அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்

  • 17 டிசம்பர் 2017
படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீட்டதாக கூறப்படுவது குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் தலைவர் ராபர்ட் முல்லர், அதிபர் டிரம்பின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை முறைகேடாகப்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகார மாற்றத்திற்காக டிரம்பிற்கு உதவியாக அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் குழுவுக்கு லாங்ஹோபர் எழுதிய கடிதத்தில் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆனால், முல்லரின் செய்தி தொடர்பாளர் "தேவையான குற்றவியல் நடைமுறை பின்பற்றப்பட்டதாக" கூறியுள்ளார்.

டிரம்ப்பின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்துக்கும் ரஷ்யாவுக்குமிடையே தொடர்புள்ளதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரித்து வருகிறார்.

`டிரம்ப் ஃபார் அமெரிக்கா` என்னும் குழுவுக்காகக் பணிபுரியும் லாங்ஹோபர், டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் பிரசாரம் மற்றும் 2017 ஆம் ஆண்டில் அவர் பதவியேற்ற காலம்வரையில், அவ்வமைப்பின் அலுவலகங்கள், உபகரணங்கள் மற்றும் மின்னஞ்சல் சார்ந்த சேவைகளை வழங்குவதற்காக அரசாங்க நிறுவனமான ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷனை (ஜி.எஸ்.ஏ) பயன்படுத்தினார்.

முல்லரின் விசாரணைக் குழுவிடம் கடந்த கோடைகாலத்தின்போது இதுகுறித்த ஆவணங்களை ஜிஎஸ்ஏ வழங்கியுள்ளது.

லாங்ஹோபர் நாடாளுமன்ற குழுவுக்கு எழுதிய கடிதத்தில்,"ஜி. எஸ். ஏ ஊழியர் சட்டத்திற்கு புறம்பாக டிரம்ப் ஃபார் அமெர்க்காவின் ஆவணங்களை ராபர் முல்லர் அலுவலகத்திடம் வழங்கி உள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லரின் விசாரணை குழு சில மாதங்களுக்கு முன்பே அம்மின்னஞ்சல்களை பெற்றுவிட்டது குறித்த விபரம் இந்த வாரம்தான் தெரிய வந்ததாக லாங்ஹோபர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ராபர்ட் முல்லர்

"எங்களது தொடர் குற்றவியல் விசாரணைக்காக பெற்றிருந்த மின்னஞ்சல்களை, அந்த மின்னஞ்சல் கணக்கு உரிமையாளரின் ஒப்புதல் அல்லது பொருத்தமான குற்றவியல் செயல்முறையின்படியே செய்துள்ளோம்" என்று முல்லரின் செய்தித்தொடர்பாளரான பீட்டர் கார் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னெர் உள்ளிட்ட பிரசாரத்தில் இடம்பெற்ற 12 உறுப்பினர்களிடமிருந்து மின்னஞ்சல் பதிவுகள் முல்லர் அணியால் பெறப்பட்டதாக சனிக்கிழமையன்று அமெரிக்க செய்தி இணையதளமான அக்ஸியோஸ் செய்தி வெளியிட்டது.

அதிபர் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர்கள், அடுத்தகட்ட விசாரணைகள் தொடங்குவதற்கு முன்னர், விசாரணை அதிகாரியான முல்லர் மற்றும் அவரது குழு உறுப்பினர்களை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்புக்கு சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய தூதரர்களுடன் நடத்திய சந்திப்பு பற்றி எஃப்.பி.ஐக்கு தவறான தகவல்கள் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார் டிரம்ப்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் ஃப்ளைன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :