மெக்சிகோ: சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்து - 12 பேர் பலி

மெக்சிகோ பேருந்து விபத்து

பட மூலாதாரம், EPA

தென்கிழக்கு மெக்சிகோவில் நடந்த பேருந்து விபத்தில், அதில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 12 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குவாண்டானா ரூ மாகாணத்தின், மஹாஹால் மற்றும் கேஃபிடல் ஆகிய பகுதிகளுக்கிடையே நடந்த விபத்தில், மற்ற 18 பேர் காயமைடைந்தனர்.

பேருந்தில் இருந்தவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள் என்று, அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த பேருந்தில், உள்ளூர் வாகன ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் இருந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள நான்கு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், அதில் ஐந்து பேர் சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டதாகவும் கோஸ்டா மாயா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்தில் 27 பேர் இருந்ததாகவும், இந்த விபத்து, `மனதிற்கு வருத்தம் அளிக்கும் சம்பவம்` என்று ராயல் கரீபியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களின் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் விருந்தாளிகளை கவனித்துகொள்ளவும், அவர்களின் மருத்துவ தேவைகள் மற்றும் பயணங்கள் ஆகியவற்றிற்கு எங்களால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்துவருகிறோம்" என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு குழந்தையுடன் சேர்த்து 12 பேர் இறந்துள்ளதாக கூறும், குவாண்டா ரூ மாகாண அரசு, அவர்கள் குறித்த தகவலை வெளியிடவில்லை.

இரவில் சவாலான நெடுந்தூர பயணங்களில் மக்கள் அதிகம் பயணிப்பதால், பேருந்து விபத்துகள் என்பது, மெக்சிகோவில் அதிகம் நடப்பவையே என்று கூறும், பிபிசியின் மெக்சிகோ செய்தியாளர் வில் கிராண்ட், பகலில் வெளிநாட்டு பயணிகள் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாவது என்பது அறிதானது என்று கூறுகிறார்.

விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. புகைப்படங்களை பார்க்கும்போது, வாகனம் பக்கவாட்டில் சென்றுள்ளதையும், உயிர்பிழைத்தோர் அதனருகில் அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :