"8,000 தீயணைப்புத்துறை வீரர்கள், 104 மில்லியன் டாலர்கள்" : கலிஃபோர்னியாவின் மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுதான்!

கலிஃபோர்னியா காட்டுத்தீ: சாண்டா பார்பரா மக்கள் வெளியேற்றம் படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவின் சாண்டா பார்பரா பகுதியில் காட்டுத்தீ, மீண்டும் அதிகமாக பரவத்தொடங்கியதால், மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான புதிய ஆணையை கலிஃபோர்னியா அதிகாரிகள் அளித்துள்ளனர்.

'தாமஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீ, வடக்கிலிருந்து வரும் காற்றின் காரணமாக, பசிபிக் கடற்கரை பகுதியை அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கணக்கிடப்பட்டதிலேயே மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுவாகும்.

டிசம்பர் 4ஆம் தேதி முதல், இந்த காட்டுத்தீ ஆயிரம் சதுர கிலோமீட்டர் இடங்களை அழித்துள்ளது.இந்த தீயின் காரணமாக இருவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை அதிகாரியான கோரி ஐவர்சன், கடந்தவாரம் பணியின்போது இறந்தார். மேலும், வெர்ஜீனியா ரே பெசோலா என்ற பெண்மணியும் உயிரிழந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஞாயிறன்று, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்பதாலும், சாண்டா பார்பராவில் வடக்கு நோக்கி அடிக்கக்கூடிய` சண்டவுனர்` காற்றின் காரணமாகவும், தீ மேலும் பரவும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால், மாண்டெகிடோ மற்றும் சம்மர்லாண்ட் ஆகிய இடங்களில் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நெருப்பு, சான் சிட்ரோ கான்யன் பகுதியை கடந்துவிட்டது. அந்த பகுதியிலேயே நெருப்பு கட்டுக்குள் வரும் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

750 வீடுகள் உட்பட ஆயிரம் கட்டடங்களை சேதப்படுத்தியுள்ள இந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர 8,000 தீயணைப்புத்துறை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பணிகளுக்கான செலவு 104 மில்லியன் டாலர்கள் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக தண்ணீர் ஊற்றப்பட்டதில் 40 சதவிகிதம் நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்