"ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்"

ரோஹிஞ்சாக்கள்

மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது.

மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிடத்தக்கது.

மியான்மர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட "பரவலான வன்முறையின் தெளிவான அறிகுறி" எனவும் எம்.எஸ்.எஃப் குறிப்பிட்டுள்ளது.

இது "தீவிரவாதிகளின்" தாக்குதல் எனக்கூறிய மியான்மர் ராணுவம், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கடந்த ஆகஸ்டிலிருந்து 6 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்துக்கு தப்பியுள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 25ம் தேதியில் இருந்து செம்டம்பர் 24ம் தேதி வரை 9,000 ரோஹிஞ்சாக்கள் மியான்மரில் உயிரிழந்துள்ளதாக உதவிக்குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.

மிகவும் குறைத்து மதிப்பிட்டாலும்கூட ஐந்து வயதுக்கு உட்பட்ட 730 குழந்தைகள் உட்பட சுமார் 6,700 பேர் அங்கு நடைபெற்ற வன்முறை காரணமாக உயிரிழந்ததாக எம்.எஸ்.எஃப் கூறுகிறது.

முன்னதாக, பெரும்பாலான முஸ்லீம் தீவிரவாதிகள் என்று கூறப்பட்டவர்களை உள்ளடக்கிய 400 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான வழக்கா?

ஜொனாதன் ஹெட், தென் கிழக்கு ஆசியா செய்தியாளர்

செய்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அகதிகளுடன் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலான விரிவான அறிக்கைகள் ஏராளமாக உள்ளன. இது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை மறுக்க முடியாததாக ஆக்கியுள்ளது.

ஆனால் பெரும்பாலான இந்த அறிக்கைகள், மோசமான உதாரணங்களை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன; பெரும்பாலான ஊடகங்கள் துலா தொலி என்ற ஒரு கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகைள் குறித்து செய்திகளை வெளியிட்டன. நான் ஒருவரை நேர்காணல் எடுக்கையில், தாங்கள் வன்முறைக்கு பயந்து தப்பி ஓடியதாகவும், ஆனால் உண்மையில் அதை அனுபவித்திருக்கவில்லை என்றும் அந்த ரோஹிஞ்சா தெரிவித்தார்.

மனித நேயத்துக்கு எதிராக ராணுவம் செய்த இந்தச் செயல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு கொடுமையானது என எம்.எஸ்.எஃப்பின் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்துக்கு மியான்மர் ஒப்புதல் அளிக்காததால் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது ஓர் பிரச்சினை. மேலும் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ஒப்புதல் தேவை. ஆனால் மியான்மர் அரசு இந்த சிக்கலைக் கையாளும் விதத்துக்கு நிரந்தர உறுப்பு நாடான சீனா ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரோஹிஞ்சா போராளிகள், 30 போலீஸ் சாவடிகளைத் தாக்கியதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

உள்நாட்டு விசாரணைக்கு பிறகு, நெருக்கடி குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் மியான்மர் ராணுவம் தங்களை விடுவித்து கொண்டது.

பொதுமக்களை கொன்றது, கிராமங்களை எரித்தது, பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்புணர்வு செய்தது, மற்றும் உடைமைகளை களவாடியது போன்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுத்தனர்.

வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனக்கூறி, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மியான்மர் மறுத்து வந்தது. ரோஹிஞ்சாக்கள் என்று குறிப்பிடாத அந்நாட்டு அரசு அவர்களை வங்காள முஸ்லிம்கள் என்று அழைக்கிறது.

மியான்மர் அரசின் வலியுறுத்தல்கள் பிபிசி செய்தியாளர்கள் பார்த்த ஆதாரங்களுக்கு முரணாக உள்ளது.

மேலும், "மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான மிகச்சரியான எடுத்துக்காட்டு" என ஐ.நா மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

"வன்முறை காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்ததாக பலர் கூறியதையும், மேலும் அவர்கள் கொலை செய்யப்பட்டது மற்றும் படுகாயமடைந்த கொடூரமான முறைகளை நாங்கள் வெளிப்படுத்தியது அதிர்ச்சியளிக்கும் ஒன்று" என எம்.எஸ்.எஃப்பின் மருத்துவ இயக்குனர் சிட்னி வாங் தெரிவித்தார்.

எம்.எஸ்.எஃப் கூற்றுப்படி,

  • வன்முறை தொடர்பான உயிரிழப்புகள் 69% துப்பாக்கிச்சூடு மூலம் நிகழ்ந்துள்ளன.
  • வீடுகளுக்கு தீ வைத்ததினால் உயிரிழந்தவர்கள் 9% பேர்.
  • அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 5% பேர்.

ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதில் 59% பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 15% பேர் எரிக்கப்பட்டதாகவும், 7% பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கண்ணி வெடிகளால் 2% பேர் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

"வங்க தேசத்தில் குடியேறியுள்ள அனைத்து அகதி முகாம்களிலும் கணக்கெடுக்கவில்லை மற்றும் மியான்மரில் இருந்து வெளிவராத குடும்பங்களும் இக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மதிப்பிடப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்," என்றும் வாங் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம், லட்சக் கணக்கான அகதிகளை திருப்பி அனுப்ப மியான்மர் நாட்டுடன் ஒரு உடன்படிக்கையில் வங்க தேசம் கையெழுத்திட்டது.

மக்கள் இன்னும் மியான்மரிலிருந்து தப்பி வருவதாலும், சமீப வாரங்களில்கூட வன்முறை குறித்த செய்திகள் வந்து கொண்டிருப்பதாலும் இந்த உடன்படிக்கை காலம் கனியும் முன்பே போடப்பட்டதாக எம்.எஸ்.எஃப் கூறியது.

மேலும், ரக்கைன் மாகாணத்தில் இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே உதவிக் குழுக்கள் அணுக முடிவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ரோஹிஞ்சாக்கள், நீண்ட காலங்களாக மியான்மரில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஆவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :