ஆஸ்திரேலியா: 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தாய்மண் திரும்பிய எலும்புக்கூடு

அபோர்ஜினல் பழங்குடி படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான, பூர்வக்குடியை சேர்ந்த, மனித எலும்புக்கூடு பத்தாண்டுகளுக்கு மேலாக கேன்பெராவின் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை, மங்கோ மேன் என்று அழைக்கப்படும் இந்த எலும்புக்கூடு, நியூ சவுத் வேல்ஸில் உள்ள அவரின் பாரம்பரிய இடத்திற்கு மரியாதையோடு கொண்டுவரப்பட்டது.

மங்கோ மேனை, அவரின் சொந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிய ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களின் போராட்டம் இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

1974இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு, ஆஸ்திரேலியாவின் வரலாற்றையே மாற்றி எழுத காரணமாக இருந்தது.

ஆதிகால ஆஸ்திரேலியர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதை மறுவரையறை செய்யும் வகையில் இந்த எலும்புக்கூடு இருந்தது என ஆய்வுகள் கூறுகின்றன.

யார் இந்த மங்கோ மேன்?

மேற்கு சிட்னியிலிருந்து 750 கி.மீட்டர் தொலைவில் உள்ள, மங்கோ தேசிய பூங்காவின் ஏரிக்கரையில், ஜிம் பௌலர் என்பவரால் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை NSW OFFICE OF ENVIRONMENT & HERITAGE

இதே போன்று "மங்கோ லேடி" என்று குறிப்பிடப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டையும், அவர் 1967ஆம் ஆண்டு கண்டுபிடித்திருக்கிறார்.

ஆய்வுகளுக்காக, மங்கோ மேனின் எலும்புக்கூடு கேன்பெராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

அது 42,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள மனித எலும்புக்கூடுகளிலேயே பழமையானது இதுதான் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

மங்கோ மேன், ஒரு வேடன் என்றும், மூட்டு வீக்கம் காரணமாக, ஏறத்தாழ 50 வயதில் அவர் இறந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

முதுகு தரையில் உள்ளபடி, அவரின் இரு கைகளும், இரு தொடைகளில் குறுக்கே உள்ளது போல, உடல் முழுவதும் காவி பூசியபடி புதைக்கப்பட்டுள்ளார். அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இந்த காவி பொருட்கள் 200கி.மீட்டர் தொலைவில் கிடைப்பவை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீண்ட பயணம்

அந்த பகுதியை சேர்ந்த பழங்குடிகள், அவரின் எலும்புக்கூடு அங்கு புதைக்கப்பட வேண்டும் என பல காலங்களுக்கு முன்பு கூறியதோடு, அவரின் எலும்புகளை அங்கிருந்து நீக்கியது பெரிய மன வருத்தத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவரின் உடல் புதைக்கப்படும் நிகழ்ச்சிக்காக, முத்தி முத்தி, கியம்பா மற்றும் பர்கண்ட்ஜீ ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்கள் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

"அவரை மீண்டும் இங்கு கொண்டுவர நாங்கள் அனைவரும் காத்திருந்தோம், அவரின் எலும்புக்கூடு இங்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, அவரை மீண்டும் அவரின் ஊரிலேயே சமாதி செய்யலாம்" என்றனர்.

மங்கோ தேசிய பூங்காவில் ஒரு ரகசிய இடத்தில் அவர் புதைக்கப்படவுள்ளார். மங்கோ லேடி 1991 இல் அங்கு கொண்டுவரப்பட்டார்.

2015- ஆண்டே மங்கோ மேனின் எலும்புக் கூடுகளை மக்களுக்கு அளிப்பதாக உறுதி அளித்த பல்கலைக்கழகம், பூர்வக்குடி பகுதியிலிருந்து அவரது பூத உடலை தோண்டி எடுத்தத்தற்காக பூர்வக்குடிகளிடம் மன்னிப்பு கேட்டது.

`தி கான்வர்சேஷன்` செய்திக்காக 2015ஆம் ஆண்டு பேசிய பௌலர், "மங்கோ மேனின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன என்று அறிவிக்கப்பட்டவுடன், அபோர்ஜினல் மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, தங்களின் அனுமதி இல்லாமல் அவ்வாறு எடுத்திருக்க கூடாது என்றும் கூறினார்கள்."

அவரின் எலும்புக்கூட்டை நாடுதிருப்பி அனுப்பும் பணிகள் முடிவாகிய நிலையில், இரண்டு ஆண்டுகளாக, அந்த எலும்புக்கூடு கேன்பராவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆஸ்திரேலியா: அதிகரிக்கும் சூரிய மின்சார உற்பத்தி

மங்கோ மேனின் எலும்புகளோடு சேர்த்து பிற 104 பேரின் எலும்புக்கூடுகளும் இந்த வாரத்துவக்கத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அபோர்ஜினல் மக்களை பொருத்தவரையில், மூதாதையர்களின் உடல் மீதங்களை கண்டெடுப்பது என்பது வருத்ததிற்கான விஷயமாகும்.

இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், மக்களின் அனுமதி இல்லாமல் இன்னும் பல எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை திரும்ப அளிக்கப்படவில்லை என்றும் கூறினர். சில எலும்புக்கூடுகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த ஜூலை மாதம், அபோர்ஜினல் மக்கள் ஆஸ்திரேலியாவில் 65 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கும் முதல் தடையத்தை அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்