ஐ.நாவின் புதிய தடை: வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90% குறையும்

வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது.

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், வட கொரியாவின் பெட்ரோல் இறக்குமதியை 90% வரை குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளது.

வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் வட கொரியா மீது அமெரிக்கா தடைகளை விதித்து வருகிறது. வட கொரியாவின் அணு திட்டத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் சொத்துக்களை முடக்கியது, அந்நாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது என அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது.

''வட கொரியா மேலும் தனது செயலைத் தொடர்ந்தால் அது மேலும் தண்டனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் என்ற தெளிவான செய்தி இந்த பொருளாதாரத் தடை மூலம் வட கொரியாவுக்கு அனுப்பட்டுள்ளது'' என அமெரிக்காவுக்கான ஐ.நாவின் தூதர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

வட கொரியாவின் ஆயுத திட்டம் தொடர்பாக, ''சர்வதேச சமூகத்தின் ஒருமனதான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது'' என சீனாவின் தூதர் வூ ஹைடாவோ கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளார். உலகம் அமைதியை விரும்புகிறது, மரணத்தை அல்ல என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

புதிய தடைகளில் என்ன உள்ளது?

  • வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு 5,00,000 பீப்பாய்களாகக் குறைப்பது, கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது.
  • இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை.
  • இந்தத் தீர்மானத்தின்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் வட கொரியர்கள் 24 மாதத்தில் நாடு திரும்ப வேண்டும். வட கொரியாவின் முக்கிய ஆதாரமாக இருக்கும் வெளிநாட்டு பணத்தை கட்டுப்படுத்தும் விதமாக இது உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :