அமெரிக்கா: "இணைய சமநிலை" விதிகளில் மாற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க ப்ராட்பேன்ட் வழங்குநர்கள் ஒரு சேவையை விட மற்றொரு சேவைக்கு வேகத்தில் முன்னிலை தருவதைக் கட்டுப்படுத்தும் தடைகளை ஒழுங்குமுறை ஆணையம் குறைக்க உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் மத்திய தகவல் ஆணைக்குழுவில் (FCC) நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக மூன்று பேரும் எதிராக இருவரும் வாக்களித்துள்ள நிலையில், நெட் நியூட்ராலிட்டி எனப்படும் "இணைய சமநிலை"யை நிர்வகிக்கும் முறை மாற்றத்திற்கு உள்ளாகிறது.

இணைய சேவை நிறுவனங்கள் தற்போது, வெவ்வேறு இணைதளங்களின் வேகத்தை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். மேலும், பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் சேவைக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கவும் முடியும்.

ஆனால், அவர்கள் இவ்வாறு செய்வதை வெளிப்படுத்த வேண்டும்.

வாக்களிப்பு நடைபெறும் முன், இந்த மாற்றத்தை எதிர்த்து எஃப்.சி.சி கட்டடத்தின் வெளியே இணையச் சமநிலை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா அரசு கொண்டுவந்த விதிகளை மாற்றியமைப்பதால், இணைய சேவை என்பது குறைந்தளவு வெளிப்படையானதாகவும், குறைவாக அணுகக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிடும் எனப் பலரும் வாதாடுகின்றனர்.

எஃப்.சி.சியின் இந்த மாற்றம் குறித்த முடிவு ஏற்கனவே பல சட்டச் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஷ்னைடர்மன் இதற்கு எதிரான வழக்கை தாம் முன்னெடுத்து நடத்தப் போவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் நடைமுறை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடு குறித்து விசாரிக்க எஃப்.சி.சி தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய எரிக், சுமார் 2 மில்லியன் இணையக் கணக்குகள் மூலம், அவற்றில் பல இறந்தவர்களுடையது, இணையதளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிப்பதுண்டு என விமர்சித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது எதிர் தரப்பில் வாதாடிய எஃப்.சி.சி ஆணையர் மைக்கல் ஓ ரீலி, ஊழியர்கள் அவற்றைப் பரிசீலித்து முறையற்ற கருத்துகளை அகற்றுவதாக கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய தகவல் ஆணைக்குழு தலைவர் அஜித் பை வாதாடுகையில், இந்த மாற்றம் புதுமைகளை கொண்டு வருவதோடு, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு விரைவான இணைப்புகளை வழங்க இணைய சேவை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்குமென கூறினார்.

இந்த மாற்றத்தை "இணைய சுதந்திரத்தை மீட்டெடுப்பது" எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தொழில்நுட்ப ரீதியாக, தொலைத் தொடர்புக்கு மாறாக, பிராட்பேண்ட் இணையத்தை தகவல் சேவையாக வகைப்பாடு செய்யவே இந்த முடிவு பயன்படும்.

இதன் விளைவுகள் என்னவென்றால் இனி மத்திய தகவல் ஆணைக்குழு, இணைய சேவை நிறுவனங்களை நேரடியாக ஒழுங்குபடுத்த முடியாது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதற்கு பதிலாக, வர்த்தக ஆணைய கூட்டமைப்பிற்கு இந்த அதிகாரம் வழங்கப்படும். தரவுகளை முடக்குதல், நெருக்குதல் அல்லது இணைய போக்குவரத்துக்கு முன்னிலை அளித்தல் போன்றவற்றை நிறுவனங்கள் வெளிப்படுத்துகின்றனவா என்பதை சரிபார்ப்பதுதான் இந்த கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பு.

"இணைய சமநிலையை நிர்வகிக்கும் முறையை மாற்றுவது என்பது நுகர்வோர் தீங்கு விளைவிக்கும் வகையில், பெருநிறுவனங்களுக்கு ஆதரவான வகையில் மற்றும் இணைய சுதந்திரத்தை அழிக்கும் வகையில் உள்ளது" என ஜனநாயகக் கட்சியின் மீன்யொன் க்ளைபர்ன் தெரிவித்தார்.

ஆனால், இணைய சமநிலை முடிவானது, "தொலைதொடர்பு மேதாவிகளின் குழந்தைகளுக்கு அச்சத்தை உண்டாக்கும் கதை" என குடியரசுக் கட்சியின் ஓ ரீலி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்