியுடன் செல்ஃபி எடுக்க கூடாது

2017-ஆம் ஆண்டுக்கான வெளிநாடுவாழ் லெபனான் அழகியாக தேர்வு செய்யப்பட்ட சுவீடன் - லெபனான் பெண்ணான அமந்தா ஹன்னாவின் பட்டம் ஒரு வாரத்திலேயே பறிக்கப்பட்டது. அதன் காரணம், அவர் கல்விச் சுற்றுலாவுக்காக இஸ்ரேல் சென்றதுதான். 2006 முதல் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அதிகாரபூர்வமாக இரு நாடுகளும் தற்போது போரில் ஈடுபட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Instagram / Doron Matalon
Image caption மிஸ் இஸ்ரேல் (இடது) அருகில் நிற்கும் மிஸ் லெபனான்

2015-இல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், மிஸ் லெபனான் பட்டம் வென்ற சேலி கிரெய்க் மிஸ் ஜப்பான், மிஸ் ஸ்லோவேனியா மற்றும் மிஸ் இஸ்ரேல் ஆகியோருடன் செல்ஃபி எடுத்ததால், எதிரி நாட்டிடம் நட்பு கொள்வதாக அவர் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது.

ஆனால், இஸ்ரேல் நாட்டு அழகி தன்னுடன் சேர்ந்து பல முறை புகைப்படம் எடுக்க விரும்பியதாகவும், தாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென மிஸ் இஸ்ரேல் உள்ளே நுழைந்துவிட்டதாகவும் கூறித் தன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார் சேலி.

அழகிபோட்டியில் விமர்சிக்கப்பட்ட டிரம்ப்

மிஸ் அமெரிக்கா போட்டியில், சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாதிகள் நடத்திய பேரணிக்கு எதிர்ப்போராட்டமாக இனவெறி எதிர்ப்பாளர்கள் நடத்திய பேரணியில், இனவெறி எதிர்ப்பாளரான ஹெதர் ஹேயர் வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு, அதைத் தீவிரவாத தாக்குதல் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அது பற்றி முன்கூட்டியே தனது கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறி புயலைக் கிளப்பினார் மிஸ் டெக்சாஸ் மர்கானா வுட்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மிஸ் டெக்சாஸ் மர்கானா வுட்

"கேள்வி கேட்கப்படும் விடயம் குறித்து நீங்கள் முழுமையாகத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், யாரையும் கோபப்படுத்தாத வகையில் உங்கள் பதிலைக் கூற வேண்டும்," என்று பிபிசியிடம் கூறினார் அழகிப் போட்டிகளுக்கான பயிற்சியாளரான வலேரி ஹாயேஸ்.

மாதவிடாயை ராணுவப் புரட்சியுடன் ஒப்பிட்ட அழகி

2017-ஆம் ஆண்டுக்கான மிஸ் துருக்கி பட்டம் வென்ற இதிர் எசன், "தியாகிகள் தினமான ஜூலை 15 அன்று எனக்கு மாதவிடாய் தொடங்கியுள்ளது. தியாகிகளின் ரத்தத்தின் அடையாளத்துடன் இந்த நாளை நான் தொடங்குகிறேன்," என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

படத்தின் காப்புரிமை Vittorio Zunino Celotto/Getty Images for IMG
Image caption இதிர் எசன்

துருக்கி அதிபர் ரிசப் தாயீப் எர்துவான், 2016-இல் அரசுக்கு எதிராகப் போராடியபோது கொல்லப்பட்டவர்களை தியாகிகள் என்று கூறுவார். எசனின் கருத்து தியாகிகளை அவமதிப்பதுபோல கருதப்பட்டதால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது.

மிஸ் துருக்கி பட்டத்தை 2006-இல் வென்ற, மெர்வெ புயுக்சரா அதிபரை விமர்சித்து கவிதை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால், அவருக்கு 14 மாதம் இடை நிறுத்தம் செய்யப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெர்வெ புயுக்சரா

பட்டதை பறித்த ரோஹிஞ்சாக்கள் பற்றிய காணொளி

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் நடக்கும் ரோஹிஞ்சாக்கள் மீதான வன்முறை பகிர்ந்த ஒரு காணொளியின் காரணமாக தனது பட்டத்தை இழந்தார் 19 வயதாகும் மியான்மர் அழகி ஸ்வே எய்ன் ஸி.

ரோஹிஞ்சாக்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்று கருதப்படும் தனது நாட்டில் இந்தப் பதிவு வரவேற்கப்படும் என்று அவர் கருதி இருக்கலாம். ஆனால், சர்வதேச அரங்கில் மியான்மருக்கு அது ஒரு மோசமான பெயரை ஏற்படுத்தும் என்று போட்டி அமைப்பாளர்கள் கருத்தினர்.

படத்தின் காப்புரிமை Shwe Eain Si
Image caption ஸ்வே எய்ன் ஸி

ரோஹிஞ்சா வன்முறை குறித்த காணொளிக்கும் அவர் பட்டம் பறிக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார். பட்டம் பறிக்கப்பட்டதற்கு அவர்கள் கூறிய காரணம் ஸ்வே ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லை என்பதே.

பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த பெரு அழகிகள்

சமீபத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் பெரு போட்டியில் 23 போட்டியாளர்கள், தங்கள் உடல் அங்கங்களின் அளவு பற்றிக் கூறாமல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புள்ளி விவரங்களை பகிர்ந்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'இது ஒரு வித்தியாசமான அழகி போட்டி'

அதற்கு ஏற்றாற்போல் போட்டி ஏற்பாட்டாளர்களும் முன்னரே தயாராக வைத்திருந்த பெண்கள் மீதான வன்முறை குறித்த காணொளிகளை திரையிட்டனர். நீச்சல் உடை நடைகளை காத்திருந்த பார்வையாளர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இம்முயற்சி பாராட்டப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :