ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்காவின் அமைதி திட்டத்தை நிராகரித்த பாலத்தீன அதிபர்

அப்பாஸ்

பட மூலாதாரம், Getty Images

ஜெருசலேம் சர்ச்சைக்கு பிறகு, இஸ்ரேலுடன் சமாதானமாக செல்ல அமெரிக்கா வரையறுக்கும் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த சில மாதங்களாக அமைதிக்கான புதிய திட்டத்தை அமெரிக்கா வரையறுத்து வருகிறது. இருப்பினும், அதன் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சர்ச்சைக்குள்ளாகிய முடிவுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்க, இஸ்ரேல் இதனை பாராட்டியது.

மஹ்மூத் அப்பாஸ் என்ன கூறுகிறார்?

இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாலத்தீன அதிபர் அப்பாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதரான ஜேர்டு குஷ்னர் உருவாக்கும் அமைதிக் கட்டமைப்பு வெளிவரும் முன்பே, அப்பாஸ் அதனை மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

"அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஒரு நேர்மையற்ற மத்தியஸ்தர் என்பது உறுதி ஆகிவிட்டது. அமெரிக்காவின் எந்த திட்டத்தையும் இனி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது" என பாரிசில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அப்பாஸ் கூறினார்.

அமெரிக்கா வரையறுக்கும் புதிய அமைதி திட்டம் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்களுக்காக இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போது சில மனக் கசப்புகள் காரணமாக தோல்வியடைந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :