ஜிம்பாப்வே: அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் ராபர்ட் முகாபே

படத்தின் காப்புரிமை AFP / ZBC

ஜிம்பாப்வேயின் நீண்ட கால அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி இருந்தும், அவர் உடனடியாக பதவி விலக தொடர்ந்து மறுத்து வருகிறார்.

முகாபேவிற்கு பிறகு யார் அதிபர் பதவிக்கு வருவார்கள் என்ற அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து, 93 வயதான முகாபேவை வீட்டுக்காவலில் வைத்துள்ளது அந்நாட்டு ராணுவம்.

பிராந்திய தூதர்கள் மற்றும் ராணுவ தளபதி ஆகியோரோடு முகாபே நடத்திய பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் பற்றிய எவ்விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆனால், இதுவரை முகாபே பதவி விலக மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை ZIMBABWE HERALD

மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக முகாபே பதவி விலக வேண்டுமென எதிர்கட்சி தலைவரான மோர்கன் சங்கிரை கூறியிருந்தார்.

சனு பி.எஃப் கட்சியையும், அதிபர் பதவியையும் தனது மனைவி கிரேஸ் முகாபேவுக்கு கொடுக்க ஆதரவாக, துணை அதிபராக இருந்த எம்மர்சன் மனங்காக்வாவை பதவியில் இருந்து முகாபே நீக்கியதையடுத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்தது.

அதிபர் முகாபே அதிகாரபூர்வமாக பதவி விலக ஒப்புக்கொண்டால், அது ராணுவத்தின் தலையீட்டை சட்டப்பூர்வமானதாக்க உதவும் என ஜிம்பாப்வேயில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ ஹார்டிங் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்கள் முகாபே அதிபர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை எனக் கூறிய நமது செய்தியாளர், அவர் எவ்வாறு பதவி விலக வேண்டும் என இடைநிலை உடன்பாட்டுக்கு வர சிறிது காலம் ஆகலாம் என தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :