நீண்ட இடைவெளிக்கு பிறகு வடகொரியாவுக்கு ஐ.நா உயரதிகாரி பயணம்

ஃபெல்ட்மேன் படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

நான்குநாட்கள் பயணமாக, வடகொரியாவிற்கு ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவரான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன் செவ்வாய்கிழமை பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளில், ஐ.நாவின் உயரதிகாரி ஒருவர், வடகொரியாவிற்கு பயணிப்பது இதுவே முதன்முறை.

கடந்த செப்டம்பர் மாதம், `கொள்கை ரீதியான பேச்சுவார்த்தைக்காக`, வடகொரியா ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

கடந்த வாரம், கண்டம்விட்டு கண்டம்பாயக்கூடிய `மிக சக்திவாய்ந்த` ஏவுகணையை வடகொரியா ஏவிய பிறகு, ஃபெல்ட்மேனின் பயணம் நடக்கிறது.

ஃபெல்ட்மேன், முன்னாள் அமெரிக்க தூதர் மட்டுமல்லாது, ஐ.நாவில் முன்னிலையிலுள்ள அமெரிக்கர் ஆவார். அவர் வெள்ளிக்கிழமை வரையில், வடகொரியாவில் பயணம் மேற்கொள்வார்.

இதுகுறித்து பேசிய, ஐ.நாவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஃபெல்ட்மேன், வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங்-ஹூ உட்பட, மூத்த தலைவர்களை சந்திப்பார் என்றும், `இருதரப்பிற்கும் உள்ள பொதுவான விருப்பங்கள் மற்றும் வலியுறுத்தல்கள்` குறித்து கொள்கைரீதியான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை, ஃபெல்ட்மேன் சந்திக்கும் திட்டமில்லை.

அலுவல் ரீதியாக செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட வரவேற்பு, நவம்பர் 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதிதான், தனது சமீபத்திய ஏவுகணையை சோதனை செய்திருந்தது வடகொரியா.

சோலில் உள்ள பிபிசி செய்தியாளரான பால் ஆடம்ஸ், அலுவல் ரீதியாக பேசுவதற்கு, வேறு வாய்ப்புகளே இல்லை என்பதால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த வழியில் வாய்ப்பு கிடைத்தாலும், அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை ஐ.நா மிகத்தெளிவாக நம்புகிறது என்று தெரிவிக்கிறார்.

ஃபெல்ட்மேன், திங்கள்கிழமை சீனாவில் இருந்தார். வடகொரியாவிற்கு பொருளாதார ரீதியாக முக்கிய கூட்டாளியாக உள்ள சீனா, கடந்த மாதம், வடகொரிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிகாரிகளையும் அனுப்பி இருந்தது.

வடகொரியா விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறிய, ஐ.நாவின் பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டர்ஸ், அந்நாட்டிற்கு பயணிப்பது குறித்து இதுவரை எந்த திட்டமும் இல்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

கடைசியாக 2011 ஆம் ஆண்டு, அப்போதைய ஐ.நாவின் மூத்த தலைவராக இருந்த வேலரி ஏமாஸ், வடகொரியாவிற்கு பயணித்தார். ஃபெல்ட்மேனிற்கு முன்பு இருந்த அதிகாரியான லின் பாஸ்கோவும் 2010இல் பயணம் மேற்கொண்டார்.

படத்தின் காப்புரிமை Press Eye

வடகொரியாவில், ஐ,நா சபையின் ஆறு நிறுவனங்கள், 50 சர்வதேச பணியாளர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. அந்த அலுவலகங்கள், உணவு, விவசாயம் மற்றும் சுகாதார உதவிகள் ஆகியவற்றை மக்களுக்கு அளிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது அந்நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

வடகொரியா சக்திவாய்ந்த கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்துள்ள நிலையில், இந்த பயணம் நடக்கிறது.

ஐ.நாவிற்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹாலே, கடந்த வாரம் பேசுகையில், `போர் மூண்டால், வடகொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்` என்றார்.

திங்கட்கிழமை முதல், அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து, 200க்கும் அதிகமான விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான படைவீரர்களை கொண்ட கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இத்தகைய கூட்டுப்பயிற்சிகளை குறித்து பொதுவாக கண்டனம் தெரிவிக்கும் வடகொரியா, இந்த கூட்டுப்பயிற்சி தங்களை `தூண்டிவிடும் செயல்` என்று கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :