பாலி எரிமலை சீற்றம்: விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுப்பு

  • 26 நவம்பர் 2017
அகுங் எரிமலை படத்தின் காப்புரிமை AFP/GETTY

இந்தோனீஷியாவின் பாலி தீவிலுள்ள, அகுங் எரிமலை சீற்றத்தில் வெளியேறும் சாம்பல் நான்கு ஆயிரம் மீட்டர் வரை செல்வதால், விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் இந்தோனிஷ தீவுகளிலிருந்து இரண்டாவது முறையாக இத்தகைய சாம்பல் வெளியேறுகிறது. இதனால் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை என்றால், எரிமலை வெடிப்பு என்பது உடனடியாக இருக்கும் என்றும், அதிக அளவிலாக சாம்பல் போன்ற பொருட்கள் வெளிவரும் என்பதை முன்பே கண்டறிந்து கூறுவதாகும்.

சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்ய தொடங்கிவிட்டனர்.

பாலி ஒரு முக்கிய சுற்றுலாதளமாகும். அதன் மற்ற முக்கிய இடங்களான குட்டா மற்றும் செமின்யாக் ஆகிய இடங்கள் எரிமலையிலிருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளன.

இந்த தீவின் முக்கிய விமான நிலையம் தற்போதுவரையில் சாதாரணமாகவே இயங்கி வருகிறது. ஆனால், பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எரிமலையில் சாம்பல், விமானங்களின் எஞ்சின்களை பாதிக்கும்.

பாலியின் கிழக்கு பகுதியில் உள்ள லோம்போக் தீவில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் பேரிடர் மட்டுப்படுத்துதல் நிறுவனத்தின், தகவல்தொடர்பு இயக்குநர், மட்டாரமில் உள்ள லோம்போக் நகரில், சாம்பல் மழை பெய்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

"அகுங் மலையை சுற்றியுள்ள அபாயமான பகுதிகளை தவிர, பாலியில் சுற்றுலா என்பது இன்னும் பாதுகாப்பான ஒன்றாகதான் உள்ளது."

மலையை சுற்றி, 7.5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் உடனடியாக, `அமைதியான முறையில்` வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 1.4 லட்சம் மக்கள் வெளியேறியதை தொடர்ந்து, தற்காலிக தங்குமிடத்தில் இன்னும் 25 ஆயிரம் மக்கள் தங்கியிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

எரிமலையின் நடவடிக்கை அதிகரித்துள்ளதால், பெரிய வெடிப்பு ஏற்படும் என்ற அச்சமுள்ளது.

அபாயப்பகுதியை தாண்டி வாழ்ந்துவந்த மக்கள் உடனடியாக திரும்பி வருமாறு செப்டம்பரின் இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதுமுதல், எரிமலை இடைவிடாது முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறது.

படத்தின் காப்புரிமை ANTARA FOTO/WIRA SURYANTALA VIA REUTERS

இத்தகைய பெரிய வெளியேற்றங்களின் போது, சுற்றுலா மூலம் தீவிற்கு கிடைக்கவேண்டிய பொருளாதாரத்தில் 110 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தோனீஷியா, பசிபிக்கில் உள்ள டெக்டானிக் பிளேட் மோதும் `நெருப்பின் வட்டம்` என்று குறிப்பிடப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இதனாலேயே, அங்கு தொடர்ந்து எரிமலை சீற்றங்களும், நில அதிர்வுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.

இந்தோனேஷிய தீவில் தீவிர நிலையில் 130 எரிமலைகள் உள்ளன.

1963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்