ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

  • 3 டிசம்பர் 2017

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்பின் பதிவால் சர்ச்சை

படத்தின் காப்புரிமை DREW ANGERER/GETTY IMAGES

எஃப்.பி.ஐ-யிடம் பொய் கூறியதற்காக, தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கில் ஃபிலின்னை பதவி நீக்கம் செய்வதாக, அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எஃப்.பி.ஐயின் விசாரணையை ஃபிலின் திசைதிருப்பி கொண்டு செல்வது, அதிபருக்கு முன்பே தெரிந்திருக்கிறது போலவும், அதனாலேயே, ஃபிலின் மீது நடக்கும் விசாரணையை கைவிடுமாறு எஃப்.பி.ஐ இயக்குநரிடம் வலியுறுத்தினார் என்பது போல இந்த நகர்வு தெரிவதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் செயல்கள் சட்டப்பூர்வமானது என்று கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்.

அதிபருக்கு எதிராக போராட்டம்

படத்தின் காப்புரிமை DON EMMERT/AFP/Getty Images

டோகோ நாட்டின் தலைநகரான லோமில், இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக, அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்திற்காக கூடியுள்ளனர்.

மக்கள் அந்நாட்டு அதிபரான ஃபோர் நியாசீங்பே பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அவரின் தந்தை 2005ஆம் ஆண்டு இறந்தது முதல் ஃபோர் அந்நாட்டை ஆண்டுவருகிறார்.

அவரின் குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக டோகோவில் ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் தற்போது, அரசுக்கு எதிர் அணியினருக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகின்றனர்.

தொடரும் தேடல் பணிகள்

படத்தின் காப்புரிமை EPA

தெற்கு அட்லாண்டிக்கில் காணாமல் போன சான் ஜுவான் நீர்மூழ்கியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆளில்லாத ரஷ்ய கப்பல், கடல்படுகையில் சோனார் கதிர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு வடிவங்களை ஆராய்ந்து வருவதாக அர்ஜெண்டீனா கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த வடிவங்கள், காணாமல் போன நீர்மூழ்கியின் பாகங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று வடிவங்களை ஆராய்ந்து வருவதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏமனில் தொடரும் சண்டை

படத்தின் காப்புரிமை MOHAMMED HUWAIS/AFP/Getty Images

ஏமனில், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வின் ஆதரவு படையினருக்கும் இடையே நான்காவது நாளாக சண்டை நீள்கிறது.

செஞ்சிலுவை சங்கத்தில் சர்வதேசக்குழு, இந்த சண்டையால், தலைநகர் சனாவில், டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த இரு குழுக்களுமே, அமைச்சர் பதவி மற்றும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய ஆட்சி பொறுப்புகளுக்கான சண்டையிட்டுக்கொள்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :