மங்கோலிய பேரரசரின் படத்தை இழிவுப்படுத்திய சீனருக்கு ஓராண்டு சிறை

மங்கோலிய ஆட்சியாளர் செங்கிஸ்கான் புகைப்படத்தை காலால் மிதித்து இழிவுப்படுத்திய சீனர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை HULTON ARCHIVE / GETTY IMAGES
Image caption செங்கிஸ்கான்

இன வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் உறுதியான பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லுவோ என்ற குடும்ப பெயர் கொண்ட இந்த மனிதர், மங்கோலிய தலைவரின் புகைப்படத்தை மிதிப்பதை கடந்த மே மாதம் அவரே காணொளி பதிவு செய்திருந்தார் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

19 வயதான அந்த இளைஞர் இந்த காணொளி பதிவை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மங்கோலிய இன மக்களின் மத்தியில் செங்கிஸ்கான் வணக்கத்திற்குரிய ஒரு தலைவராக இன்றும் இருந்து வருகிறார்.

"இன வெறுப்புணர்வை தூண்டியதாகவும், இனப் பாகுபாட்டை வெளிக்காட்டியதாகவும் லுவோ மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்தை உறுதி செய்துள்ளது உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ஆர்டோஸ் நகர நீதிமன்றம்" என்று சீன அரசு ஊடகமான சிங்குவா தெரிவித்துள்ளது.

இந்தப் புகைப்படத்தை தானே மிதிப்பதையும், இழிவுப்படுத்துவதையும் காணொளியாக எடுத்து லுவோ பகிர்ந்துள்ளார். பின்னர், 'வீ-சேட்' எனப்படும் குறுஞ்செய்தி ஆப் மூலம் நண்பர்களுக்கு பரவலாக பகிர்ந்துள்ளார் என்றும் 'த பேப்பர்' செய்தி வெளியிட்டுள்ளது

இந்த இளைஞரின் செயல்பாடு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. அதன் பின்னர் அதிகாரிகள் இந்த காணொளியை அகற்றினர்.

பொது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக விசாரணையின்போது லுவோ மன்னிப்பு கேட்டுள்ளார்.

1206ம் ஆண்டு நிகரற்ற மங்கோலிய தலைவராக செங்கிஸ்கான் விளங்கினார். 13ம் நூற்றாண்டில் வட கிழக்கு ஆசியாவில் மிக பெரியதொரு பேரரசை அவர் நிறுவினார்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :