டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்கள்: "என்னை சதைப் பிண்டமாகப் பார்த்தார்"

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக குற்றஞ்சாட்டிய மூன்று பெண்கள் நாடாளுமன்ற விசாரணையை கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த மூவரும், டிரம்ப் தங்களை பாலியல் சார்ந்த எண்ணத்துடன் தொட்டதாகவும், அழுத்தியதாகவும், பலவந்தமாக முத்தமிட்டு, அவமானப்படுத்தி அல்லது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.

செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹோல்வே மற்றும் ரேச்சல் க்ரூக்ஸ் ஆகிய மூவரும் அவர்களது குற்றச்சாட்டுகளை தொலைக்காட்சி நேரலையில் விவரித்தனர்.

இப்பெண்கள் "பொய்யான குற்றச்சாட்டுகளை" கூறுவதாக வெள்ளை மளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டொனால்டு டிரம்ப் மீது பல பெண்கள் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக "16 பெண்களும் மற்றும் டொனால்டு டிரம்பும்" என்ற ஆவணப்படத்தை கடந்த மாதம் வெளியிட்ட 'பிரேவ் நியூ பிலிம்ஸ்' நிறுவனம்தான் திங்கள்கிழமை நடந்த இந்த செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சென்ற வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த மூன்று பெண்களும் டொனால்டு டிரம்ப் மீதான தங்களது குற்றச்சாட்டுகளை தனித்தனியாக பொதுவெளியில் வெளியிட்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் போன்ற பிரபலங்கள் மீது வைக்கப்படும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தற்போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த அமெரிக்க அழகி போட்டியின்போது டிரம்ப் தன்னிடமும் தனது சக போட்டியாளர்களிடமும் தவறான முறையில் பார்வையை செலுத்தியதாக திங்கட்கிழமையன்று என்பிசி நியூஸ் தொலைக்காட்சியில் ஹோல்வே கூறியிருந்தார்.

"அவர் எங்கள் அனைவரையும் வரிசையாக நிறுத்தினார்" என்றும் "என்னை ஒரு இறைச்சி துண்டு போலவே டிரம்ப் பார்த்தார்" என்றும் அப்போது 20 வயதிலிருந்த முன்னாள் வட கரோலினா அழகி கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"அவர்கள் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்துள்ளதால், டிரம்ப்பையும் விசாரிப்பது நியாயம்" என்று நினைத்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

"இது ஒரு சார்புள்ள பிரச்சினை அல்ல. இதுபோன்றுதான் ஒவ்வொரு நாளும் பெண்கள் நடத்தப்படுகின்றனர்."

தற்போது 70 வயதாகும் லீட்ஸ், தனக்கு 38 வயதிருக்கும்போது நியூயார்க்குக்கு சென்ற விமானத்தின் முதல் வகுப்பில் டொனால்டு டிரம்ப் அருகே அமர்ந்தபோது அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தன் மீது அவர் அப்படியே விழுந்ததாகவும்," அவர் தெரிவித்துள்ளார்.

"உண்மையில் டிரம்ப் எவ்வகையான மனிதர் என்றும் அவரின் ஒழுங்கீனத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் நான் விரும்பினேன்" என்று தான் குற்றச்சாட்டை எழுப்பியதற்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தினார்.

தனக்கு 22 வயதிருக்கும்போது டிரம்ப் டவரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை செய்தபோது, அங்குள்ள லிப்ட் ஒன்றின் வெளியே ட்ரம்ப் தனது உதட்டில் முத்தமிட்டதாக க்ரூக்ஸ் கூறியுள்ளார்.

"நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"கடந்த ஆண்டு நடந்த பிரச்சாரத்தின்போது சுமத்தப்பட்ட இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளுக்கு அப்போதே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், மேலும் அமெரிக்க மக்கள் ஒரு தீர்க்கமான வெற்றியை வழங்கியதன் மூலம் அவர்களின் தீர்ப்பை வெளிப்படுத்தினர்" என்றும் திங்கட்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

"இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் வெளிப்படுத்தப்பட்ட நேரமும், அபத்தமான தன்மையும் அவர்களுக்கு பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களை உறுதிப்படுத்துகிறது," என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ட்ரம்ப், அவர்களிடம் வழக்கு தொடுக்குமாறு சபதம் விடுத்தார். ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதரான நிக்கி ஹாலே,டிரம்ப் மீது குற்றஞ்சாட்டுபவர்களின் கூற்றுகள் "கேட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

"குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முன்வந்த பெண்களை எண்ணி தான் பெருமிதமடைவதாக" சிபிஎஸ் நியூஸிடம் பேசிய ஹாலே தெரிவித்தார்.

இதனிடையே, ஜனநாயக கட்சியை சேர்ந்த மூன்று செனட்டர்கள் நியூ ஜெர்சியின் கோரி புக்கர், ஓரிகானின் ஜெஃப் மெர்க்லே மற்றும் நியூயார்க்கின் கிர்ஸ்டன் கில்லிப்ரண்ட் ஆகிய இக்குற்றச்சாட்டுகளுக்காக டிரம்ப் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

பெண்ணுறுப்பை கையால் பற்றியது குறித்து டிரம்ப் பெருமையாகப் பேசியது போல தோன்றும் காணொளி ஒன்று கடந்த ஆண்டின் அதிபர் தேர்தலின் போது கசிந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :