கேட்டலான் தலைவருக்கு எதிரான ஐரோப்பிய பிடி ஆணை ரத்து

கார்லஸ் பூஜ்டிமோன் படத்தின் காப்புரிமை Getty Images

பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்ட ஐரோப்பிய பிடி ஆணையை ஒரு ஸ்பெயின் நீதிபதி திரும்பப்பெற்றுள்ளார்.

ஒரு தலைபட்சமாக கேட்டலோனியா சுதந்திரத்தை அறிவித்த பிறகு இவர்கள் பெல்ஜியம் நாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.

ஐரோப்பியப் பிடியாணை ரத்து செய்யப்பட்டாலும், தேசவிரோதம் மற்றும் கிளர்ச்சிக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் இன்னும் எதிர்கொண்டுள்ளதாக நீதிபதி கூறினார்.

ஸ்பெயினில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கிளர்ச்சி கருதப்படுகிறது. இதற்கு 30 வருடங்கள் வரை சிறை தண்டனைக் கிடைக்கலாம்.

டிசம்பர் 21-ம் தேதி கேட்டலோனியா பிராந்தியத்தில் புதிய தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கான விருப்பத்தை கேட்டலோனியா தலைவர்கள் கூறியதை மேற்கோள்காட்டிய ஸ்பெயின் உச்சநீதிமன்ற நீதிபதி பப்லோ லலாரோ, பிடி ஆணையைத் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பிய பிடி ஆணை ஸ்பெயினின் சட்ட விசாரணையைச் சிக்கலாக்கும் எனக் கூறிய நீதிபதி, இதனை நீக்குவதன் மூலம் விசாரணையின் முழு கட்டுப்பாட்டையும் ஸ்பெயின் பெறமுடியும் என கூறினார்.

கடந்த மாதம் பிடி ஆணைப் பிறப்பிக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள் தானாக பெல்ஜியம் அதிகாரிகள் முன்பு ஆஜராகினர். ஆனால், விசாரணைக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற ஆறு கேட்டலோனியா அமைச்சர்களும் திங்கட்கிழமையன்று ஜாமினில் விடுதலையாகினர். ஆனால், கேட்டலோனியாவின் முன்னாள் துணை அதிபர் ஒரியல் ஜுனகார்ஸ் உள்ளிட்ட இருவர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேட்டலோனியாவில் புதிய தேர்தலுக்கான பிரசாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்