"கடலடி கேபிள் தொடர்புக்கு ரஷ்யாவால் ஆபத்து" - பிரிட்டன் ராணுவ அதிகாரி

கடலுக்கடியில் போட்டப்பட்டுள்ள தகவல் தொடர்பு மற்றும் இணைய வசதி வழங்கும் கேபிள்களுக்கு ரஷ்யாவால் புதிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளதாக பிரிட்டனின் மிகவும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

பிரிட்டனும், நேட்டோவும் தகவல் தொடர்பு இணைப்புக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தேவையாகிறது என்று பாதுகாப்பு படை ஊழியர்களின் தலைவரும், விமானப்படையின் தலைமை தளபதியுமான மார்ஷல் சர் ஸ்டூவர்ட் பீச் தெரிவித்திருக்கிறார்.

இந்த இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டால் அல்லது தொடர்பு அறுந்து போய்விட்டால், அது "உடனடியாகவும், பேரழிவுக்கான சாத்தியத்தையும்" ஏற்படுத்தி பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

குறுக்கு நெடுக்காக செல்லும் கேபிள்களின் இந்த வலையமைப்பு, நாடுகளையும் கண்டங்களையும் இணைக்கிறது..

'பாலிசி எக்ஸ்சேஞ்ச்' என்ற ஆய்வு அமைப்பின் சமீபத்தின் அறிக்கையின்படி, உலகின் கடலடி கேபிள் வலையமைப்பு 213 தனிப்பட்ட கேபிள் அமைப்புக்களையும், 5 லட்சத்து 45 ஆயிரத்து 18 மைல் (8 லட்சத்து 77 ஆயிரத்து 121 கிலோமீட்டர்) ஒளியிழைகளையும் கொண்டுள்ளது.

ஒரு நாட்டிற்கு சொந்தமான உடைமை என்ற முறைமை இல்லாதிருப்பது, சர்வதேச சட்டத்தில் இந்த கேபிள் இணைப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு இல்லை என்பதை பொருள் படுத்துகின்றது.

இருந்தாலும், 97 சதவீத உலக தகவல் தெடர்பும், தினமும் 10 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள நிதிப் பரிமாற்றங்களும் பெருங்கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள கேபிள்கள் மூலம் நடைபெறுகின்றன.

ராயல் யுனைட்டட் சர்வீஸஸ் அமைப்பிடம்பேசிய சர் ஸ்டீயர்ட், கடலுக்கு அடியில் இடப்பட்டிருக்கும் தொடர்பு கேபிள்களின் பாதுகாப்பு பலவீனம் "நம்முடைய வாழ்க்கைக்கு புதிய ஆபத்தை" ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

"ரஷ்யா தன்னுடைய படையை, அணு மற்றும் பாரம்பரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களை உள்ளடக்கிய தமது கடற்படையை நவீனப்படுத்துவதன் மூலம் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், நேட்டோ அமைப்பு, கடல்வழி கேபிள்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TELEGEOGRAPHY

"இந்தப் பணியானது நேட்டோவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்வது மிக மிக முக்கியமானது" என்று அவர் தெரிவித்தார்.

"புதிய கப்பல்களை, நீர்மூழ்கிக் கப்பல்கள் சேர்ப்பதுடன் மட்டுமின்றி, வழக்கமான திறன்களையும், தகவல் தொடர்புப் போர்க்கருவிகளையும் மேம்படுத்தும் பணிகளை ரஷ்யா தொடர்வதே இதற்குக் காரணமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் கடற்படை நவீனமயமாக்கத்தை புரிந்து கொண்டு அதற்கு இணையாக உருவாவதற்கு, பிரிட்டனும், அதனுடைய கூட்டாளி நாடுகளும் செயல்படுவது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடலடி கேபிள்கள் எங்கே?

கடல் படுகைகளில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் கேபிள்கள் பாதிக்கப்படுவதால் நம்முடைய வாழ்க்கைக்கு புதிய ஆபத்து ஏற்படும் என்று அவர் கூறினார்.

"இந்த இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டால் அல்லது தொடர்பு அறுந்து போவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அது "உடனடியாகவும், பேரழிவு சாத்தியத்தையும்" ஏற்படுத்தி பொருளாதாரத்தையும், பிற வாழ்க்கை பாதைகளையும் பாதிக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான 'பாலிசி எக்ஸ்சேஞ்ச்' வெளியிட்ட அறிக்கையில் பல கேபிள் தொடர்புகளில் ஆபத்து ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை MOD

"கடலுக்கு அடியில் இடப்பட்டிருக்கும் கேபிள்கள் இந்த காலத்தின் தவிர்க்க முடியாத உள்கட்டுமான வசதிகள். நம்முடைய நவீன வாழ்க்கைக்கும். டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானவை. இருப்பினும் அவை போதுமான வகையில் பாதுகாக்கப்படாமல், பகைமை மனப்பான்மையடைய நாடுகள் மற்றும் பயங்கரவாதிகளால் கடலிலும், நிலத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகும் உயர் ஆபத்தில் உள்ளது" என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை எழுதியவரும், பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷி சுனாக், பிரிட்டனின் கடலடி தகவல் தொடர்பு கேபிள்கள் வலையமைப்பில் வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டால், அது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை "முடக்குகின்ற பேரடி"யாக அமையும் என்று எச்சரித்திருக்கிறார்.

இந்த கேபிள்கள் போடப்பட்டுள்ள இடங்கள் தனியாகவும், பொதுவாகவும் தெரிய வந்துள்ளதை தெரிவித்துள்ள அவர், வெற்றிகரமான ஒரு தாக்குதல் நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்கிறார்.

இந்த ஆவணத்திற்கு ஒரு முன்னுரையை எழுதிய, முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியும், முன்னாள் நேட்டோ உயர்மட்ட அதிகாரியுமான தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவிரிடிஸ், வானத்திலுள்ள செயற்கைக்கோள்கள் அல்ல, பெருங்கடலில் போடப்பட்டிருக்கும் குழாய்கள்தான் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

சீனா, இரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவதற்கு சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தேவைப்பட்டால், உலக நீர்மூழ்கிக் கப்பல் வலையமைப்பின் கேபிள்களை பாதுகாக்க நேட்டோ தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரிட்டனின் சேனல் தீவுகளை இணைக்கின்ற மூன்று கடலடி இணைய கேபிள்களை கப்பலின் நங்கூரம் ஒன்று இழுத்து துண்டித்து விட்ட பிறகு இந்த அச்சம் எழுந்துள்ளது.

அதனால், அந்த தீவு முழுவதும் இணைய இணைப்புகள் வேகம் குறைந்ததோடு, அந்த தீவுகள் முழுவதும் தொலைபேசி இணைப்பு பிரச்சனைகளும் ஏற்பட்டன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :