உலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா?

செர்னோபில்

உக்ரைனின் செர்னோபில் நகரம் முன்பு பார்வையாளர்கள் செல்லக்கூடாத இடமாக இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் உள்ள புதிய அனுபவத்தைத் தேடுபவர்களையும், ஆர்வமிக்க சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளது செர்னோபில்.

இங்கு சமீபத்தில் அரசு ஒரு விடுதியை திறந்தது. 31 வருடத்திற்கு முன்பு உலகின் மோசமான அணு விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இந்த விடுதி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து இரண்டு மணிநேர பயணத்தில் 30 கிலோ மீட்டர் சுற்றளவிலான செர்னோபில் விலக்கு மண்டலத்திற்குச் செல்லலாம். இது உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று. இங்கு வரையறுக்கப்பட்ட சில காலம் மட்டுமே மக்கள் தங்கலாம்.

நேரடியாக இங்கு சென்றுவிட முடியாது.

கதிர்வீச்சு கண்காணிப்பு கருவி மற்றும் அரசின் சிறப்பு அனுமதி கடிதத்துடன் இங்கு சென்றோம்.

டிசம்பர் காலையில் கடும் பனி இருந்தபோதிலும், நாங்கள் மட்டும் இங்கு செல்லவில்லை. கைவிடப்பட்ட பகுதியை பார்வையிடுவதற்காகத் தினமும் காலை பேருந்துகளில் பார்வையாளர்கள் வருகிறார்கள். 2011-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் உக்ரைன் அரசு சுற்றுலாவை தொடங்கியதில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கைவிடப்பட்ட செர்னோபில் மற்றும் பிரிப்யாட் நகரத்தைப் பார்வையிட வருகிறார்கள்.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகரித்ததால், விலக்கு மண்டலத்தின் உள்ளே புதிய விடுதி திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் இரவுக்கு 500 ரூபாய் செலவில் தங்கலாம். 96 படுக்கை வசதி கொண்ட இந்த விடுதிக்கும் அமெரிக்கா, பிரேசில், போலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகின்றனர்.

''அதிக நேரம் வெளியில் இருப்பது நல்லதல்ல என இங்கு சுற்றுலா பயணிகள் வந்தவுடன் எச்சரிக்கப்படுவார்கள்'' என்கிறார் விடுதியின் மேலாளர் ஸ்வித்லானா க்ரிட்சென்கோ.

செர்னோபில்லை பார்வையிடுவது தனித்த அனுபவத்தைத் தரக்கூடியது. கதிர்வீச்சு பரிசோதனைக்கு பிறகே அனைவரும் செல்ல வேண்டும், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. எங்கு நடக்க வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. பொருட்களை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றுவோம் என உறுதியளிக்கும் படிவத்தில் எங்கள் வழிகாட்டி ஒலெக்ஸண்ட் கையெழுத்து வங்கிக்கொண்டார்.

சாப்பிடவோ, குடிக்கவோ, புகைபிடிக்கவோ வேண்டாம் என்றும் உலோக பொருட்களை தொட வேண்டாம் என்றும் எங்கள் வழிகாட்டி கேட்டுக்கொண்டார்.

ஆனால், இதுபோன்ற எச்சரிக்கைகள் சுற்றுலாப் பயணிகளைத் தடுக்கவில்லை.

''ஒரு முழுமையான கைவிடப்பட்ட நகரத்தைப் பற்றி என் நண்பர் கூறினார். அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை.'' என்கிறார் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள கிம்.

1986-ம் ஆண்டு செர்னோபில் அணு மின் நிலையத்தின் 4-ம் அணு உலை வெடித்ததில் இருந்து, இப்பகுதியில் நேரம் அப்படியே நின்றுவிட்டதைப் போல தோன்றுகிறது. வெடித்த அணு உலையால், கதிரியக்கம் மிக்க வேதிப் பொருள் பரவியது. பிரிப்யாட் நகரத்தில் வாழ்ந்த அனைத்து மக்கள் உட்பட, 2 லட்சம் மக்கள் உடனடியாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆளில்லாத கட்டடங்களையும், பனி படர்ந்த கார்களையும் தற்போது வரும் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம். மழலையர் பள்ளியில் துருப்பிடித்த படுக்கையின் மீது ஒரு குழந்தையின் பொம்மை கிடக்கும் படம் மறக்க முடியாதது.

விதிகளின்படி நடந்துகொண்டால் இந்த இடம் ஆபத்தானது அல்ல என உக்ரைன் அரசு கூறுகிறது.

''கடுமையான நடத்தை விதிகளைப் பின்பற்றினால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள்'' என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கான உக்ரைன் அமைச்சர் ஓஸ்டாப் செமர்ராக் பிபிசியிடம் கூறுகிறார்.

அணு விபத்து நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிய 80 வயதான இவன் செமினியூக், அப்போது முதல் இங்கு வாழ்ந்து வருகிறார். இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

Image caption இவன் செமினியூக்

''இரவு நேரத்தில் அணு உலை வெடித்தது'' என தனது சிறிய சமையலறையில் அமர்ந்துகொண்டு கூறுகிறார் இவன் செமினியூக்,

இங்கு வாழ்வது மிகவும் பாதுகாப்பானது என்கிறார் அவர்.

''சுற்றுலா பயணிகள் இங்கு வருவது மிகவும் நல்ல விஷயம் என நினைக்கிறேன். அவர்கள் பயப்படக்கூடாது'' என்கிறார் அவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்