ஜெருசலேம் விவகாரம்: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதியுதவி கிடையாது - மிரட்டும் டிரம்ப்

ஜெருசலேம் விவகாரம்: ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதியுதவு கிடையாது - மிரட்டும் அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவுத்தரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்தான் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

''அமெரிக்காவிடமிருந்து அவர்கள் மில்லியன் கணக்கான டாலர்கள் ஏன் பில்லியன் கணக்கான டாலர்களை எடுத்து கொண்ட பிறகும் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் '' என்று ஜெருசலேம் விவகாரத்தில் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவுத்தரும் நாடுகளை சாடி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார் டிரம்ப்.

''எங்களுக்கு எதிராக வாக்களிக்கட்டும். அதனால் எங்களுக்கு சேமிப்புதான். நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டனோனுடன் நிக்கி ஹாலே

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐநா பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறயுள்ள நிலையில் அதிபர் டிரம்பின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

ஐநாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் அமெரிக்காவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஜெருசலேம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு எதிராக எந்தெந்த நாடுகள் வாக்களித்துள்ளன என்பது குறித்த தகவலை அதிபர் டிரம்ப் தன்னிடம் கேட்டிருப்பதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே உறுப்பு நாடுகளுக்கு இன்று (வியாழக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :