இந்தப் பெண்ணுக்கு இருப்பது தூக்கத்தில் பைக் ஓட்டும் வியாதி...

தண்ணீர் நிறைந்த பகுதிகள், பரபரப்பான சாலைகள் மற்றும் மலைமுகடுகளில், தூக்கத்தில் நடக்கும் நோய் உள்ளவர் பயணிப்பது என்பது அதிக ஆபத்து கொண்டது, தூக்கத்தில் வாகனம் ஓட்டும் நோயோ, மிகமிக ஆபத்தானது.

படத்தின் காப்புரிமை Getty Images

நரம்பியல் நிபுணரான கை லெஷெனர், ஜாக்கி என்கிற தன்னுடைய நோயாளி தூக்கத்தில் வாகனங்கள் ஓட்டுவதாக தெரிவிக்கிறார்.

"கனடாவிலிருந்து இங்கிலாந்திற்கு குடியேறிய பிறகு, ஒரு வயதான பெண்மணியின் வீட்டில் நான் குடியேறினேன்." என்று நினைவுகூர்கிறார் ஜாக்கி.

ஒருநாள் காலை, "நேற்று இரவு நீ எங்கு சென்றாய்?" என்று அவர் என்னை கேட்டார்.

எங்கும் அவ்வாறு செல்லவில்லை என்று ஜாக்கி பதிலளித்துள்ளார்.

`உங்களின் இருசக்கர வாகனத்தில் நீங்கள் சென்றீர்கள்` என்று அந்த வயதான பெண்மணி என்னிடம் கூறினார்` என்கிறார் ஜாக்கி.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜாக்கி, தலைக்கவசம் அணிந்திருந்தேனா என்று கேட்டார், அதற்கு ஆமாம் என்று அவரின் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயணித்தது குறித்து ஜாக்கிக்கு எந்த நினைவுமில்லை. அதை அவரால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஏனெனில், அவர், எப்போதும் வண்டியை நிறுத்துவது போல, சரியாக நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

கனடாவில் இருந்தபோது, பெண்கள் குழுவில் யாருமே தன்னுடைய கூடாரத்திற்குள் தூங்கமாட்டார்கள் என்கிறார் ஜாக்கி.

"நான் உறுமுவதைப் போல குறட்டைவிடுவேன். என்னுடைய உறுமல் என்பது, கரடி அருகில் வந்தது போல இருக்கும் என்பதால், யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்" என்று ஜாக்கி கூறுகிறார்.

வளர்ந்த பிறகு, நணபர்களுடனான பயணங்களிலும், அவரின் தூக்கத்தில் நடக்கும் நோயால் பல பிரச்சனைகள் இருந்துள்ளன.

"வீட்டிலும், மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, என் பெற்றோர் தூங்கும் இடத்தின் முன்பு நிற்பேன். அது என் தாயாரை மிகவும் பயமுறுத்தியது. ஆனால், என் தந்தை, கையை பிடித்து என்னை அழைத்துச்சென்று, மீண்டும் மாடியில் தூங்க வைப்பார்` என்று ஜாக்கி கூறுகிறார்.

சிறுவயதில், இது மிகவும் சாதாரணமான விஷயம். குழந்தைப் பருவத்தில், பலரும், தூக்கத்தில் நடப்பது, திட்டிரென கத்துவது என்று பல விஷயங்களை செய்வார்கள். ஆனால், பெரியர்வர்களாகிய பிறகும் அதை செய்யும்போது, பெற்றோரை அது சற்றே பயமுறுத்தும்.

இது குழந்தைகள் கனவு காண்பதால் ஏற்படுவதால் காலப்போக்கில் மறைந்துவிடுகிறது. ஆனால், 1-2 சதவிகித குழந்தைகளுக்கு வளர்ந்த பிறகும் இது தொடர்கிறது.

ஜாக்கி, இரவில் பைக் ஓட்டுவதை தவிர்க்க, தன்னுடைய இருசக்கர வாகனத்தின் சாவியை வீட்டு உரிமையாளரிடம் அளித்துவிட்டு தூங்க தொடங்கினார். அத்தோடு அந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைத்தார்.

ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு, தற்போது, சீஃபோர்ட் பகுதியில் வாழும் ஜாக்கி, தூக்கத்தில் கார் ஓட்டுகிறார்.

