40 குழந்தைகள் மீதான வல்லுறவு: காங்கோவின் ஆயுதக் குழுவினருக்கு சிறை

40 குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக காங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதக் குழுவினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

2013 முதல் 2016ம் ஆண்டு வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் 8 மாதம் முதல் 12 வயது வரையான பெண் குழந்தைகளாவர்.

இந்தக் குற்றவாளிக் குழுவின் தலைவராக பிரடெரிக் பாடுமைக் என அழைக்கப்படும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, பாலியல் வன்முறைக்கு தண்டனை விலக்கு என்பது முடிவுக்கு வந்துள்ளதை காட்டும் அறிகுறியாக விளங்குவதாக உள்ளூர் செயற்பாட்டாளர்கள் புகழ்ந்துள்ளனர்.

"இந்த மாதிரியான குற்றங்களை பற்றி எண்ணி பார்க்கின்ற எந்தவொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள மிக வலுவான அறிகுறி இந்த தண்டனை" என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சார்லஸ் குவாகா சிகுரா என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கில் அமைந்திருக்கும் தென் கிவ்யு-விலுள்ள காவுமுவில் மக்கள் நிறைந்திருந்த தீர்ப்பாயத்தில் மனித குலத்திற்கு எதிரான இந்த குற்றத்திற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

டிஜெஷி யா யேசு (இயேசுவின் படை) ஆயுதக் குழுவைச் சேர்ந்த இந்த குற்றவாளிகள் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றங்கள் செய்தததால் அவர்களுக்கு மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக ராணுவ தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்த குற்றவாளிகள் மீதான கொலை, கிளர்ச்சி இயக்கத்தில் உறுப்பினராக இருந்தது மற்றும் சட்டப்பூர்வமற்ற முறையில் ஆயுதங்கள் வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 18 பேர் விசாரிக்கப்பட்டதில் இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த குற்ற சம்பவங்களில் பல, இரவு வேளையில் நடைபெற்றுள்ளன. கன்னிப் பெண்களின் ரத்தம் இயற்கைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பை தங்களுக்கு வழங்கும் என்று இந்த மனிதர்கள் நம்பியதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Alamy

பாலியல் வல்லுறவை போர் காலத்தில் ஆயுதமாக பயன்படுத்துக்கின்ற காங்கோ ஜனநாயக குடியரசில், கடுமையான பாலியல் காயங்களுக்கு வழங்கும் சிகிச்சையில் நிபுணரான குழந்தை மருத்துவர் டெனிஸ் முக்வேகே, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தகைய சம்பவங்களின் அதிகரிப்பு பற்றி ஆட்சியாளர்களுக்கு தகவல் வழங்கினார்.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டோருக்கு தலா 5 ஆயிரம் டாலர் இழப்பீட்டு தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதப்படையால் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினருக்கு 15 ஆயிரம் டாலர் வழங்கப்படுகிறது என்று செயற்பாட்டாளர் குழுக்கள் தெரிவித்துள்ளன.

போரின்போது நடைபெறும் பாலியல் வன்முறை பற்றிய முன்னாள் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மார்கோட் வால்ஸ்டாம், காங்கோ ஜனநாயக குடியரசை "உலக நாடுகளின் பாலியல் வல்லுறவின் தலைநகரம்" என்று முத்திரை குத்தினார்.

2காவுமுவில் நடைபெற்ற அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியாத தொடர் தோல்வியின் விரக்தியால் ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் அதிகாரி ஒருவர் பதவி விலகினார் என 2016 ஆம் ஆண்டு 'கார்டியன்' செய்தி வெளியிட்டது.

காங்கோ ஜனநாயக குடியரசில் நடைபெற்ற அதிக எண்ணிக்கையிலான முந்தைய சம்பவங்களில், என்ன நடந்தது என்பதை பற்றி சொல்ல தாங்கள் வெட்கப்படுவதாகவும். தங்களுடைய கணவர்கள் மற்றும் குடும்பங்களால் கைவிடப்படுவதை தவிர்ப்பதற்காக அது பற்றி ரகசியம் காப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற மோதல்களால் காங்கோ ஜனநாயக குடியரசின் பெரும்பாலான கிழக்கு பகுதி பல்வேறு ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :