ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா போரை நிறுத்த புதிய முயற்சி

படத்தின் காப்புரிமை EPA
Image caption இரான் அதிபர் ஹசன் ரோஹானி (இடது), துருக்கி அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் (வலது) உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இரான் அதிபர் ஹசன் ரோஹானி, துருக்கி அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் ஆகியோருடன் பேச்சு நடத்தியபின் இதை அவர் கூறியுள்ளார்.

சிரியா அரசும் எதிர்த் தரப்பினரும் ஆக்கபூர்வமான முறையில் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று அவர்கள் மூவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

தஞ்சம் கோரி வந்தோரை இடம் மாற்ற நடவடிக்கை

படத்தின் காப்புரிமை Abdul aziz adam

ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்பட்டு, பின்பு பப்புவா நியூ கினியா நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட,மேனஸ் தீவில் உள்ள, படகுகள் மூலம் தஞ்சம் கோரி வந்தோர் தடுப்பு மையத்தில் பப்புவா நியூ கினியா காவல்துறையினர் நுழைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தத் தடுப்பு மையம் மூடப்பட்ட பின்னரும், அரசு வழங்கியுள்ள மாற்று இடங்களில் போதிய வசதி இல்லை என்று கூறி அங்கு வசிக்கும் அகதிகள் வெளியேற மறுப்பதால், அவர்களை வெளியேற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏமன்: உதவிப் பொருட்கள் செல்ல சௌதி கூட்டணி அனுமதி

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹுடய் டா துறைமுகம்

ஐ.நாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹுடய் டா துறைமுகம் மற்றும் சானா விமான நிலையத்துக்கு உதவிப் பொருட்கள் வந்து சேர்வதை அனுமதிப்போம் என்று, ஏமன் அரசுக்காக போரிட்டு வரும் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.

லட்சக்கணக்கான மக்களுக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா கூறியிருந்தது.

நீர்மூழ்கி கப்பல்: அர்ஜென்டினாவுக்கு ரஷ்யா உதவி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்பு படம்

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, தென் அட்லாண்டிக்கில் 44 ஊழியர்களுடன் காணாமல் போன அர்ஜென்டினா நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி தொடர்பாக ரஷ்யாவின் உதவியை அர்ஜென்டினா ஏற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இது போன்ற நடவடிக்கைகளில் அனுபவம் மிகுந்த ஒரு ஆய்வு கப்பலை தங்களை நாட்டின் சார்பாக தேடும் பணியில் அமர்த்த உதவுவதாக கூறியதாக அர்ஜென்டினா அதிபர் அதிபர் மௌரீசியோ மார்க்ரி தெரிவித்தார்.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட டஜனுக்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.

பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்ட மருத்துவர்

படத்தின் காப்புரிமை CBS

அமெரிக்க ஒலிம்பிக்ஸ்-இன் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு பிரிவின் முன்னாள் மருத்துவர் லாரி நசர், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக தன மீதான ஏழு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மிச்சிகன் மாநில பல்கலைகழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஏழு சிறுமிகளை இவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் பெரும்பாலானோர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்.

குற்றச்சாட்டுகளை நசர் ஒப்புக் கொண்ட நிலையில், 54 வயதாகும் அவருக்கு, சுமார் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :