தென் கொரியா: உடற்பயிற்சி கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 29 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA

தென் கொரியாவிலுள்ள ஓர் உடற்பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

தென் கொரியாவின் தென் பகுதியிலுள்ள நகரமான ஜெசெனில் எட்டு மாடிகள் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் இந்த தீ முதலில் எரியத் தொடங்கியது.

கொழுந்துவிட்டு எரிந்த தீ மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட புகைமூட்டம் பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில், அங்கிருந்த பொருட்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டாவது மாடியில் ஒரு நீராவி குளியல் அறையில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

"தீ மிகவும் விரைவாக நச்சுத்தன்மையை உருவாக்கியதால் பலரால் வெளியேற முடியவில்லை" என்று தேசிய தீயணைப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தீ பாதிப்பிலிருந்து தஞ்சமடைந்த சுமார் 20 பேர் கூரை வழியாக மீட்கப்பட்டனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சியோலுக்கு 168 கிலோமீட்டர்கள் தென் கிழக்கே ஏற்பட்ட இந்த தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 60 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டார்கள்.

அதிகளவிலான புகைமூட்டம் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடத்தில் ஒரு உடற்பயிற்சி மையம், உணவகங்கள் மற்றும் ஒரு பொது நீராவி குளியல் மையம் ஆகியவை உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்