கரப்பான்பூச்சிகளை கொண்டு சென்று விமான நிலையத்தில் சிக்கிய சீன தம்பதியர்

சீன விமான நிலையம் ஒன்றில் ஒரு தம்பதியின் பெட்டியை திறந்து பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிர்பாராத, மோசமான ஆச்சரியம் காத்திருந்தது.

படத்தின் காப்புரிமை KANKAN NEWS

நூற்றுக்கணக்கான உயிருள்ள கரப்பான்பூச்சிகள் அந்த பெட்டியில் இருப்பதை அவர்கள் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு குவாங்தொங் பாய்யுன் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் நவம்பர் 25 ஆம் தேதி எக்ஸ்ரே எந்திரத்தில் பரிசோதனை செய்தபோது, வயது முதிர்ந்த தம்பதியரின் பெட்டிக்குள் ஏதோ அசைவதுபோல தோன்றியதை கண்டுபிடித்துள்ளனர் என்று 'பெய்ஜிங் யூத் டெய்லி'யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வெள்ளை பிளாஸ்டிக் பையின் உள்ளே அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த கறுப்பு பொருட்கள் இருந்தன" என்று பாதுகாப்பு பணியாளர் ஸியு யுயு என்பவர் 'கான்கான் நியுஸிடம்' தெரிவித்துள்ளார்.

"ஊழியர்களில் ஒருவர் இந்தப் பெட்டியை திறந்தவுடன் கரப்பான்பூச்சிகள் வெளியே ஊர்ந்து வெளியேறின. அவர் ஏறக்குறைய கூக்குரலிட்டார்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கரப்பான்பூச்சிகளை கொண்டு செல்வதற்கான காரணத்தை அந்த முதிய தம்பதியரிடம் கேட்டபோது, தன்னுடைய மனைவியின் தோலுக்கு மருந்தாக பயன்படுத்த கொண்டு செல்வதாக கணவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை KANKAN NEWS

மனைவியின் உடல் நிலைமை பற்றி கணவர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால், இத்தகைய முறை பழைய நாட்டுபுற வைத்தியத்தின் ஒரு பகுதி என்று அதிகாரிகளிடம் விளக்கப்பட்டது. கரப்பான்பூச்சிகளை சில மருத்து கிரீமில் கலந்து தோலில் தடவ வேண்டும் என்று விவரிக்கப்பட்டது என்று ஸியு யுயு தெரிவித்தார்.

கையில் வைத்து கொள்ளும் பெட்டியில் உயிரினங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்த கரப்பான்பூச்சி பெட்டியை தம்பதியர் சுங்கத்துறை அதிகாரிகளிடமே விட்டு சென்றுவிட்டனர். அந்தப் பெட்டி என்ன ஆனது என தெளிவாக தெரியவில்லை என்று 'பெய்ஜிங் யூத் டெய்லி' தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்கின்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறான எதிர்பாராத அதிர்ச்சி பெறுவது இது முதல்முறையல்ல.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு பேருந்து நிலைய எக்ஸ்ரே பரிசோதனையில் கைகாலுறுப்புகள் இருப்பதாக தெரிந்த நிலையில், இரண்டு மனித கைகளை பெட்டியில் வைத்து கொண்டு சென்ற மனிதர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :