தென்னாப்பிரிக்க ஆளும் கட்சித் தலைவராக துணை அதிபர் ராமபோசா தேர்வு

படத்தின் காப்புரிமை Reuters

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சிரில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது கட்சியின் தலைவராக அந்நாட்டின் அதிபரான ஜேக்கப் ஜுமா உள்ளார்.

தென்னாபிரிக்காவின் துணை அதிபராக உள்ள ராமபோசா, அக்கட்சியின் தேசிய மாநாட்டில் பரபரப்பாக நடந்த வாக்கெடுப்பில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அதிபர் ஜூமாவின் முன்னாள் மனைவியுமான நொக்காசசானா டிலாமினி-ஜுமாவை தோற்கடித்தார்

இதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடக்கவுள்ள தென்னாபிரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ராமபோசா முன்னிலையில் உள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவிக்கான இப்போட்டி கடுமையான அரசியல் மோதலுக்கு வழிவகுத்ததுடன், தேர்தலுக்கு முன்பே கட்சியை பிளவுபடுத்தும் என்ற அச்சங்களையும் எழுப்பியது.

டிலாமினி-ஜுமா 2,261 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் 2,440 வாக்குகளை பெற்ற ராமபோசா வெற்றி பெற்றதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் மாநாட்டுப் பிரதிநிதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

டிலாமினி-ஜுமாவின் தரப்பு மறுவாக்குப்பதிவுக்கு கோரிக்கை விடுத்ததால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்