ஜெருசலேம் சர்ச்சை: டிரம்பிற்கு எதிராக ஒன்று கூடிய அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள்

இஸ்ரேலுக்கும், படத்தின் காப்புரிமை Getty Images

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்தது, மத்திய கிழக்கில் வன்முறை மற்றும் குழப்பத்திற்கானஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என அரபு நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான பிரச்சினையில், அமெரிக்காவின் நடுநிலை டிரம்பின் முடிவால் முடிவுக்கு வந்துவிட்டது.

மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் தூதராக அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது என அரபு நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறத் துறை அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

மேற்கு கரை மற்றும் காஸா பகுதியின் வீதிகளில் மூன்றாம் நாளாக பாலத்தீனிய மக்கள் போராடி வரும்நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் உள்பட 22 நாடுகளின் அறிக்கை வெளியாகியுள்ளது.

ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த முடிவு, அமெரிக்க அதிபர் டிரப்பை பொருத்தவரை தனது பிரசார வாக்குறுதியை நிறைவேற்றும் செயல்.

ஆனால். இந்த முடிவுக்காகக் கடுமையான விமர்சனங்களை டிரம்ப் எதிர்கொள்கிறார்.

கொய்ரோவில் பேச்சுவார்த்தைகள் முடிந்த சில மணிநேரத்தில் இந்தத் தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்தது.

ஐக்கிய அரபு எமிரேட், செளதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட பல அமெரிக்க கூட்டாளி நாடுகள் இதற்கு ஆதரவளித்துள்ளன. இந்த நாடுகள் ஏற்கனவே தங்களது கவலைகளை தெரித்திருந்தன.

தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

  • இந்த முடிவின் மூலம் இஸ்ரேலிய பாலஸ்தீனிய சமாதான முன்னெடுப்பில் இருந்து, ஒரு தூதராக அமெரிக்கா தன்னை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • டிரம்பின் முடிவு ஆழ்ந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கோபத்தை மூட்டுகிறது மற்றும் பிராந்தியத்தில் மேலும் வன்முறை மற்றும் குழப்பங்களுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்படும்

இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்த பிறகு கூட்டப்பட்ட அவரச ஐ.நா பாதுகாப்பு கூட்டத்தில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

மற்ற 14 உறுப்பு நாடுகளும் டிரம்பின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்தன.

கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதர் நிக்கி ஹேலி, பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேல் இடையில் அமைதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை ஐ.நா சீர்குலைப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தீவிரமடையும் பாலத்தீனியர்களின் போராட்டம்

பாலத்தீனியர்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதியின் வீதிகளில் மூன்றாம் நாளாகப் போராடி வருகின்றனர்.

முன்னதாக தெற்கு இஸ்ரேஸ் நோக்கி ராக்கெட் ஏவப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக காஸா பகுதியில் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

மேற்கு கரையின் 20 இடங்களில் 600க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பாதுகாப்பு படை மீது கற்கலையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

வடக்கு இஸ்ரேலில் ஒரு பேருந்து மீது கற்கள் வீசப்பட்டது. இதில் 3 இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாக ஹாரெட்ஸ் என்ற இஸ்ரேலிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு நாளுக்கு முன்பு இஸ்ரேல் படையுடனான மோதலில் இரண்டு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்ட காஸா எல்லைப்பகுதியிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.

நேற்று காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டது.

இதற்குப் பதிலடியாக ஹமாஸ் இஸ்லாமிய குழுவின் இடங்களைக் குறிவைத்து இஸ்ரேஸ் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் குழுவின் உறுப்பினர் இருவர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க பாலஸ்தீன பேச்சுவார்த்தை ரத்து?

அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இடையே இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை நடக்காது என மஹ்மூத் அப்பாஸின் ஆலோசகர் மஜ்தி அல் கல்டி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''ஜெருசலேம் குறித்த சமீபத்திய முடிவால், அமெரிக்கா தனது அனைத்து சிவப்பு கோடுகளையும் தண்டியுள்ளது'' என மஜ்தி அல் கல்டி தெரிவித்துள்ளார்.

ஆனால், இது குறித்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் இருந்து எந்த கருத்தும் வரவில்லை.

இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.

3,30,000 பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேமில் வசிக்கின்றனர். இவர்களுடன் டஜன் குடியிருப்புகளில் 2,00,000 இஸ்ரேலிய யூதர்கள் வசிக்கின்றனர். சர்வதேச சட்டத்தின்படி, இந்தக் குடியிருப்புகள் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :