தீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு; ஹமாஸ் தளங்களில் பதிலடி

இஸ்ரேலின் படத்தின் காப்புரிமை AFP
Image caption இஸ்ரேலின் விமானப்படை நடத்திய தாக்குதலில் 25 பேர் காயமடைந்ததாக பாலத்தீனிய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தங்கள் நாடு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக, ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலையில் ஒரு ஆயுத உற்பத்தித் தளத்தின் மீது, ஒரு வெடிபொருள் கிடங்கின் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

நேற்று காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. அதில் ஒன்று ஸ்டேராட் நகரத்தின் தெற்கு பகுதியைத் தாக்கியது.

இரு ராக்கெட்டை இடைமறித்ததாகவும், ஒன்று தரிசு நிலத்தில் காணப்பட்டதாகவும், ஒன்று ஸ்டேராட்டில் தரையிறங்கியதாகவும் இஸ்ரேல் கூறியது.

இதனையடுத்து ஹமாஸ் தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலின் விமானப்படை பல தாக்குதல்கள் நடத்தியது. இதில் 25 பேர் காயமடைந்ததாக பாலத்தீனிய சுகாதாரத்துறை அமைச்சர் ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை மேலும் பல வான் தாக்குதல் நடத்தப்பட்டது. சேதத்தின் முழு விவரமும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

வெள்ளிக்கிழமையன்று காஸாவில் நடந்த மோதலில், கூட்டத்தினரை நோக்கி இஸ்ரேல் படையினர் சுட்டதில், இரண்டு பாலத்தீனியர்கள் பலியாகினர்.

பல தசாப்தங்களாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக நடந்துவந்த நிலையில், இந்த மரபுகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு மத்திய கிழக்கில் பதற்றங்கள் உயர்ந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன் ஜெருசலேத்தில் மோதல்களைத் தூண்டியுள்ளது.

ஜெருசலேத்திற்கு தங்களது தூதரகத்தை மாற்ற முயலும் எவரும், ''பாலஸ்தீனியர்களின் எதிரி'' என மூத்த ஹமாஸ் தலைவர் ஃபாத்தி ஹம்மாத் கூறினார்.

டிரம்பின் அறிவுப்புக்கு எதிரான போராட்டங்கள் எங்கும் பரவியுள்ளன.

ஆயிரக்கணக்கான பாலத்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் ஜோர்டான், எகிப்து, இராக், துருக்கி, இரான், துனிசியா ஆகிய நாடுகளில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஐ.நாவை சாடிய அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்த பிறகு கூட்டப்பட்ட அவரச ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதர் நிக்கி ஹேலி பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் இடையில் அமைதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஐ.நா சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிக்கி ஹேலி

இஸ்ரேலுக்கு எதிராக மூர்க்கத்தனமான விரோதம் கொண்டுள்ள உலகின் முன்னணி அமைப்புகளில் ஐ.நாவும் ஒன்று என நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

''அமெரிக்காவின் முடிவு தெளிவாக அங்கீகரித்துள்ளது. ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்'' என நிக்கி கூறியுள்ளார்.

''அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும்'' என கூறிய அவர், ஐ.நா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நகர்வால், இனி அமெரிக்காவை ஒரு சமாதான தூதராக பார்க்கமுடியாது என பாலத்தீய பிரதிநிதி ரியாட் மான்சூர் இக்கூட்டத்தில் கூறினார்

இஸ்ரேலின் பிரதிநிதி டேனி டானன் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ''இது இஸ்ரேலுக்கு ஒரு மைல்கல்'' என அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.

ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.

3,30,000 பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமில் வசிக்கின்றனர். இவர்களுடன் டஜன் குடியிருப்புகளில் 2,00,000 இஸ்ரேலிய யூதர்கள் வசிக்கின்றனர். சர்வதேச சட்டத்தின்படி, இந்தக் குடியிருப்புகள் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :