நவீன துபாயை கட்டமைக்க ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள்

  • ஜுபைர் அஹ்மத்
  • பிபிசி

யாரேனும் தனியாகப் பேசும்போது துபாய் அமைத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை கட்டமைத்தது யார் எனும் விவாதம் அங்குள்ள அனைவரின் மத்தியிலும் நீடித்துக்கொண்டே இருக்கும். ஆனால், பொது வெளியில் யாரும் பேச மாட்டார்கள். பேசினால் அதிகாரிகளின் கோபத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.

படக்குறிப்பு,

புர்ஜ் கலீஃபா

அங்கு வாழும் இந்தியர்கள் அல்லது தெற்காசியர்களிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால், தாங்கள்தான் அந்நாட்டை கட்டமைத்ததாகக் கூறுவார்கள்.

அங்கு வாழும் அரேபியர்களிடம் கேட்டால், தங்கள் தலைவர்களும் அவர்களின் தொலைநோக்கு பார்வையுமே பல நாட்டவர்களும் வந்து செல்லும் அந்த நாட்டை உருவாக்கியதாகக் கூறுவார்கள்.

இந்தியர்கள் உள்ளிட்ட அங்கு வாழும் கோடீஸ்வரர்களை கேட்டால் தங்கள் பெரு முதலீடுகள்தான் அங்கு உள்கட்டமைப்பு வளரக் காரணம் என்பார்கள். கட்டடங்கள், மேம்பாலங்கள், சாலைகள், மெட்ரோ ரயில் என அனைத்தையும் அங்கு உருவாக்கியவர்கள் அவர்களே.

அவர்கள் அங்கு பல நூறு கோடிகளை முதலீடு செய்திருக்காவிட்டால், இன்றைய துபாய் உருவாகி இருக்காது. புர்ஜ் கலீஃபா போன்ற வானுயர்ந்த கட்டடங்கள் அங்கு வந்திருக்காது.

33 ஆண்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ உருவாக்கியபின், கடந்த 2004-இல் மரணமடைந்த ஷேக் சையது பின் சுல்தான் அல் நயான் துபாய் உள்ளிட்ட பகுதிகளை நவ நாகரிக மையங்களாக மாற்றினார் என்பதில் ஐயமில்லை.

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றபின், பிற அரபு நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அவர் அந்நாட்டை மாற்றினார் என்பது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

ஆனால், பல கோடிகளில் முதலீடு இல்லாமல் அவரால் அவற்றைச் செய்திருக்க முடியாது. அரபு நாடுகள் அங்கு பெரும் அளவில் முதலீடு செய்தன. பின்னர் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சமீபத்தில் இந்தியா ஆகிய நாடுகளும் முதலீடு செய்தன.

படக்குறிப்பு,

துபாயில் இரவுப் பணியில் ஓர் இந்தியத் தொழிலாளி

கடந்த இரண்டு ஆண்டுகளில் துபாய் 9,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை சொத்துகள் சந்தையில் பெற்றது. துபாயில் சொத்துகளில் முதலீடு செய்வதில் 12% பங்கு கொண்டிருக்கும் இந்தியர்கள் உள்பட அந்த முதலீடுகளில் பெரும்பங்கு வெளிநாடுகளில் இருந்து வந்தது.

தாங்களே துபாயை உருவாக்கியதாக பணக்கார அரேபியர்கள், மேற்கத்திய நாட்டவர்கள் மற்றும் இந்தியர்களின் கூற்று உண்மையாகக் கூட இருக்கலாம். காரணம், சந்தையின் சவால்களை எதிர்கொண்டு பெரிய அளவில் முதலீடு செய்தவர்கள் அவர்கள். அவர்களின் சவால் நிறைந்த முயற்சிகள் பலனளிக்கும் என்று அவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?

அது எங்களுக்கு முன்னரே தெரியும் என்று ஒருவேளை அவர்கள் கூறலாம். ஆனால், சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் போன்று துபாயையும் ஒரு சர்வதேச வர்த்தக நகராக மாற்ற இருந்த சாத்தியங்கள் குறித்த சந்தேகம் அவர்களுக்கு இருந்திருக்கும்.

காணொளிக் குறிப்பு,

கண்ணிவெடியில் சிக்கி குடும்பத்தை இழந்த சிரியாவாசியின் துயரக்கதை

ஆனால், இந்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்களே இன்றைய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ வளமாக உருவாக்க காரணம் என்னும் வாதமே இந்த விவாதத்தில் மேலோங்குகிறது. தங்கள் வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி துபாயின் வானுயர்ந்த கட்டடங்களை கட்டியவர்கள்தான் உண்மையான நாயகர்கள்.

துபாய்க்கு அழகான பூங்காக்கள் கிடைக்க அவர்கள் தங்கள் தோலை வெயிலில் சுட்டனர். சரியான நேரத்தில் பாலங்களை கட்டி முடிக்க அவர்கள் தங்கள் எலும்புகளை முறித்துக் கொண்டனர்.

நீல நிற உடையணிந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்தியா அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கருணையற்ற வெயிலில் உழைத்தனர்.

அங்கு 20 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர். துபாய் கட்டமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் அவர்கள் எதைச் செய்தனரோ, அதையேதான் இன்னும் செய்து கொண்டிருக்கின்றனர். வழக்கம்போல, எந்தக் குறையும் கூறாமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படக்குறிப்பு,

துபாயில் 20 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளனர்

இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெரிதும் அறியப்பட்ட துபாய் முழுதும் மண் வெளியில் தெரியாத அளவுக்கு கட்டடங்களைக் கட்டியுள்ளது.

பாலைவனத்தில் கட்டப்பட்டிருக்கும் அதன் உயரமான கட்டடங்கள் விண்னைம்மூட்டும் அளவுக்கு உள்ளன. நிலவொளியைப் போல அதன் கண்ணாடி கட்டடங்கள் மின்னுகின்றன.

தங்கள் குடும்பத்தையும் நாட்டையும் விட்டுவிட்டு, வேறு ஒருவரின் நாட்டைக் கட்டமைக்கச் சென்ற ஏழை இந்தியர்களின் உழைப்புக்கு அவை சாட்சியங்களாக இருக்கலாம்.

ஆனால், விவேகமுள்ள அனைத்துக் குரல்களும் நவீன துபாயை உருவாக்குவது ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சியே என்பதை ஒப்புக்கொள்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :