சீனா: பெண்களுக்கான நல்லொழுக்கப் பள்ளிகள்

  • 13 டிசம்பர் 2017
சீனா: பெண்களுக்கான நாலொழுக்கப் பள்ளிகள் படத்தின் காப்புரிமை PEAR VIDEO

சமீப ஆண்டுகளாக, சீனாவின் பல்வேறு பகுதிகளிலும், பெண்களுக்கு நல்லொழுக்கங்களை கற்பிக்கும் மையங்கள் உருவாகியுள்ளன. இதில், வேலையையும் பெண்ணியமும் ஒன்று கலக்காது என்று பெண்களுக்கு கற்பிக்கப்படுகிறது. வீட்டு வேலைகளை அவர்கள் செய்யவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால், உண்மையில் இந்த கல்வி நிறுவனங்கள் எதைப் பற்றியவை?

வடசீனாவின், ஃபூஷன் நகரில், `பெண்ணுக்கு நல்லொழுக்கங்கள்` கற்பிக்கும், கலாச்சார கல்வி நிறுவனம் உள்ளது என்ற செய்தி வெளியானதும், நாடு முழுவதிலும் அந்த செய்தி கோபமூட்டியது.

இந்த பள்ளிகளில் கற்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கிய போதனைகள் இவை:

  • பணியில் சிறந்து விளங்கும் பெண்கள், வாழ்க்கையில் சிறந்து விளங்குவதில்லை.
  • பெண்கள், சமுதாயத்தின் விளிம்பில் தான் இருக்கவேண்டும், முன்னேறிவர முயற்சிகள் செய்யக் கூடாது.
  • "கணவர் அடிக்கும்போது, எதிர்த்து எந்த செயலையும் செய்யாதீர்கள். கணவர் திட்டும்போது, எதிர்த்து பேசாதீர்கள்"
  • ஒரு பெண், மூன்றுக்கும் அதிகமான ஆண்களோடு, உடலுறவு கொண்டால், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவார்.

ஃபூஷன் நகர நிர்வாகம், உடனடியாக எதிர்வினையாற்றியது. "இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படுபவை, சமூக நீதிக்கு எதிரானது" என்று, ஃபூஷன் நகரின் கல்விக்குழு, அறிக்கை வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PEAR VIDEO

சீன ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வந்த அழுத்தத்தால், ஆறு ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த கல்வி நிறுவனத்தை மூட, உத்தரவிடப்பட்டது.

சில காலங்களுக்கு முன்பு, ஃபூஷன் நிறுவனத்தில் வகுப்புகளில் பங்கேற்ற 17 வயதாகும் ஜிங், இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக, பிபிசியிடம் கூறியுள்ளார்.

13 வயதாக இருந்தபோது, ஜிங் மிகவும் சேட்டை செய்வதாக கூறி, அவரின் தாயாரால் அந்த கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டார். கலாச்சாரம் தொடர்பான கல்வி, அவரை ஒழுங்குபடுத்தும் என ஜிங்கின் தாயார் எதிர்பார்த்தார்.

ஜிங்கின் தாயார் கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்தார், குறைவான கல்வியே பெற்றிருந்தார்.

அங்கு நடந்த துன்பங்கள் இன்னும் நினைவிருப்பதாக கூறும் ஜிங், "பயிற்சியின் ஒரு பகுதியாக, கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்தேன். எவ்வளவு அறுவறுப்பான விஷயம் பாருங்கள்" என்று கூறினார்.

அந்த பணிகள், பெண்களால் செய்யப்பட வேண்டியவை என்றும், ஆண்களுக்கு பணியாற்றவே பெண்கள் பிறந்துள்ளதாகவும் அங்கு அவருக்கு கற்பிக்கப்பட்டது.

சுத்தம் செய்யும் பணியில் அவருக்கு ஏன் கையுறை அளிக்கப்படவில்லை என்றும், எதற்கு இந்த தேவையற்ற கடினங்கள் என்பது இப்போதும் ஜிங்கிற்கு புரியாமலேயே உள்ளது.

படத்தின் காப்புரிமை PEAR VIDEO

அடுத்த முக்கிய கற்பிக்கும் முறையின்படி, மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் மூத்தோரிடம் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாடத்திட்டம் என்பது, புராதாண கோட்பாடுகளை வாசிப்பதிலிருந்து, வீட்டுவேலைகளை அவர்கள் செய்ய பயிற்சி அளிப்பது வரை இருக்கும் என ஜிங் குறிப்பிடுகிறார். இதில், பிசியோதெரப்பி குழு பயிற்சிகளும் இருக்கும் என்கிறார்.

`குணமடைந்த பெண்கள்` என்ற தலைப்பிலான காணொளிகளை அவர்கள் பெண்களிடம் போட்டு காண்பித்தது தான், இருப்பதிலேயே மிகவும் அறுவறுப்பாக இருந்தது என்று ஜிங் தெரிவிக்கிறார்.

"அவர்கள் ஒன்றுக்கும் அதிகமான ஆண்களோடு உடலுறவு கொண்டதாகவும், அதனால் அவர்கள் உடல் முழுவதும் புண் வந்ததாக கூறினர். `பாரம்பரிய நல்லொழுக்கங்களை' கற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் ஆச்சரியகரமான வகையில் குணமடைந்து, நல்ல பெண்களாக மாறியுள்ளோம் என்று கூறினர்" என ஜிங் நினைவுகூர்கிறார்.

"சாதாரண மனிதர்கள் அமர்ந்து கேட்கக்கூடிய விஷயமாக அந்த 7 நாள் பயிற்சி இல்லை. அவர்களின் மூளைச்சலவையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நான்காவது நாள் இரவு, இரும்பு வேலியைத் தாண்டி, நான் ஓடி சென்றுவிட்டேன்" என்று ஜிங் தெரிவிக்கிறார்.

பீஜிங் மற்றும் ஷாங்காய் மாதிரியான நகரங்களில் பணியாற்றும், படித்த பெண்கள், இத்தகைய வகுப்புகள் உள்ளன என்பதை அறிந்து, அதிர்ச்சி கொள்கின்றனர்.

உண்மையில், இத்தகைய நிறுவனங்கள் பல காலங்களாக, சீனாவின் கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் இருந்துள்ளன.

படத்தின் காப்புரிமை PEAR VIDEO

மே மாதம், மத்திய சீனாவின், ஜியூஜியாங் நகரில் உள்ள பலகலைக்கழக மாணவர்களுக்கு, பெண்களின் கன்னித்தன்மையின் முக்கியத்துவம் மற்றும், உடல் தெரியும்படி ஆடைகளை அணிவது என்பது எந்த அளவிற்கு தவறான ஒரு செயல்பாடு என்பது குறித்தும் வகுப்பெடுக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு, டாங்குவான் நகரில் உள்ள கலச்சார மையத்தின் உறுப்பினர்களுக்கு, வேலையை முக்கியம் என நினைக்கும் பெண்கள், தங்களின் கருப்பையையும், மார்பகங்களையும் கூட வெட்டிக்கொள்வார்கள் என்று கற்பிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு, ஷென்சனின் தெற்குபகுதியில், ஒரு பெண் ஊழியர், விபச்சாரத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்தார். தனது கன்னித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள அவர் செய்த அந்த செயல் மிகவும் துணிச்சல் மிக்க ஒன்றாக பார்க்கப்பட்டு, நாடு முழுவதும் பாராட்டுகளை பெற்றது.

இத்தகைய `பெண் நல்லொழுக்கம்` என்பது, ஒரு பெண்ணின் நடத்தை குறியீடாக, சீனாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தந்தை, கணவர் மற்றும் மகனை மதித்தல்; தனது கன்னித்தன்மையை பாதுகாத்தல்; திறமையற்ற பெண்கள் நல்லொழுக்கம் கொண்டவர்கள் என்பதை புரிந்துகொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும்.

பண்டைய சீனாவில், இந்த சட்டங்கள் பெண்களை அடிமைப்படுத்தவும், சமூகத்தின் கீழ்நிலையிலேயே வைத்திருக்கவும், பள்ளிகளிலும், வீட்டுகளிலும் கற்பிக்கப்பட்டன.

1949 ஆம் ஆண்டு, சீனாவின் பீப்பிள் ரிப்ப்ளிக் கட்சி உருவாக்கப்பட்டபோது, அதன் நிறுவனர் மாவோ, `பெண்கள் வானின் பாதி இடத்தை பெற்றுள்ளனர்` என்று பேசும் வரை இது இருந்தது. அதன்பிறகே, சீனப் பெண்களின் சமூக நிலை உயரத்தொடங்கியது.

படத்தின் காப்புரிமை PEAR VIDEO

ஆதரவுக்குழுக்கள்

இத்தகைய எண்ணங்கள் கொண்ட நிறுவனங்கள் உண்மையில் சீன சந்தையில் செயல்படுமா? பெரும்பாலான மாணவர்கள் கிராம்புறங்களிலிருந்து வருகிறார்கள், குறைந்த கல்வி பெற்றுள்ளனர். சிலர் கணவரால் தவறாக நடத்தப்பட்டு, திருமணத்தில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள்.

தங்களைப்போன்ற பிரச்சனைகளை கொண்ட பெண்களை சந்தித்து பேசுவது, அவர்களின் மனதை அமைதிப்படுத்துகிறது. ஆண்களுக்கு கீழேதான் பெண்கள் இருக்கவேண்டும் என்று இந்த கல்வி நிறுவனங்கள் கற்றுத்தருவதை, தங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக அவர்கள் பார்க்கிறார்கள்.

"அடிப்படை உதவி என்பது, கொள்கைகளை வகுப்பவர்களிடமிருந்து வரவேண்டும்" என்று கூறுகிறார், கிராமப்புற பெண்களுக்கான பத்திரிக்கையின் ஆசிரியரான ஸீ லிஹுவா.

"கல்வியறிவு இல்லாமல் இருப்பது, சமூகத்தின் ஆதரவு, கிராமப்புறங்களில் பெண்களின் உரிமைக்கான சட்டரீதியான பாதுகாப்பின்மை ஆகியவையே இத்தகைய சித்தாந்தங்கள் உருவாக காரணம்" என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய `பெண் நல்லொழுக்க வகுப்புகள்` விவகாரங்களை பெரியதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அவர் கூறுகிறார்.

"வரலாற்றின் அலையை திருப்பமுடியாது. சீன சமூகம், ஆண், பெண் சமத்துவத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இத்தகைய விஷயங்களை பார்த்து சிரித்துவிட்டு, மறந்து போவதே சரியான செயல்" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :