அமெரிக்கா-பாலத்தீனம் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து?

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்த பிறகு, அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கு எதிராக பாலத்தீனியர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜெருசலேம் டமாஸ்கஸ் கேட் பகுதியில் ஒரு இஸ்ரேலிய சிப்பாயும் பாலத்தீனிய முதியவரும்.

அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இடையே இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

பென்ஸின் பாலத்தீனிய வருகையை தாங்கள் விரும்பவில்லை என்று ஒரு மூத்த பாலத்தீனிய அதிகாரி முன்னதாக தெரிவித்தார்.

பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் ஃபடா கட்சி இது குறித்து ஐ.நா.விடம் முறையிடப்போவதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்.

இதே கருத்தை மற்ற அரபு நாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-பாலத்தீனர்கள் இடையே மோதல்

டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் மோதல் மூண்டுள்ளது. இஸ்ரேல் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption பென்ஸின் வருகைக்கு எதிராக மேற்கு கரை பகுதியில் எழுதப்பட்ட சுவர் வாசகங்கள்

இந்த மோதல்களில் 31 பாலத்தீனர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பாலத்தீனியர்கள் போராட்டம் நடத்துவதற்காக வீதிக்கு வந்ததால், அங்கு நூற்றுக்கணக்கான கூடுதல் துருப்புகளை அனுப்பியது இஸ்ரேல். போராட்டக்காரர்கள் டயர்களைக் கொளுத்தினர், கற்களையும் வீசினர். இஸ்ரேல் துருப்புகள் அவர்கள் மீது ரப்பர் குண்டுகளை சுட்டதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.

அமெரிக்க முடிவுக்கு பல நாடுகள் எதிர்ப்பு

இதனிடையே, சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :