2019-ல் பதவி விலகுகிறார் ஜப்பான் பேரரசர் - அடுத்தது என்ன?

  • 3 டிசம்பர் 2017
ஜப்பான் பேரரசர் ஆக்கிஹீட்டோ மற்றும் அரசி மீட்சிக்கோ படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption ஜப்பான் பேரரசர் ஆக்கிஹீட்டோ மற்றும் அரசி மீட்சிக்கோ

ஜப்பானின் பேரரசராக உள்ள ஆக்கிஹீட்டோ, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வயது மூப்பு காரணமாக பதவி விலக உள்ளார். இதனால் அந்நாட்டின் ஏகாதிபத்திய காலம் முடிவுக்கு வருகிறது.

அவர் பதவி விலகும் நேரம் குறித்து ஆலோசிக்க ஜப்பானிய அரசு மற்றும் குழுவினர் சந்தித்து பேசிய சில மணி நேரங்களில், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே இதற்கான தேதியை அறிவித்தார்.

வயது மற்றும் உடல்நிலை காரணமாக தனது கடமைகளை முழுமையாக செய்ய முடியவில்லை என 83 வயதான பேரரசர் ஆக்கிஹீட்டோ கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், இவர் பதவி விலகும் நேரம் குறித்து விவாதிக்கப்பட்டதை விட எதுவும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை.

பிரதமர் அபேவால் உருவாக்கப்பட்ட இம்பீரியல் ஹவுஸ்ஹோல்ட் கவுன்சில், சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் ஜப்பானின் அரச குடும்பம் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கூடி விவாதித்த பிறகு பேரரசர் பதவி விலகப் போகும் தேதி முடிவு செய்யப்பட்டது.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசிய அபே, பேரரசர் ஆக்கிஹீட்டோ 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி பதவி விலகுவார் என்பதை அறிவித்தார்.

இவர் பதவி விலகுவதையடுத்து ஹேய்சேய் சகாப்தம் முடிவுக்கு வர, மே ஒன்றாம் தேதி அவரது மகன் இளவரசர் நாரூஹீட்டோ பதவி ஏற்பார். இதனையடுத்து ஜப்பானில் புதிய ஏகாதிபத்திய காலம் ஆரம்பமாகும்.

பேரரசரின் பணி என்ன? பேரரசருக்கு எந்த அரசியல் அதிகாரங்களும் கிடையாது. ஆனால், வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்றல் போன்ற அதிகாரப்பூர்வ கடமைகள் உள்ளன. ஜப்பானின் மன்னராட்சி என்பது ஷிண்டோ மதத்தோடு பின்னப்பட்டதாகும். மதச் சடங்குகளை பேரரசரே முன்னிருந்து நடத்துவார்.

ஜப்பான் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? க்யோடோ செய்தி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் பேரரசரின் முடிவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 85 சதவீத மக்கள், விருப்பப்பட்டு பதவி விலகுவதை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

1989 ஆம் ஆண்டு இவரது தந்தை ஹிரோஹீட்டோ உயிரிழந்ததிலிருந்து அரியணையில் அமர்ந்த பேரரசர், இதய அறுவை சிகிச்சை மற்றும் சுரப்பை புற்றுநோய் சிகிச்சை பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption பேரரசர் பதவி விலகும் தேதி குறித்து முடிவெடுக்க நடைபெற்ற கூட்டம்

கடந்த ஆண்டு நாட்டு மக்கள் முன் உரையாற்றிய பேரரசர் ஆக்கிஹீட்டோ, உடல்நிலை மோசமாவதால் தன் கடமைகளை செய்ய கடினமாக இருப்பதாக தெரிவித்தார். அரியணையில் இருக்கும் போது உயிரிழந்தால் அது, தன் குடும்பத்திற்கும் ஜப்பானிய சமுதாயத்திற்கும் பேரிழுக்காகி விடும் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரை, அவர் பதவி விலக விருப்பம் தெரிவிக்கும் வகையில் இருந்தது. ஆனால் அப்போது அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமிருக்கவில்லை.

பேரரசரின் இந்த உரை, பொதுமக்களின் அனுதாபத்தை பெற்றது. மேலும் அவர் பதவி விலக அனுமதிக்கும் வகையிலான சட்ட முன்வரைவயும் ஜப்பானிய அரசு கொண்டு வந்தது.

Image caption ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்பம்

ஆனால் இந்த சட்டம், இவரது மகன் நாரூஹீட்டோவோ அல்லது அவருக்கடுத்து வருபவர்களோ இது போன்று பதவி விலக அனுமதிக்காது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்