ஹவாய்: அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை ஒலி சோதனை

அணுஆயுத தாக்குதல் எச்சரிக்கை ஒலி சோதனை படத்தின் காப்புரிமை Reuters

பனிப்போருக்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்காவின் ஹவாயில், அணுஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒலியின் சோதனை நடைபெற்றது.

வாகொரியாவின் அணு ஆயுத ஏவுகணைகளின் சோதனை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் குறித்து தொடரும் அச்சுறுத்தல்களுக்கு இடையே இந்த மாதாந்திர சோதனை மீண்டும் தொடங்கியுள்ளது.

வடகொரியா இதுவரையில் பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதோடு, கடந்த செப்டம்பர் மாதம், தனது ஆறாவது அணுஆயுத சோதனையையும் நிகழ்த்தியது.

பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மாதந்தோறும், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான எச்சரிக்கை ஒலிகளின் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஆனால், அணு ஆயுத சோதனைக்கான எச்சரிக்கை ஒலியானது சற்று வித்தியாசமாக ஒலிப்பதோடு, அடுத்தகட்ட அறிவிப்புகள் வரும் வரையில், மக்கள் வீட்டினுள்ளேயே இருக்குமாறும் கூறுகிறது.

1980களில், பனிப்போரின் போது, அணு ஆயுத தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிகள் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனை ஒலி, ஒவ்வொறு மாதத்தின் முதல் பணி நாளன்று ஒலிக்கப்படும்.

ஹவாயின் அவசர மேலாண்மை நிறுவனத்தின் தலைவரான வெர்ன் மியாகி, இந்த ஒலிகளில் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து வைத்திருக்க வேண்டியது 'மிக முக்கியம்` என்று கூறியுள்ளதாக ஹானலுலு ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணை, 20 நிமிடங்களில் ஹவாயை தாக்கக்கூடும் என்றும் அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க ராணுவத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைமையிடமாக ஹவாய் உள்ளது.

வடகொரியா சமீபத்தில் கண்டம்விட்டு கண்டம்பாயக்கூடிய ஏவுகணையை சோதனை செய்து பார்த்ததோடு, அமெரிக்காவின் எந்த முக்கிய பகுதியிலும் இதனால் தாக்கமுடியும் என கூறுகிறது.

துறை நிபுணர்களோ, ஹ்வாசாங்-15 என்ற அந்த ஏவுகணையால், அணுஆயுதத்தை சுமந்துகொண்டு ஒரு இடம்விட்டு வேறு இடம் செல்லமுடியும் என்றாலும், அந்த அளவிற்கு சிறியரக அணுஆயுதத்தை வடகொரியாவால் தயாரிக்க முடியுமா என்பது தெளிவற்ற விஷயமாக இருப்பதாகவே கூறுகிறனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்