சமீபத்தில் சொகுசு கப்பலில் பயணம் மேற்கொண்ட ஜாக்கி, விபத்துகளை தவிர்ப்பதற்காக, இரவில், தனது அறையை வெளியே பூட்டிக்கொள்ளுமாறு கூறி கப்பல் ஊழியர்களின் உதவியை நாடியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்தில், இந்த செயல்பாடு எவ்வாறு நடக்கிறது?

டால்ஃபின்கள், கடல்நாய்கள் மற்றும் பறவைகளால், தங்களின் ஒருபக்க மூளையை மட்டும் தூங்கும் நிலைக்கு அனுப்ப முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால்தான், அவ்வற்றால் பறக்கவும், நீந்தவும் முடிகிறது. மனிதர்களிடம் இது சாத்தியப்படுவதில்லை.

நாம் தூங்கும்போது, நம் மூளையின் வெளிப்பகுதியான செரிபிரல் கோர்டெக்ஸில், `லோக்கல் தூக்கம்` என்று ஒன்று இயங்குகிறது.

தூக்கத்தில் நடப்பவர்களின் மூளையில், ஒரு பகுதியில், பார்க்கும் திறன், நடப்பது, உணர்வுகள் ஆகியவை இயங்குகின்றன. முடிவெடுக்கும் திறன், சிந்திக்கும் திறன் ஆகியவை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றன.

இதனைக்கொண்டு, எவ்வாறு, தூக்கத்தில் நடப்பவர்களால், விழித்துக்கொண்டு, பேசிக்கொண்டு, வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களை செய்ய முடிகிறது என்பதை விளக்க முடிகிறது.

தூக்கத்தின் பல அம்சங்களைப்போல, இதுவும் மரபணுவுடன் தொடர்புடையதாக இருக்கலாம், கையின் பல நோயாளிகள், தங்கள் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு இத்தகைய நான்-ஆர்.இ.எம் பாராசோமானியாஸ் நோய் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜாக்கியும் கடைசியில் 'கை'யின் மருத்துவமனையை அடைந்தார். அதுவரையில் தனது நிலையை சமாளிக்க அவர் சில வழிகளை கண்டறிந்திருந்தார்.

தற்போது அவர், நேரத்தை கணக்கிட்டு பொருட்களை பூட்டி வைக்கும் பெட்டியை பயன்படுத்துகிறார். இதனால், இரவு முழுவதும் சாவி அதனுள்ளேயே இருக்கிறது. பாதுகாப்பிற்காக, பக்கத்து வீட்டுகாரர்களிடமும் ஒரு சாவியை கொடுத்துள்ளார்.

இது போன்ற செயல்பாடுகள், பிறருக்கு அசௌகரியமாகவோ, நமக்கு சங்கடமாகவோ அமையக்கூடும்.

"எனக்கு தெரிந்த ஒருவர், தினமும் இரவு எழுந்து, தேசிய கீதம் பாடிவிட்டு, மீண்டும் உறங்கிவிடுவார்" என்கிறார், யேல் பல்கலைக்கழக பேராசிரியர் மியர் கிரைகர்.

"இத்தகைய பிரச்சினையில் உள்ளவர்கள், கார் ஓட்டினாலோ, சாலையில் நடக்க ஆரம்பித்தாலோ, கத்தி போன்றவற்றை பயன்படுத்த தொடங்கினாலோ, மிகவும் ஆபத்தாக முடியும்" என்கிறார் அவர்.

தூக்கத்திற்கு இடையூராக உள்ள எந்த காரணிகளும் இத்தகைய பழக்கவழக்கங்கள் வர வழிவகுத்துவிடுகின்றன.

படத்தின் காப்புரிமை Science Photo Library

தூக்கத்தை மேம்படுத்துவதும், அதற்கு இடையூறாக உள்ளவற்றை சரிசெய்வதன் மூலமும் இந்த நிலையை மேம்படுத்த முடியும். ஒரு சில நேரங்களிலேயே மருந்துகளால் பலன் இருக்கும்.

மனிதர்கள், ஒன்று விழித்திருப்பார்கள் அல்லது தூங்குவார்கள் என்று நினைத்திருக்கிறோம். ஆனால், இதுபோன்ற விஷயங்கள் அவ்வாறு இல்லை என்பதை நமக்கு விளக்குகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்