அமெரிக்க அதிபர் தேர்தல்: ரஷ்யாவின் போலி பக்கங்களை அம்பலப்படுத்த ஃபேஸ்புக் முடிவு

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை வெளிநாடுகளில் இருந்து இயக்கிய போலி செய்தி பக்கங்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன்மூலம் தாங்கள் பின்பற்றிய ஃபேஸ்புக் பக்கம் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டதா என்பதை அமெரிக்க மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவில் இருந்து செயல்பட்ட ரஷ்ய அரசுக்காக பதிவேற்றப்பட்ட செய்திகளை, 12.6 கோடி அமெரிக்கர்கள் பார்த்திருக்கக்கூடும் என ஏற்கனவே அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

ரஷ்யாவை சார்ந்த இணைய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ள பக்கங்களை பின்பற்றி இருக்கிறார்களா என்பதை மக்கள் தெரிந்துகொள்ள பிரத்யேக வசதி ஒன்றையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த வசதி வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு பின்னாலிருந்து செயல்பட்ட அந்த இணைய ஆராய்ச்சி நிறுவனம், அதிலிருந்து ஆயிரக்கணக்கான அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption டொனால்டு டிரம்பின் வெற்றியில் ரஷ்யாவுக்கு உள்ள பங்கு குறித்து அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டு வருகிறது

ஹார்ட் ஆஃப் டெக்சாஸ், பீயங் பேட்ரியாடிக், மற்றும் செக்யூர்ட் பார்டர்ஸ் போன்ற ஃபேஸ்புக் பக்கங்களை, அமெரிக்கர்கள் தயாரித்தது போன்ற பிம்பத்தில் அவர்கள் வடிவமைத்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தது அபத்தமான செயல் என்று கடந்த 2006ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

அப்போதிருந்து, ரஷ்யாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களால் பதியப்பட்ட ஆயிரக்கணக்கான பதிவுகள் மற்றும் பணம் கொடுத்து செலுத்தப்பட்ட விளம்பரங்களை அந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளை பரப்ப அனுமதியளித்ததாகவும், இது குறித்த பிரச்சனைக்கான தீர்வு காண நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் விமர்சிக்கப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குறைபாடு ஒரு குறையல்ல என்று நிருபித்த மும்பை பெண்

டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்ற கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்தது.

"2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னரும், அதன் பின்னரும், ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் நம்மை பிளவுப்படுத்த முயற்சி செய்ததை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்" என ஃபேஸ்புக் தனது வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தது.

அதனால்தான், தாங்கள் கண்டுபிடித்த தகவல்களை பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிப்பதோடு, விசாரணை அதிகாரிகளுக்கும் அதனை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :