பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் டிரம்ப் இணைப்பார்: பிரான்ஸ் நம்பிக்கை

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் சேர்ப்பார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்ரோங்- ட்ரம்ப்

பட மூலாதாரம், Reuters

அதே நேரம் அமெரிக்காவின் நிபந்தனைகள் விவாதிக்கப்படவேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்ரோங் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பாரிசில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டை ஒட்டி சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தம்முடைய நம்பிக்கையை மக்ரோங் வெளிப்படுத்தினார்.

சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துவிட்டு பிறகு அதிலிருந்து அமெரிக்கா வெளியேறிய விதத்தை அவர் கண்டித்தார். பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு தீவிரமானது என்றும் அவர் கூறினார்.

உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தவேண்டும் என்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் லட்சியத்தை நிறைவேற்றுவதில் உலகத்தை வழிநடத்தவேண்டும் என்று மக்ரோங் விரும்புகிறார்.

பருவநிலை பிரச்சினை எவ்வளவு பெரியது என்று தெரிந்திருந்தும் அதைத் தீர்க்க பெரிதாக ஒன்றும் செய்யாமல் விட்டதாக எதிர்காலத் தலைமுறையினரால் குற்றம் சுமத்தப்படுவதை தாம் விரும்பவில்லை என்று அவர் தமது பேட்டியில் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்னொரு கோள் இல்லை என்று கூறும் காலநிலை மாற்ற விழிப்புணர்வு விளம்பரம்.

வெப்பநிலை உயர்வுக்குக் காரணமான வாயுக்களை வெளியிடுவதை வேகமாக தடுத்து நிறுத்தவேண்டும் என்ற தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் 50 மூத்த அமைச்சர்கள், பிரதமர்கள் ஏதும் செய்வார்களா என்பதைப் பார்க்க விஞ்ஞானிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏழை நாடுகள் சுத்தமான மின் உற்பத்தி முறைகளை மேற்கொள்ள நிதி திரட்டுதல். புதிய நிலக்கரி மின் நிலையங்கள் அமைக்க வளர்ச்சி வங்கிகள் கடனுதவி செய்வதை நிறுத்துதல், தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியிடும் அளவைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தால் தங்களிடமுள்ள படிம எரிபொருள் சொத்துகள் மதிப்பிழக்குமா என்பதை வெளிப்படுத்துமாறு நிறுவனங்களை வலியுறுத்துதல் என்பது போன்ற முக்கியமான நிதிப் பிரச்சினைகளில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் தொழிலின் சர்வதேசத் தன்மை காரணமாக, தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியிடுவதில் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகளை பெருமளவில் அத்துறை மீறியே வந்துள்ளது. எனவே, காலநிலை சார்ந்த இலக்குகள் தொடர்பாக கப்பல் துறையைக் கட்டுப்படுத்தும் விதமான அறிவிப்புகளும் இந்த உச்சி மாநாட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தம்முடைய தொழிலில் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்படும் தாக்கங்களை தாம் ஆய்வு செய்யப்போவதாக பெரிய எண்ணை நிறுவனமான எக்சான் அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :