பணமில்லாததால் 80 கி.மீ தூரத்திற்கு பேருந்தின் அடியில் அமர்ந்தபடியே பயணித்த சீன சிறுவர்கள்

பேருந்தின் அடியில் இருந்துகொண்டே 80 கிலோமீட்டர் (50 மைல்) பயணம் செய்த இரண்டு சீன சிறுவர்களின் புகைப்படங்களால், அந்நாட்டில் பெற்றோரால் தனியாக விடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்கள் பற்றி இணையத்தில் கோபமான விவாதங்கள் எழுந்துள்ளன.

படத்தின் காப்புரிமை SOUTHERN MORNING POST
Image caption பேருந்தின் அடியில் இருக்கும் சிறார்களின் காணொளிப் பதிவில் இருந்து எடுக்கப்பட்ட படம்.

சீன அரசு ஊடகத்தால் பெயர் குறிப்பிடப்படாத இந்த இரண்டு சிறுவர்களும், தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்ஸியின் ஏழை கிராமத்தை சேர்ந்தவர்கள். அருகிலுள்ள குவாங்தொங் மாகாணத்தில் வேலை செய்து வரும் அவர்களின் பெற்றோரை தேடி செல்ல இந்த சிறுவர்கள் முயற்சித்திருக்கிறர்கள்.

இந்த இரண்டு சிறுவர்களும் நவம்பர் 23 ஆம் தேதி காணாமல் போய்விட்டதை அவர்களின் ஆசிரியர் கண்டபிடித்த அன்றே, பேருந்து நிலையம் ஒரு நின்றிருந்த பேருந்து அடிப்பகுதியில் இந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சேறு பூசிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்களும், பேருந்தின் அடியில் அமர்ந்தவாறு இருப்பதைக் காட்டும் புகைப்படங்களும், காணொளிகளும் வெளியாயின.

பெற்றோரை காண விருப்பம்

இந்த சிறுவர்கள் சுமார் 8 முதல் 9 வயது உடையவர்கள். இந்தப் பேருந்து செல்லுகின்ற பாதையில் பேருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டபோது, பாதுகாப்பு பணியாளர்களால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக 'சதர்ன் மானிங்' போஸ்ட்" (நான்குவொ ஸாவ்பாவ்) தகவல் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 80 கிலோ மீட்டர் தொலைவில், ஏறக்குறைய 3 மைல்கள் செங்குத்தான சரிவுகளிலும் வாகனம் பயணம் செய்திருந்த நிலையிலும், அந்த சிறுவர்கள் காயப்படாமல் இருந்ததை பார்த்து ஊழியர்கள் தங்களுடைய "ஆச்சரியத்தை" தெரிவித்தனர்.

இந்த சிறுவர்கள் மிகவும் ஒல்லியாக இருந்ததால், பேருந்தின் அடிப்பகுதியில் மறைந்திருப்பதற்கு அவர்களுக்குத் தோதாக இருந்துள்ளது என்று ஓர் ஊழியர் செய்தித்தாளுக்கு தெரிவித்திருக்கிறார்.

கேள்வி கேட்டபோது பதிலளிக்க இந்த மாணவர்கள் விரும்பவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஊழியர் ஒருவர் மானிங் போஸ்ட் செய்தித்தாளிடம், "இந்த சிறுவர்கள் இருவரும் அவர்களுடைய தாயையும், தந்தையையும் பிரிந்து தவிப்பதை இறுதியில் நாங்கள் புரிந்து கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

"அவர்களின் பெற்றோரை தேடிக் கண்டுபிடிக்க விரும்பி அவர்கள் பேருந்தில் மறைந்திருந்து பயணம் செய்துள்ளனர். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது" என்று அவர் கூறியுள்ளார்.

உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது, அன்றே மாலையே அவர்கள் வந்து அந்த சிறுவர்களை அழைத்து சென்று விட்டனர்.

இதயத்தை நெகிழ வைத்த சம்பம்

இந்த சம்பவம் சீனாவில் இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிரபல சமூக வலைத் தளமான 'சீன வெய்போ'வில் ஆயிரக்கணக்கானோரின் விவாதப் பொருளாக இது மாறியுள்ளது.

இந்த புகைப்படங்கள் மிக விரிவாக பகிரப்பட்டுள்ளன. பல இணைய பயனர்கள் இந்த சம்பவத்தை மனதை நெகிழ வைத்த சம்பவமாக குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை SINA WEIBO

இளம் வயதிலேயே பெற்றோரை விட்டு பிரிந்து வாழும் குழந்தைகள் சீனாவில் இவர்களை போல பலர் உள்ளனர். யார் அவர்களை பராமரிக்கிறார்கள்? யார் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள்?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது சமூகத்தின் சோகக்கதை என்று இன்னொரு இணையதள பயனர் குறிப்பிட்டுள்ள நிலையில், இவ்வாறு பெற்றோரை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மூன்றாவது நபர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

வேலை செய்வதற்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள பெற்றோரின் குழந்தைகள் கிராமப்புறங்களில் உள்ளனர். இவ்வாறு பெற்றோரை பிரிந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் சீனாவில் உள்ளனர்.

இதில் பல குழந்தைகள் அவர்களின் தாத்தா, பாட்டியோடு, அல்லது வேறு வழிகளே இல்லாவிட்டால் அவர்களாகவே தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இரண்டு சிறுவர்களும் பள்ளியிலுள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

'கசப்பாகிப்போன சீனக் கனவு'

இந்த சம்பவம் 'சீனக் கனவு' என்ற கருத்தை இணையவாசிகள் கேலி செய்ய காரணமாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பிரபலப்படுத்தப்பட்ட 'சீனக் கனவு' என்ற இலக்கு தனிநபர் மற்றும் தேசிய குறிக்கோள்களை வகுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை KEVIN FRAYER/GETTY IMAGES

அந்த குறிக்கோள்களில் ஒன்று 2020ம் ஆண்டுக்குள் தேசிய அளவில் வறுமையை ஒழிப்பது என்பது. ஓர் இணையவாசி தெரிவித்துள்ள "சீனாவின் வளர்ச்சி தங்களுடைய உழைப்பு சுரண்டப்படும், இடம்பெயர்ந்து வேலை செய்வோரை வெகுவாக சார்ந்துள்ளது" என்ற பதிவை 200 பேர் விரும்பி 'லைக்' பதிவிட்டுள்ளனர்

இந்த இரண்டு "முட்டாள் குழந்தைகளுக்கு" "சீனக் கனவு கசப்பாகிப் போயுள்ளது" என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

"குழந்தைகளின் நலன்களை பராமரிப்பது இந்த சீனக் கனவில் சேர்க்கப்படவில்லையா? என்று மேலும் அவர்கள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :